
சென்னை, மே 25 (டிஎன்எஸ்)
மத்திய அமைச்சரவையில் தி.மு.க., பங்கேற்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதன் மூலம் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க., காங்., இடையேயான இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங் தம்முடன் தொலைபேசியில் பேசியதாகவும், தி.மு.க., அளித்த அமைச்சர்கள் பட்டியலை ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார். மேலும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தாகவும் கூறினார்.
திமுகவுக்கு 3 கேபினட் அமைச்சர் பதவிகளும் 4 இணையமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
யார் யார் அமைச்சர்களாக சேர்க்கப்படுவர் என்பது குறித்து திமுக வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளதாவது:
மதுரை மக்களவைத் தொகுதியில் இருந்து வென்ற மு.க.அழகிரி, மத்திய சென்னையில் இருந்து வென்ற தயாநிதி மாறன், நீலகிரி தொகுதியில் இருந்து வென்ற ஆ.இராசா ஆகியோர் முக்கிய (கேபினட்) அமைச்சர்களாகவும்;
தஞ்சை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.எஸ். பழனி மாணிக்கம், பெரம்பலூர் தொகுதியில் வென்ற நடிகர் நெப்போலியன், அரக்கோணம் தொகுதியில் வென்ற ஜெகத்ரட்சகன், நாமக்கல் தொகுதியில் வென்ற காந்தி செல்வன் ஆகிய நான்கு பேரும் இணை அமைச்சர்களாகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
மீண்டும் அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டி.ஆர். பாலுவும், அமைச்சராவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட கனிமொழியும் விலகிக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
மு.க. அழகிரிக்கு உரம், இராசயனத் துறைகளும், தயாநிதி மாறனுக்கு ஜவுளித் துறையும், இராசாவுக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறையும் வழங்கப்படும் என்றும்:
எஸ். எஸ். பழனி மாணிக்கத்திற்கு அவர் ஏற்கெனவே வகித்த நிதித் துறை இணை அமைச்சகப் பொறுப்பும், நெப்போலியனுக்கு தகவல் - ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் பொறுப்பும், முன்னாள் இரயில்வே இணையமைச்சர் வேலுவை வென்ற ஜெகத்ரட்சகனுக்கு அதே அமைச்சகப் பொறுப்பும், முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காந்தி செல்வனுக்கு விவசாயம் அல்லது நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் பொறுப்பும் வழங்கப்படும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இவர்கள் அனைவரும் மே 26 அன்று நடைபெறும் மத்திய அமைச்சரவையில் பதவி ஏற்கிறார்கள்.
(டிஎன்எஸ்)
May 25, 2009
* Do not use semicolon(;)