
விஜய திருவேங்கடம்
சென்ற எழுபதுகளின் ஆரம்பத்தில்தான் தமிழில் புதுக்கவிதை தளிர் விடத் தொடங்கியிருந்தது. அதற்கும் முன்னே சி.சு.செல்லப்பாவின் 'எழுத்து' இதழின் பெருமுயற்சியில் சிலர் எழுதத் தொடங்கி இருந்தனர். குறிப்பாக ந.பிச்சமூர்த்தி, பல அற்புதமான கவிதைகளை எழுதியிருந்தார். 'எழுத்து'க்கு இருந்த வாசக ஆதரவு என்பது மெத்தப் படித்த, கொஞ்சம் மேல் தட்டு, கொஞ்சம் மத்தியதர வர்க்கம் என்று குறைந்த எண்ணிக்கையில் இருந்தது. மேலும் பண்டிதர்களின் எதிர்ப்பு மிகுதியாக இருந்தது. ஆக, வெகுஜன ஆதரவு இல்லாததால் பரந்துபட்ட தமிழகத்தில், அங்கும் இங்குமாக தங்கித் தேங்கி இருந்தது. அங்கேயும் பண்டிதர்களின் இலக்கண வேலிகளைத் தாண்டி வளர முடியாமல் தவித்தது.
சிற்றிதழ்கள் தாம் புதுக் கவிதையின் ஒரு பெரும் நம்பிக்கையாக இருந்தன. இவையும் படைப்பாளிகளே நடததுவனவாகவும் 'தனிச் சுற்றுக்கு' என்று லாப நோக்கம் இல்லாமல், ஏதோ நாலு பேர் படித்தால் போதும் என்ற நிலையில் இருந்தன. விளம்பரம் இல்லை; சினிமா நடிகையின் கவர்ச்சிப் படங்கள் இல்லை எனும் போது எங்கேயிருந்து சராசரி வாசகனைச் சென்றடைவது? பெட்டிக் கடைகளில் கிடைக்காத சஞ்சிகை எதுவும் வெகு ஜன ஆதரவைப் பெறுவது எப்படி? எனவே இந்தத் தளிர் எப்படித் தோன்றியது? எப்படி வளர்ந்தது?
ஒரு பக்கம் முறையாகத் தமிழ் பயின்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள்தான் முதலில் போர்க்கொடி தூக்கினர். புதுக் கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். இவர்கள் அனைவருமே இளைஞர்கள். மறு பக்கம் ஆங்கிலம் படித்த கல்லூரிப் பேராசிரியர்கள், தமிழ்ப் புதுக்கவிதையில் ஆர்வம் காட்டினர். இந்த இரண்டாவது, ஒருங்கிணைக்கப்படாத, அணியில் ஆங்கிலம் படித்த ஆனால் கல்வித் துறையில் இல்லாத மற்றவர்களும் இருந்தனர். மத்திய, மாநில அரசுப் பணி, வங்கி, மருந்தியல், வேளாண்மை என்று விதம் விதமான துறைகளைச் சேர்ந்தவர்கள் ஏதோ சொல்லி வைத்ததுபோல ஆனால் சொல்லி வைக்காமல் புதுக் கவிதை எழுதத் தொடங்கினர்.
கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆதர்சமாக விளங்கினர். முதல் ஆண்டுக் கல்லூரி மாணவனும் எழுதுவேன் என்று ஓடோடி வந்த அதிசயம் நிகழ்ந்தது. இப்படி இரண்டு முனைகளில் இயக்கமாக வளர்ந்து பயிரைப் பேணி வளர்க்கத் தொடங்கியது. ரா.ஸ்ரீ.தேசிகன் போன்ற சில ஆங்கிலப் பேராசிரியர்கள் அல்லாமல் மற்ற பெரும்பான்மையர் மீது அதுவரை இருந்த 'தமிழ் மீது அக்கறை இல்லை' என்ற பழி மெல்ல நீங்கத் தொடங்கியது. கல்லூரி ஆங்கில ஆசிரியர்களின் பிரதிநிதியாக 'பாலா' என்ற இளைஞர் வந்தார்.
