
கவியோகி வேதம்
மிகச் சிறந்த காந்தியவாதியும், ராமாநந்த சாகரின் இராமாயணத்தை மிக அற்புதமாகத் தமிழில் மொழிபெயர்த்து, தொலைக்காட்சித் தொடராக வெளிவரக் காரணமாக இருந்தவரும் குற்றாலத் தேன் குரலில் 'பாரதியே ஒரு பாரதம்', 'கண்ணாமூச்சி ஆடுகிறான் கண்ணன்' போன்ற காலத்தால் அழியாத பாடல்களை இயற்றிப் பாடியவரும் மிக நல்ல அன்பு குணம் கொண்ட கவிமாமணி தேவநாராயணன், 07.09.2009 - திங்கள் அன்று மாலை மயிலையில் உள்ள தம் வீட்டில் காலமானார். அப்போது அவருக்கு வயது 84. அவரது பிறந்த தேதி: 14.01.1925.
கனடா பல்கலைக்கழகப் பேராசிரியர் கவிமணி பசுபதி, திரட்டிக் கொடுத்துள்ள தகவலின்படி கவிஞர் தேவநாராயணன் பற்றிய சில முக்கிய தகவல்கள்:
"காரைக்குடியில் படிக்கும்போதே 1937இல் கவிஞர், சினிமாவில் நடிக்கச் சென்றார். 'கிருஷ்ணன் தூது' படத்தில் 'கர்ணன்' வேடம். அதன் பிறகு இடைவெளி. பிரபலமான 'சபாபதி'யில் நடித்தார். பின்பு சுமார் 500 படங்களுக்கு - தமிழ் மொழிமாற்ற உரையாடல் எழுதித் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு, சில படங்களில் 'குரல்' (டப்பிங்) கொடுத்துள்ளார்.
'கோதையின் கதை' தொலைக்காட்சித் தொடர் (பொதிகை), இவர் படைப்பு. 'நீலக்குயில்' திரைப்படம், ஏ.வி.எம் விநியோகித்தது. இவரே அதை முழுக் கவனமும் செலுத்தித் தயாரித்து அது பிரமாதமாக ஓடி, குடியரசுத் தலைவர் பரிசும் பெற்றது.
இவருடைய சில நூல்கள்: 'இராமாயணச் சிந்தனைகள்' என்ற பொதுத் தலைப்பில் 1.அகல்யை, 2.கைகேயியின் கண்மணி ஸ்ரீராமன், 3.அமுதன் வழங்கிய ஸ்ரீராம பாதுகை என்று மூன்று நூல்கள் (திரு.கார்த்திகேயன், LKM Publishers, திநகர், சென்னை மூலம்) வெளிவந்துள்ளன. இவை 'ஆன்மிகம்' இதழில் (மயிலையிலிருந்து இது இன்னும் வெளிவருகிறது) மாதத் தொடர்களாக வந்தன. தம் இறுதிக் காலம் (செப். 2009) வரை இதில் எழுதி வந்தார் தேவநாராயணன்.
ஒரு பிரபல (கழக) ஆண்டு விழாவில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு கவிஞரின் கவிதையைக் கேட்டுவிட்டு, அந்தக் கழகத் தலைவர் எழுந்து பலரது மனத்தை உறுத்தும் வகையில் அக் கவிதையைப் பற்றிப் பொதுவாகச் சில வார்த்தைகள் சொன்னார். பாரதியின் கருத்துக்கு அக்கவிதை நேர் விரோதம். அதனால் தலைவர் கோபமுற்று அப்படிச் சொல்ல நேர்ந்தது.
ஆனால், யாரும் இதை மறுத்துப் பேசவில்லை. துணிவும் இல்லை. ஆயின், நம் கவிமாமணி தேவநாராயணன் பாட எழுந்தவுடன், தமது பாடலைப் பாடுவதற்கு முன், கம்பீரமாக, ஆனால் எவர் மனமும் புண்படாத வகையில், அதே சமயம் மிகவும் உறுதியுடனும், தலைவரின் மொழிகளை முற்றும் நிராகரித்துப் பேசிய அழகிய துணிச்சலான பாங்கு, என்னை மிகவும் கவர்ந்தது.
தேவநாராயணனுடைய பிரபலமான ஒரு பாடலின் முதல் சில வரிகள்:
பாரதியே ஒரு பாரதம்!- அவன்
பாட்டெல்லாம் தமிழ் மாருதம்!
பாரத மண்ணின் காவிய வளம்தான்
பாரதி தோன்றக் காரணம்!
