ராம: உயர்ந்த மனிதன், என் அண்ணன் .. படங்கள் பற்றிய அனுபவத்தைச் சொல்லுங்களேன்..?
சிவ: நான் முதலிலேயே சொன்னேன்லியா. காக்கும் கரங்கள் படம் வந்து ஏவிஎம் அறிமுகத்துடன் சரி, எடுக்கப்பட்ட ஒரு நல்ல சீனும் இடம்பெறாமல் போயிடுச்சி. அது மிகப்பெரிய வருத்தம். அந்தப் படத்தினுடைய ரிலீஸ் டைம்ல என் டைரில நான் என்ன எழுதியிருக்கேன்னா... கல்யாண வீட்டுக்கு உனக்கு அழைப்பு வந்தது என்றால் சந்தோஷப்படாதே. அட்சதையெல்லாம் போட்டு போய் இலைல உட்கார்ந்த சந்தோஷப்படாதே. எல்லாம் பரிமாறினா சந்தோஷப் படாதே. ஸ்வீட்டை எடுத்து பிசைந்து வாயில் போட்டாலும் சந்தோஷப் படாதே. இப்படித் தட்டி வெளியே எடுத்து விடுவார்கள். முழுங்கினதுக்கு பிறகுதான் சந்தோஷப்படவேண்டும். அத மாதிரி வாழ்க்கைல படத்துல சான்ஸ் கிடைத்ததாக செய்தி வந்தாலோ, நடிச்சி முடிச்சாலோ, படம் ரிலீஸ் ஆனாக்கூட நீ சந்தோஷப்படாத. ஒரு வாரம் கழிச்சிகூட இந்த புட்டேஜ, லேக் சீன் (தொய்வு ஏற்படுத்தும் காட்சி) என்று கூறி வெட்டிப்போடுவார்கள். அப்படி உஷாராக இருக்கவேண்டும் என்று மிகப் பெரிய கடுமையான பாடத்தை முதல் படத்திலேயே கற்றுக் கொண்டேன்.
ஆனால் ஏவிஎம் நிறுவனம் நன்றாக வட்டியும் முதலுமாக சேர்த்து வைத்து உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நவீன அரிச்சந்திரன் கேரக்டர் அந்த படத்துல எனக்கு கொடுத்தார்கள். சிவாஜிக்குக்கூட ஒரு களங்கமான கேரக்டர். எனக்கு அவ்வளவு சுத்தமான கேரக்டர் கொடுத்தார்கள்.
இந்த கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும்போது, என் அண்ணன் என்ற ஒரு படத்தில் ஒரு வாய்ப்பு. அதாவது தெலுங்கில பூலரங்குடுன்னு பேரு. அதாவது குதிரை வண்டிக்காரன். நாகேஷ்வர்ராவும் வாணிஸ்ரீயும் நடிச்ச படம். மோகன்பாபுவும் அதுல நடிச்சிருக்காரு. நானு எம்ஜிஆர், ஜானகி அம்மா, சோ, எம்எஸ் விஸ்வநாதன் எல்லாருக்கும் விஜயா ஸ்டுடியோவில் உள்ள மினி தியேட்டர்ல எம்ஜிஆர் போட்டுக் காட்னாரு. அந்த படத்த பார்த்தவுடனே, தம்பி அந்த மோகன்பாபு கேரக்டர் ரெண்டு டூயட் சாங் வருது. ஒரு பத்து சீன் வருது. அதுல நீ நடி என்று எம்ஜிஆர் சொன்னாரு.
ஏவிஎம்-ல நான் ஒரு படம் கமிட் பண்ணியிருக்கேன். கேட்டு சொல்றேன் அப்படீன்னேன்.
ஏவிஎம்-ல ரங்கசாமி ஐயர்தான் இதப்பத்தி பேசுவாரு இது சம்பந்தமா. "என்னையா இது சிவாஜி கால்ஷீட். பிரச்சினையாகிப்போகும் அப்படியெல்லாம் செய்ய முடியாது" என்ன பிரச்சினை சார்ன்னேன். சிவாஜி தேதியெல்லாம் நிறைய இருக்குது அதுனால அது முடியாது என்றார்.
நேராக எம்ஜிஆர்-கிட்ட போனேன். அண்ணே சிவாஜி தேதி நிறைய இருக்குது. அப்படீன்னேன். எத்தனை தேதி சிவாஜி எடுத்துண்டாலும் மீதி தேதி எனக்கு கொடு நான் ஷுட்டிங் பண்ணிக்கிறேன்னாரு.