1972ஆம் ஆண்டு பின் பாதியில் நான் மூன்றாண்டுக் காலப் பணிக்குப் பின் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திற்குத் திரும்பியிருந்தேன். அஸ்ஸாமில் புத்திலக்கிய முயற்சிகள் அறுபதுகளிலிருந்தே பரவலாக, ஆழமாக நடந்துகொண்டிருந்ததை நேரில் பார்த்து விட்டு வந்திருந்தேன். தமிழ்ப் பேச்சுத் துறைக்குப் பொறுப்பாய் இருந்ததால் 'சோதி மிகு நவ கவிதை' எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கம் அமைத்தேன். அப்துல் ரகுமான், மீரா, சிற்பி, புவியரசு, அபி, மு.மேத்தா ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கருத்தரங்கை மீரா அவர்கள் 'இது புதுக் கவிதையின் கல்யாண ஊர்வலம்' என்று வர்ணித்திருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் புதுக் கவிதைக்கு அகில இந்திய வானொலியின் ஆசார வாயிலைத் திறந்துவிட்டதாகவே கருதினேன். ஒலிபரப்பைக் கேட்ட பலர் பாராட்டி எழுதியிருந்தனர்.
தஞ்சையிலிருந்து 'மாலன்' தமக்கே உரிய மென்மையான முறையில் புதுக் கவிதையின் பல்வேறு வகைகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார்.' 'சேவற்கொடியோன்' தமது வெட்டரிவாள் மீசையும் வேங்கைக் குரலும் வெளிப்பட வரவேற்றிருந்தார். இன்னும் பலர். அதில் 'பாலா'வும் ஒருவர். கல்லூரி ஆங்கிலத் துறை விரிவுரையாளர். குதித்துக் கும்மாளமிட்டு எழுதியிருந்தார். கருத்தரங்கின் விளைவாக மிக விரிந்த கவிஞர் குலமே எனக்கு அறிமுகமாகியது. தமிழகமெங்கும் பரவியிருந்த புத்திலக்கிய ஆர்வலர்கள் திருக்கூட்டம் திரண்டு வந்து பாராட்டியது. பின்னர் அவரனைவரும் வானொலியில் பங்கேற்றுப் பெருமைப்படுத்தினர்.
கவிஞர் 'பாலா'வின் நட்பு ஏறக்குறைய நாற்பதாண்டுகள் நீடித்தது.
'பாலா' வானம்பாடி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். அதே ஆண்டு நமது சுதந்திர தின வெள்ளி விழா ஆண்டை ஒட்டி வானம்பாடி இதழ் (விலையிலாக் கவி மடல்!) ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது. அதில் 'பாலா' கவிதை எழுதியிருந்தார். வானம்பாடிக் கவிஞர்கள் அநேகமாக முறையாகத் தமிழ் பயின்றவர்கள். இவர்களால்தான் இலக்கண வேலிகளை விலக்கிவர முடிந்தது. மேலும் இவர்கள் இலக்கிய மேடைகளுக்கு அறிமுகமானவர்கள். வெகு ஜன அங்கீகாரம் என்பது எளிதாயிற்று. இந்த வேளையில் ஆங்கில இலக்கிய ஆசிரியர்களின் ஆதரவு சேர்ந்ததனால் புதுக் கவிதையின் தளம் விரிவடைந்தது.
