‘விருத்தாசலம்’ திரைப்பட விமர்சனம்

April 06, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.06 (டி.என்.எஸ்) சிறு வயதில் இருந்தே அத்தை பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வளரும் ஹீரோ விருதகிரி, தனது அத்தை மகளுக்காக ஒருவரது கையை வெட்டி விட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு சென்றுவிடுகிறார்.


அவரது அத்தை பெண்ணும் வேறு ஊருக்கு சென்றுவிடுகிறார்.

சிறையில் இருந்து வெளியாகும் விருதகிரியை கொலை செய்தே தீருவேன் என்ற எண்ணத்தில் இருக்கிறார் அவரால் கையை இழந்த சம்பத்ராஜ். விருதகிரியோ தனது அத்தை மகள் எங்கிருக்கிறார் என்று தெரியாமல், தான் உண்டு தனது வேலை உண்டு இருப்பதோடு, வேறு பெண்களையும் ஏறெடுத்து பார்க்காமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில், அந்த ஊருக்கு வரும் பள்ளி ஆசிரியை விருதகிரியை காதலிக்க, ஊர் தலைவரின் பெண்ணும் விருதகிரியை ஒரு தலையாக காதலிக்க, டீச்சரின் தோழியும் விருதகிரிக்கு அறிமுகமாக, எப்போதும் அத்தை மகள் நினைவாகவே இருக்கும் விருதகிரி இந்த பெண்களில் யாருடைய காதலை ஏற்றுக்கொள்வார், சம்பத்ராஜ் விருதகிரியை வஞ்சம் தீர்ப்பாரா, என்ற நிலையில் படம் பயணித்துக் கொண்டிருக்க, திடீர் திருப்புமுனையால் விருதகிரியின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது, அது என்ன, அதன் பிறகு என்ன நடக்கிறது, என்பது தான் ‘விருத்தாசலம்’ படத்தின் கதை.

சீனிவாசன் கலரா இருக்கிற பவர் ஸ்டார் என்றால், இந்த படத்தோட ஹீரோ விருதகிரியை கருப்பு பவர் ஸ்டார் என்று சொல்லலாம். நடனம், டயலாக் டெலிவரி போன்றவற்றில் பவர் ஸ்டாரை பிரதிபலித்தாலும், ஆக்‌ஷன், செண்டிமெண்ட் காட்சிகளில் ராஜ்கிரணையும் லைட்டாக டச் பண்ணிவிட்டு போகிறார். எப்படியோ அவரது நடிப்பு ஆர்வத்தை வரவேற்றாலும், முறையான பயிற்சி இல்லாமல் இப்படி படம் பார்ப்பவர்களை பாதிப்புக்குள்ளாக்கும் விரதகிரி தனது அடுத்த படத்திலாவது இப்படி செய்யாமல் இருக்க வேண்டும்.

ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா என்று படத்தில் மூன்று ஹீரோயின்கள். மூவரும் வெவ்வேறு ரகமாக இருக்கிறார்கள். சமீரா மற்றும் ஒரு பாடலில் சற்று கவர்ச்சியாக நடித்து, நம்மை “பார்ரா...” என்று ஆச்சரியப்பட வைக்கிறார்.

சம்பத்ராஜுக்கு மெயின் வில்லன் வேடம். கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். அவரது அண்ணனாக நடித்தவரின் நடிப்பு இயல்பு.

சிவ நேசனின் ஒளிப்பதிவும், ஸ்ரீராமின் இசையும் படத்தின் கதையைப் போலவே நம்மை பின் நோக்கி அழைத்துச் செல்கிறது.

தமிழ் சினிமா தொடங்கிய போது உருவான கதையம்சமான, அத்தை பெண் ஹீரோவுக்கு காதல்,  என்பதை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கும் ரத்தன் கணபதி, தான் சொல்லவந்ததை நேர்த்தியாக சொல்லியிருப்பதோடு படத்தில் ஒரு டிவிஸ்ட்டை அழகாக கையாண்டிருக்கிறார். என்ன இருந்து என்ன, படத்தின் அடித்தளமே அதர பழசாக இருக்கிறதே.

ஜெ.சுகுமார்