நேரா திரும்பி வந்தேன். சிவாஜி ஷுட்டிங் போக மற்ற தேதிகள்ல நான் பண்ணிக்கிறேன்றாருன்னு சொன்னேன். உடனே ஐயங்காருக்கு கோபம் வந்திடுச்சி. திடீர்னு சிவாஜி தேதியை மாத்துவாருய்யா. மாத்தினா என்னயா பண்ணுவ?
நேரா எம்ஜிஆர்-கிட்ட போனேன். இல்ல..... திடீர்னு சிவாஜி தேதிய மாத்துவாருன்னு சொன்னேன். மாத்தினா அதுக்கு தகுந்தாற்போல அட்ஜஸ்ட் பண்ணிக்கச் சொல்றேன் அப்படீன்னாரு.
நேர இங்க வந்தேன். ஐயங்காரு சொன்னாரு "இந்த ரோட்ல போற பசங்கள எல்லாம் கூப்பிட்டா இப்படித்தான்யா குழப்புவாங்க. உனக்கு தொழிலோட அருமை தெரியுதா? பார்த்து நல்ல வேஷம் கொடுக்கறோம். கால்ஷீட்படி நல்ல பண்ணி பெருசா பேர் வரும்னா... கொஞ்சம்கூட பொறுப்பு இல்லாம... இப்படி அவசரப்படுறீங்க, உங்கள் இஷ்டம்போல செய்யுங்க". அப்படீன்னாரு. மன்னிச்சுடுங்க சார். நான் தப்பு பண்ணிட்டேன். என்று சொன்னேன்.
நேரே எம்ஜிஆர்-ரிடம் போனேன். அண்ணே! மன்னிச்சுக்கங்க. அவரு ரொம்ப பீல் பண்ணிணாரு அப்படீன்னேன். எம்ஜிஆர் சொன்ன வார்த்தை, " அட பைத்தியக்காரா, தம்பீ............. நாமெல்லாம் தொழிலாளிங்கடா. நாம கூலிக்காரங்கடா. தினம் தினம் கூலிக்கு போய்தாண்டா புழைக்கணும். புரியாத பயலா இருக்கியே நீ" சரி சரி போ என்றார்.
நேரே இங்க வந்தேன். ஏதோ ஒரு சூழ்நிலையில இப்படிச் செய்துவிட்டேன். இனிமேல் படம் முடியற வரைக்கும் எந்த படத்திற்கும் போகமாட்டேன் அப்படீன்னு பிராமிஸ் பண்ணிட்டேன்.
அப்புறம் ரெண்டு மூணு நாளுல திடீர்னு ஸ்டூடியோ ஸ்டிரைக் வந்து ஸ்டூடியோவை இழுத்து மூடிட்டாங்க. திரும்ப எப்பத் திறப்பாங்கன்னு யாருக்கும் தெரியாது. எப்போ படம் எடுப்பாங்கன்னு தெரியாது.
விடிஞ்சவுடனே எம்ஜிஆர்கிட்ட ஓடிப்போய் அண்ணே அண்ணே அதுல ஒரு வேஷம் கொடுத்தீங்களே அதை செய்யலாம்னு சொல்லலாம் என்று காலை பேப்பரை புரட்டினா, " வீனஸ் பிக்சர்ஸ் என் அண்ணன். எம்ஜிஆர், ஜெயலலிதா, முத்துராமன் ஆகியோர் நடிக்கும் படம்." கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு பிறகு ஸ்டூடியோ திறந்தபோது, ஸ்டூடியோ திறந்தபோது ஸ்டூடியோ அதிபர்களைவிட, எனக்குத்தான் மகிழ்ச்சி.
(எம்ஜிஆர் பற்றி உங்களது எண்ணங்கள்...., ஜெமினி கணேசன் உங்களுக்கு கைரேகை பார்த்து வழங்கிய அறிவுரை.... , அப்போலோ மருத்துவமனையில் இயக்குநர் ஸ்ரீதரிடம் டயலாக் ஒப்பித்த அனுபவம்..., கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, கமல், ரஜினி ஆகியோருடனான சுவையான எண்ணங்கள், சிவாஜி பெண் பார்த்த சம்பவம், வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள், இளமையின் ரகசியம், இலக்கிய ஈடுபாடு, நீங்கள் வரைந்து உங்களுக்கு பிடித்த ஓவியங்கள், குதிரை சவாரி அனுபவம் இப்படி............... எண்ணற்ற கேள்விகளுக்கான சுவையான பதில்கள் அடுத்த பகுதியில்..........)
தொடரும்......
|