'பாலா' வானொலியில் பல நிகழ்ச்சிகள் படைத்திருக்கிறார். கவிதை, உரை, விமர்சனம் என வகை வகையாக. இரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிட விரும்புகிறேன். 'பிறந்தது எப்படியோ' என்று ஒரு தொகுப்பு நிகழ்ச்சி அமைத்திருந்தேன். கலைப் படைப்பின் பிறப்பு ரகசியத்தைப் படைப்பாளிகளே தெரிவிப்பது. ஒரு பாடல் பிறந்த கதையை சேர்ந்திசைச் செம்மல் எம்.பி..சீநிவாசன் சொல்லியிருந்தார். ஓவியத்துக்கு இராஜகுமாரி முத்தையா. இவர் கடவூர் ஜமீன்தார் இல்லத்தரசி. ஓவிய நுண் கலைக் குழு உறுப்பினர். சிற்பம் பற்றி சுவாமிமலை தேவசேனாபதி ஸ்தபதி. கவிதைக்கு 'பாலா'. ஒற்றைப் பறவை பற்றிய தமது கவிதை தோன்றிய விதத்தை வர்ணித்திருந்தார். கற்பனைச் செறிவும் கரகரத்த குரலுமாக அந்த நிகழ்ச்சியை அழகுபடுத்தி இருந்தார் 'பாலா'. இரண்டாவது.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று அகில இந்திய வானொலி ஒரு தேசீயக் கவியரங்கம் ஒலிபரப்புவதுண்டு. இந்தியாவின் இருபத்திரண்டு மொழிக் கவிதைகளும் இடம் பெறும். எழுபதுகளின் மத்தியில் ஒரு வடநாட்டுக் கவிதையை 'பாலா' மொழிபெயர்த்து வழங்கினார். 'எது எனது முகவரி?' என்ற தலைப்பில் அமைந்த கவிதை. ஒருவர் தம்மைப் பார்த்துக் கேட்டுக்கொள்வதாக அமைந்த கவிதை. "இதோ எனது வீட்டு வாசற்கதவில் பெயர் பொறித்திருக்கிறதே அதுவா, இதோ தபால்காரர் எனது என்று ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போகிறாரே அந்த விலாசமா, உறவினரும் ஊர்க்காரர்களும் என்னப்பா சௌக்கியமா என்று உசாவுகின்றனரே அதுவா?" எனப் பல கேள்விகளை அடுக்கி, விடை தேட முயன்றிருப்பார். மூலக் கவிதையின் உணர்ச்சியைத் தமக்கே உரிய முறையில் 'பாலா' தமிழில் கொணர்ந்திருந்தார். அந்த ஒரு மணி நேரக் கவியரங்கத்தின் மணி மகுடமாகப் 'பாலா'வின் கவிதையே மிளிர்ந்தது. இன்னும் பல சொல்லலாம். நினைவிலிருந்து கவிதைகளைச் சொல்ல முடியவில்லை. எனவே இரண்டு சம்பவங்களைச் சொன்னேன்.
'பாலா'வின் 'புதுக் கவிதை ஒரு புதுப் பார்வை', இந்தப் புது இயக்கத்தின் திறனாய்வு நூலாயிற்று. அவரது ஆசானும் தமிழ்ப் புதுக் கவிதையின் முன்னோடிகளில் ஒருவருமாகிய 'மீரா', தமது 'அகரம்', 'அன்னம் 'வாயிலாகப் 'பாலா'வுக்கு வேண்டிய விரிந்த தளம் தந்தார். ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் தீவிர புத்திலக்கிய இயக்கத்திற்குக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அதிகாரபூர்வமான தளம் அமைத்துத் தந்தார் 'பாலா'. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பல படைப்புகளைப் பற்றிய செய்திகளைக் கொண்டு சென்றார்.
