| |
|
இந்த வார பிரபலம்.....6
|
ராம: கண்ணதாசன் பாடல்கள்ல ............?!
சிவ: நிறைய பாடல்கள் சொல்லலாம்., ஆனா, புராணப் பாடல்கள்லதான் உருகி உருகி சேர்ந்தான். சிவனை பத்திச் சொல்லும்போது ரொம்ப சிம்பிளா சொல்லுவான், "ஒன்றானவன், உருவில் இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன். நன்றான வேதத்தில் நான்கானவன். நமசிவாய என ஐந்தானவன். இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன், இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன், தித்திக்கும் பொருள்களில் எட்டானவன், தித்திக்கும் நவரச வித்தானவன், பத்தானவன் நெஞ்சில் பற்றானவன், பன்னிருகை வேலவனை பெற்றான் அவன். முற்றாதவன் மூல முதலானவன், முன்னைக்கும், பின்னைக்கும் நடுவானவன்" என்று சிவனைப்பற்றி சொல்றார்.
அதைவிட சிவனை பற்றி எனக்காக காரைக்கால் அம்மையார் படத்துல ஒரு பாடல். அது வந்து என்னுடைய கணக்குல ஒரு மாஸ்டர் பீஸ். கே பி சுந்தராம்பாள் என்ற அசாத்தியமான ஒரு அம்மையார் காரைக்கால் அம்மையாராக நடிச்சிருக்காங்க. அந்த அம்மா பாடுவதற்கு, சிவன்-பார்வதி வேடத்தில் நானும், ஸ்ரீவித்யாவும் அந்த பாட்டுக்கு ஆடினோம். கண்ணதாசன் பாட்டு எழுதினார்.
"தக தக தக, தக தக என ஆடவா - சிவ
சக்திசக்தி சக்தியோடு ஆடவா............. என்று துவங்கி, உலகத்து நிதியே சமயத்து பொருளே இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே ஆடவா நடமாடவா" என்று முடியும். இது ஒரு மாஸ்டர் பீஸ்.
ராம: வைரமுத்து ................!
சிவ: வைரமுத்து வரிகள்ல...... எனக்கு ரொம்ப பிடிச்சது....அவர் காதல் மன்னராச்சே..... ஒரு பாட்டுல "உன்னோடு நான் இருந்த ஒவ்வோர் மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காத கண்மணியே! பார்வையிலே சில நிமிடம். பயத்தோடு சில நிமிடம். கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம். 90 நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான், 800 ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி. கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும், கடைசியிலே அழுத கண்ணீர் கையில் இன்னும் முட்டுதடி." காதலிய 40 வருஷத்துக்கு பிறகு சந்திக்கும்போது, பழைய ஞாபகத்துல பாடறதா இந்த பாட்டை எழுதியிருப்பாரு.
ராம: சென்னையில அரசு ஓவியக் கலைக் கல்லூரியில உங்க அனுபவத்தை பத்தி சொல்லுங்களேன்.
சிவ: அதாவது சார் அது ஒரு சாந்தினிகேதனம் மாதிரி. நான் சாந்தினிகேதன் போனதில்ல.
1959-லருந்து 65-வரைக்கும் நான் படிச்சேன். அதாவது பரிபூரண சுதந்திரம் கொடுத் ஒரு கல்லூரி. ஆண்-பெண் என்ற பேதம் இல்லாமல் எல்லோரும் ஒன்றாக பழகுகின்ற ஆசிரியர் என்ற தனி ஸ்பெஷாலிட்டியெல்லாம் கிடையாத ஆசிரியர் மாணவர் சகஜமாக பழகக்கூடிய ஒரு கல்லூரி அது.
வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷமாக, சுதந்திரமாக வாழ்ந்த வசந்தகாலம் என்றால், அது என்னுடைய ஓவியக் கல்லூரி நாட்கள்தான். அந்த ஆறாண்டுகளுக்கு எனக்கு ஆன மொத்த செலவு, ஏழாயிரத்து 140 ரூபாதான் ஆச்சி. அதுவேற விஷயம். என்னுடைய சித்தாந்தமே வந்து, எவன் ஒருவனுக்கு தேவை ரொம்பவும் குறைவோ, அவன்தான் மிகப் பெரிய செல்வந்தன் என்பவன். ரெண்டு சட்டபேண்ட்டு. ஒரு சைக்கிள். இத வச்சிக்கிட்டு ஆறு ஆண்டு ரொம்ப பிரமாதமா வாழ்ந்தேன். அந்த சந்தோஷம் இப்ப இருக்கா..ன்னு கேட்டா சொல்ல முடியாது. அதே மாதிரி இன்னொரு நம்பிக்கை என்னன்னா..... "கொஞ்சம் பணம் உன்னை காப்பாற்றும். நிறைய பணத்தை நீ காப்பாற்ற முடியாது" தங்ககட்டிகளாக வச்சிருந்தாலும் கடத்திட்டு போயிடுவான். இதெல்லாம் மனுஷன் நிம்மதியா வாழ்வதற்கான சித்தாந்தங்கள்.
ராம: அழும் குழந்தை, பூக்கூடையுடன் ஒரு பெண்.... ஆகிய உங்கள் ஓவியங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தவை என்று கூறியுள்ளீர்களே....!
சிவ: அதாவதுங்க குழந்தைகளே ஒரு தெய்வாம்சம்னு சொல்றோம். அழகான குழந்தைன்னா இன்னும் விசேஷமா இருக்கும். பூக்கூடை தூக்கிக்கிட்டு இருக்கு ஒரு சிறுமி எனும்போது அப்படியே கண்ணில் ஒத்திக் கொள்ளனும்போல இருக்கும். ஓவியங்கள்ல நாம் வயசானவங்கள வரையறோம். உழைப்பாளர் சிலையை வரையறோம். அதெல்லாம் வேற விஷயங்கள். ஆனா பார்த்தவுடனே ஒரு குதூகலம், புத்துணர்வு ஏற்படுத்தறது குழந்தையுடைய சிரிப்பு, ஒரு பாவமும் அறியாத பார்வை, அதனுடைய அழுகை இதெல்லாம் நமக்கு ரொம்பப் பிடிக்கும்.
ராம: இதைத் தவிர உங்களுக்கு ரொம்ப பிடித்த ஓவியங்கள்...?
சிவ: நிறைய இருக்கு. மகாத்மா காந்தி ஓவியம். அதை இன்னிக்கு வரைக்கும் அத ஒண்ணும் அசைக்க முடியாது. நான் வரைஞ்ச ஓவியங்கள்ல இது மாஸ்டர் பீஸ். இத உங்களுக்கு ஒண்ணு தர்றேன். அதேபோல திருவண்ணாமலை கோயில், தஞ்சாவூர் கோயில் இதெல்லாம் மிகச்சிறந்த ஓவியங்கள்.
ராம: உங்க குதிரை சவாரி அனுபவம்........
சிவ: ராஜராஜ சோழனுக்கு ராஜேந்திர சோழன் வேஷமுங்க. எனக்கு வந்து குதிரை பயிற்சி இல்ல. குதிரை வந்து எனக்கு தலைக்கு மேல ஒரு அரை அடி உயரம் இருக்கும். ராஜா டிரஸ்ஸெல்லாம் மாட்டிவிட்டு இடுப்புல பெல்ட் எல்லாம் போட்டு, அந்த செருப்ப போட்டுகிட்டு குதிரை மேல ஏறவே முடியல. எப்படியோ ஏறி உட்கார்ந்துகிட்டு, கடிவாளத்தை சேர்த்து பிடிச்சிக்க சொன்னாங்க. பிடிச்சிண்டிருக்கும்போது.............. பிரம்மாண்டமான குதிரை. நம்ம போராத நேரம் அந்த குதிரைக்கு மூக்கு ஒழுகிச்சு போல. ரெண்டு தும்மல் போட்டுச்சி. அந்த குதிரை தும்மும்போது நாலு காலும் அகன்று, முதுகு வில்போல் வளைந்து குதிரை என்னை கீழே சரித்துபோட்டு விட்டது.