'சிந்து பைரவியில்' அவர் பல தடவை இனிமையாகப் பாடிய குரல், இன்னும் என் மனத்தில் ஒலிக்கிறது. அவர் மறையவே இல்லை என்று உள்ளுக்குள் அழுகின்ற என் தாபக் குரல் சொல்கிறது. என்னைப் போலவே இருக்கும் கவிஞர்கள் பலருக்கும்!
(டாக்டர் பசுபதி, கனடா)..........
இப்படியே இன்னுமொரு கவிமாமணி, விவேகாநந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் வ.வே.சு. சொல்கிறார் பாருங்கள்.
...“எங்கள் பாரதி கலைக் கழகத்தின் மூத்த கவிமாமணி தேவநாராயணன் திடீர் என்று 'சங்கடஹர சதுர்த்தி'யன்று மறைந்தது கவிஞர்களாகிய எங்களைச் சங்கடத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் அவர் எப்போதும் சொல்வது, 'எனக்கு எந்தச் சங்கடம் வந்தாலும் ஸ்ரீ வினாயகரும் கிருஷ்ணனும் கூடவே வந்து ஏதாவது ஒரு தீர்வு சொல்லியதை யான் என்றும் மறவேன். அதுபோல் நீங்களும் மனத்தில் உறுதிகொண்டு தெய்வத்திடம் 'சரணாகதி' என்று உங்கள் பிரச்சினைகளை விட்டுவிட்டீர்களானால் நிச்சயம் எனக்குச் செய்தது போல் உங்களுக்கும் அவன் உதவுவான்; என் அனுபவத்தில் யான் உணர்ந்ததை உங்கட்குச் சொல்கிறேன். சரியா?” என்று அன்பு ததும்பச் சொன்னதை எப்படி மறப்போம்?
அறிவு சொல்கிறது, சாந்தி அடைக! என்று; பிரிவாற்றாமையால் வருந்தும் இதயமோ அழுது, மனங்கசிந்த நீரைக் கண் 'ரப்பை'கட்கு அனுப்புகிறதே! என் செய்வோம் இனி? கழகத்தில் இனி இவர்போல் யாரே பாடவல்லார்! தேசீயமும் காந்தியமும் பாரதீயமும் இணைந்த அற்புத வரிகளை?..
(கவிமாமணி வ.வே.சு)
..இதோ இப்போது சென்னை ஆன் லைனில் மிக அற்புதமாக மகாபாரதத் தொடரைத் தொடங்கியிருக்கும் கவிஞர் ஹரி கிருஷ்ணன் சொல்கிறார்:
“......1971இல் எங்கள் நல்லூர் இலக்கிய வட்டக் கவியரங்கத் தலைமை ஏற்றவர் தேவநாராயணன். அப்போது சென்னை, செயின்ட் மேரீஸ் சாலையில் ஒரு அக்ரஹாரத்தில் குடியிருந்தார். நல்ல இனிய சுபாவம் உடையவர். மிகச் சிறிய வீட்டில் குடியிருந்த சமயத்திலும் சரி; பிறகு வசதிகள் வந்து, கார் எல்லாம் வைத்துக்கொண்ட காலத்திலும் சரி, ஒன்றேபோல், பாவனை மாறாமல் பழகிய நல்ல நண்பர்கள் வெகு சிலரில் ஒருவர் தேவநாராயணன். 'உழைக்கத் தெரிந்த என்னை உலகம் ஒருநாள் உணருமடா' என்று இனிமையாக அவர் பாடிய பாடல் இன்னும் என் காதுகளில் ரீங்கரிக்கிறது..
'நிலையம் இருப்பதெல்லாம் நீ நான் இறங்கிடத்தான்' என்று ரமணன் எழுதியது நினைவுக்கு வருகிறது. ஆம்! கவிஞர் தேவநாராயணனுடைய நிலையம் வந்துவிட்டது. விடைகொடுப்போம். நல்ல நண்பரை இழந்தோம். அவருடைய குடும்பம் அமைதியுற என் பிரார்த்தனைகள்.
(அன்புடன், ஹரிகிருஷ்ணன், இணைய மகாபாரதத் தொடர் ஆசிரியர்)
.......என்மேலும், யான் வழிபட்ட குரு ஸ்ரீ லகரி பாபாவின் மேலும் மிக அன்பு கொண்டிருந்த என் நண்பருக்கு ஒரு கவிதாஞ்சலியுடன் இதனை முடிக்கின்றேன்:
கல்லிடைக்கு 'றிச்'சித் தமிழ்ப்பேச்சும் காருண்யம்
சில்லென்று பூத்துவரும் சிந்தையும் - வெல்கின்ற
குற்றால ஆச்சர்யம் கூட்டிடும் வாய்ப்பாட்டும்
எற்றேயாம் காண்போம் இனி?
Sep 30, 2009
* Do not use semicolon(;)