'பாலா' அதிகம் பேசமாட்டார். அதிர்ந்து பேசமாட்டார். ஆனால் ஆணித்தரமாகப் பேசுவார். தமிழ், ஆங்கில இலக்கிய நெறிகளைச் சந்திக்கவிட்ட, சம்பாஷிக்கவிட்ட, சம அந்தஸ்தில் பரிவத்தனை செய்ய வைத்த இரு மொழிப் படைப்பாளி. அவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவராக இருந்ததனால் இயன்றது ஏராளம். நட்புக்கு இலக்கணம். இது சக்கைச் சொல் அல்ல. சாரம் மிகுந்த சொல், 'பாலா' விஷயத்தில். இதை ஆயிரமாயிரம் அரங்குகளில் சொல்வேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் முனைவர் சுரேஷ்குமார் என்பார் 'பாலா'வோடு நடத்திய ஆங்கில நேர்காணலின் சில பகுதிகளை நினைவுகொள்வது பொருத்தமாய் இருக்கும் என்று கருதுகிறேன்(மொழி பெயர்ப்பு என்னுடையது).
சு: கவிதை உங்களை ஈர்ப்பது ஏன்? கற்பனை உலகில் சஞ்சரிக்கும் சாத்தியங்கள் கருதியா?
பா: கவிதையின் தளம், மற்ற படைப்பிலக்கிய வகைகளைவிட விரிந்தது என்பதே காரணம்.
சு: பார்ப்பதை, உணர்வதை உடனே சிந்தனையிலேயே கவிதையாக்கி விடுவீர்களா? அல்லது ஆற அமர யோசிக்கும் வேளையில் நினைவு கொண்டு பின்னர் எழுதுவீர்களா?
பா: எனக்குக் கவிதை என்பது ஓர் அனுபவத்தின் வெளிப்பாடு. ஒரு கணத்தின் வெப்பமும் சிந்தனையின் பராக்கிரமமும் சேர்ந்ததே கவிதை. நிச்சயமாக ஓய்வில் விளைவதல்ல.
சு: சொந்த அனுபவம் என்றால் அரிஸ்டாட்டில் சொன்ன 'இதய சுத்தீகரணம்' என்பீர்களா?
பா: அது வெறும் உணர்ச்சி வெடிப்பல்ல. நமது இந்தியக் கவிப் பரம்பரை தனனுணர்ச்ச்சிச் சொல்லிகள் அல்ல. மற்றவரோடு கூடிக் கலந்து உறவாடிப் பேசியவர்கள். உள்மன நோக்கு என்பது தமிழ்ச் செவ்வியல் கவிதைகளில் மிகக் குறைவு. எனது கவிதையில் வெளிப்படும் அனுபவம் உங்களுடைய அனுபவத்தைப் போன்றதுதான்.
சு: கவிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமா? எப்படிச் சொல்கிறார்கள் என்பது முக்கியமா?
பா: கருவா? உருவா? இது ஒரு சித்தாந்தக் கேள்வி. எந்தப் படைப்பாளனும் நல்ல கருத்தை நல்ல முறையில்தான் சொல்ல விரும்புவான். வாழ்க்கையின் இலக்கணத்தைப் பாருங்கள். கவிதையின் கருப்பொருளைப் பாருங்கள் என்பேன்.
சு: படைப்பாளியாகவும் விமர்சகராகவும் இருக்கிறீர்களே?
பா: எனது கவிதை, விமர்சனக் கவிதை!
'பலே பாண்டியா!' என்று இந்தச் சிவகங்கைச் சிங்கத்தை, மகாகவி இன்றிருந்தால் நெஞ்சாரத் தழுவிப் பாராட்டியிருப்பான்!
'கல்வியே செல்வம்' என்று நம்பிய நடுத்தர வர்க்கத்துத் தந்தை, படிப்பில் சுட்டியான 'பாலா'வை 'நீ பெயிலாகிற வரையில் படிக்க வைப்பேன்' என்று அன்று பாராட்டி மகிழ்ந்தார். 'பாலா' தோற்றதில்லை! வெற்றியைத் தவிர வேறேதும் கண்டிராத வேங்கையை இழந்துவிட்டோம்.
=================================
Oct 09, 2009
* Do not use semicolon(;)