ஏம்பா இந்த மாதிரி குதிரையை கொண்டாந்தேன்னு கேட்டதற்கு, நாகேஷ்வர் ராவ், ராமாராவ் போன்ற பெரிய பெரிய நடிகர்கள்ளாம் சவாரி செஞ்ச குதிரை இது அப்படீன்னு பதில் சொன்னான்.
இப்பத்தாண்டா மொடா புழுகு புழுகுறான்னு தெரிஞ்சிக்கிட்டேன். நாகேஷ்வரராவும், ராமாராவும் 1951-53 ல குதிரை சவாரி பண்ணியிருப்பாங்க. நான் சொல்றது 1976, 77. 25 வருஷத்துக்கு அப்புறம் குதிரை இருக்குமான்னு நினைச்சி பாருங்க. அவங்க ஓட்டின அதே குதிரை சார் அப்படீன்னு அவன் சொன்னபோது, இவண் பொய் பேசறான்னு தெரிஞ்சு போச்சு. சரி சொல்லிட்டு போறான்னு குதிரை மேல ஏறி உக்காந்தா......செயின்ட் பீடிலிருந்து மகாத்மா காந்தி சிலை வரைக்கும் குதிரை நகர மாட்டேங்குது. அதாவது ஒண்ணாங்கிளாஸ் சேர்ந்த குழந்தைங்க முதல்நாள் ஸ்கூலுக்கு போயிட்டு, ரெண்டாம் நாள் பள்ளிக்கூடம் போகவே மாட்டேன்னு அடம் பிடிக்கற மாதிரி, குதிரை என்ன இழுப்பு இழுத்தாலும் காந்தி சிலை வரைக்கும் போகவே மாட்டேங்குது. நான் மேலயே உக்கார்ந்துட்டு இருக்கேன். காந்தி சிலை வரைக்கும் எப்படியோ இழுத்துட்டு போய் நிப்பாட்டினா.... கடகடகடவென்று அசுர வேகத்தில செயின்ட் பீட் நோக்கி பறக்குது. தெக்கு நோக்கி வேகமா போகுது. வடக்க வரமாட்டேங்குது. என்னயா விஷயம்னு கேட்டா, அது ஒண்ணும் இல்லீங்க. தெக்குலதான் அது வீடு இருக்குது. எந்த குதிரையும் வீட்டுக்கு போகணும்ணு ஆசைப்படும்ல அப்படீன்னான். இப்படி ஒரு குதிரை.
அதுக்கப்புறம் ஒரு குதிரை கொண்டு வந்தான். அது ஏறவே விட மாட்டேங்குது. பின் கால் வழியா ஏறுன்னா உதைச்சிடும். அதனால குதிரைக்கு எதிரா நின்னுட்டு மேல ஏறி காலை தூக்கிப் போடணும். கிட்டப் போகப்போக குதிரை விலகிப் போயிட்டே இருக்கு. நீங்க கருப்பு துணி போட்டுட்டு வர்றீங்க. வெள்ள பேண்ட்டு போட்டுட்டு வாங்க அப்படீன்னான். எவனோ கெடுத்துபுட்டான் குதிரைய அப்படீன்னு ஒரு கருப்பு துணியை கொண்டு குதிரை கண்ணை கட்டி பிறகு என்னை ஏற்றிவிட்டான். மூணாவது நாள் ரத்தின மாலான்னு ஒரு குதிரை.
ஹார்ஸ் பவர் - குதிரை சக்தி என்றுதான் சொன்னான். மாட்டு சக்தி, யானை சக்தின்னு எல்லாம் சொல்லல. அந்த ஹார்ஸ் பவர் என்னங்கறத இந்த குதிரயிலதான் நான் கத்துக்கிட்டேன். காந்தி சிலையிலருந்து புறப்பட்டா, அந்த பீச் மண்ணுல படுவேகமா நாலு கிலோ மீட்டர் ஓடும்போது...... அது ஓடற வேகத்துல என் கண்ணுல அப்படி தண்ணி பொங்கி...... அவ்வளவு அற்புதமான குதிரை. அது 1972- ல மறக்க முடியாத அனுபவம்.
ராம: நாம எல்லோருமே பலவிதமான கனவுகள பார்த்திட்டிருக்கோம். கனவு மெய்ப்பட என்ன செய்யவேண்டும்..?
சிவ: எல்லா கனவுமே நமக்கு மெய்ப்படவேண்டிய அவசியம் இல்ல சார். கனவுல தப்பான கனவு வரும். செத்துபோற கனவு வரும். அதெல்லாம் மெய்ப்படவேண்டிய கனவு இல்ல. ஒரு பள்ளிக்கூடம். பக்கத்துல விளையாட்டு மைதானம். நான் பறவை மாதிரி அதுக்கு மேல பறந்துட்டே இருக்கேன். அங்க ஒரு குளம், வாய்க்கால், மலை இதுக்கு மேல எல்லாம் பறந்து போற மாதிரி எனக்கு அடிக்கடி கனவு வரும். அந்த கனவு எல்லாம் மெய்ப்படனும்னா ஹெலிகாப்டர்ல ஏறித்தான் போகனும். எப்போதுமே ஆரோக்கியமான கனவாகவோ, நம்பிக்கையான கனவாகவோ வராது. நாம ரொம்ப துன்பமா, சோகமா இருந்தோம்னா சோகமாக கனவுதான் வரும். நிறைவேறாத ஆசைகளோட நாம தூங்கினோம்னா அந்த ஏக்கங்கள்தான் கனவுல வரும். கனவுகளுக்கு நாம் அவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்ல.
ராம: எவ்வளவோ பேருடன், பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எதேனும் சந்தரப்பத்தில் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லையே என்று ஏங்கியது உண்டா..?
சிவ: பள்ளியில் எஸ்எஸ்எல்சி முடிச்சி வெளிய வரும்போது, ஆறாம் வகுப்பில் இருந்து எல்லா மாணவர்களும், ஆசிரியர்களும் குரூப் போட்டோ எடுப்பாங்க. அன்னைக்கு எங்க வீட்ல ஒரு பிரச்சினை. மாச பீஸ் வந்து அஞ்சு ரூபா. தேர்வு எழுதுவதற்கு 11 ரூபாய் ஐம்பது பைசா. ரெண்டும் கேட்டாங்க. அப்ப சோளம் அறுவடை பண்ற நேரம். கூலிக்காரங்களுக்கு கூலிவேற கொடுக்கணும். முதல் நாள் அஞ்சு ரூவா அம்மா கொடுத்திட்டாங்க. மூணாவது நாள் 11 ரூபா ஐம்பது பைசா குடுத்திட்டாங்க. அதுக்கு மேல ஒரு குரூப் போட்டோ , ஸ்வீட் காரம் காப்பிக்கு அஞ்சு ரூபா வேணும்னு கேட்டபோது, அம்மா சொன்னாங்க, கூலி வேற கொடுக்கணும்டா. போட்டோ இல்லன்ணு அழறதா அப்படீன்னாங்க. அந்த குரூப் போட்டோ ல நான் நின்னு எடுக்க முடியாம போயிடுச்சி. இந்த 40, 45 வருஷத்தில பாத்தீங்கன்னா, வீடீயோ பதிவு, சினிமா பதிவு அப்படீன்னு பாத்தீங்கன்னா ஒரு நாலு கோடி பிரேம்லயாவது என்னுடைய முகம் பதிவாகியிருக்கும். ஆனால் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும்..... அந்த குரூப் போட்டோ கிடைக்காம போயிடுச்சி.
ஆனால் அதுக்கு ஆறுதலா ஒண்ணு போன வருஷம் நடந்துச்சி. நான் படிச்ச பள்ளியினுடைய பொன்விழா ஆண்டு அது. என்னோட படிச்ச ஒரு பத்து பேர் இருந்தாங்க. நாலு கேர்ள்ஸ் இருந்தாங்க. நாலஞ்சு வாத்தியார்கள் இருந்தாங்க. எல்லோருமா சேர்த்து ஒரு குரூப் போட்டோ எடுத்துகிட்டோ ம். மனசுக்கு ஒரு சந்தோஷம்.
Part I  Part II  Part III  Part IV  Part V
|
|
|
|
|
|
|
|
|
|
|
 |
|
|
 |
|
Shopping Chennaionline
|
|
|
|
|
|