.

‘வனமகன்’ திரைப்பட விமர்சனம்

June 26, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஜூன் 26 (டி.என்.எஸ்) இயக்குநர் விஜய் - ஜெயம் ரவி கூட்டணியின் வித்தியாசமான முயற்சியாக வெளியாகியிருக்கும் படம் ‘வனமகன்’.


அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருக்கும் ஒரு தீவில் தொழிற்சாலை ஒன்றை கட்டும் முயற்சியில் நிறுவனம் ஒன்று ஈடுபட, அதற்கு இடையூராக அப்பகுதியில் இருக்கும் காட்டுவாசி இனம் இருப்பதால், அவர்களை அரசு உதவியோடு அப்புறப்படுத்த அந்த நிறுவனம் முயல்கிறது. அவர்களில் ஒருவரான ஹீரோ ஜெயம் ரவி, அவர்களிடம் இருந்து தப்பித்து செல்லும் போது, தனது நண்பர்களோடு சுற்றுலா வரும் ஹீரோயின் சாயீஷா காரில் அடிபட்டு விழுந்துவிடுகிறார்.

அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் சாயீஷா, காயம் பெரிதாக இருப்பதால், ஜெயம் ரவியை சென்னைக்கு அழைத்து வந்துவிடுகிறார். தலையில் அடிபட்ட ஜெயம் ரவிக்கு தனது பழைய நினைவுகள் மறந்துவிட, நாகரீக மனிதர்களுடன் பழகாத அவரது நடவடிக்கைகள் வினோதமாக இருக்கிறது. ஆனால், தான் விபத்தில் சிக்கிய போது தன்னை காப்பாற்றும் சாயீஷா என்ன சொன்னாலும் கேட்பவர், அவருக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறார்.

இதற்கிடையே சென்னைக்கு வரும் அந்தமான் போலீஸ், ஜெயம் ரவியை கைது செய்து அழைத்துச் செல்ல, அவரைத் தேடி  சாயீஷா அந்தமான் செல்கிறார். அந்தமான் சென்றதுடம் ஜெயம் ரவிக்கு தனது பழைய நினைவுகள் திரும்ப, தனது இனத்தை காப்பாற்றுவதற்காக அவர்களை தேடி செல்கிறார். அவருடன் ஹீரோயினும் செல்ல, ஜெயம் ரவி தான் சாயீஷாவை கடத்தியதாக கூறி பிரகாஷ்ராஜ், அவரை பிடிக்க போலீஸ் படையை காட்டுக்குள் அனுப்புகிறார்.

ஜெயம் ரவியை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் அவரை போலீசார் தேடிக் கொண்டிருக்க, அவரோ தனது இன மக்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தேடிக்கொண்டிருக்க, ஹீரோயினோ ஜெயம் ரவி மீது காதல் கொண்டு, அவரை மீண்டும் சென்னைக்கு அழைத்துச் செல்ல நினைக்க, இறுதியில் நடந்தது என்ன என்பது தான் க்ளைமாக்ஸ்.

ஒரு வெற்றி பெற்றுவிட்டாலே படத்துக்கு படம் பன்ஜ் வசனம் பேச நினைக்கும் ஹீரோக்கள் மத்தியில், வசனமே இல்லாமல் இப்படத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு சபாஷ் சொல்லலாம். வசனமே இல்லை என்றாலும், தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தன்மையையும், எமோஷனல் காட்சிகளையும் தனது உணர்வால் வெளிப்படுத்திய விதம் சிறப்பு.

அறிமுக நாயகி சாயீஷா நடிப்பால் நம்மை பெரிதாக கவரவில்லை என்றாலும், அழகாலும், நடனத்தாலும் கவர்ந்துவிடுகிறார். தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ், சண்முகநாதன் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

இயக்குநர் விஜயின் வித்தியாசமான முயற்சியை பாராட்டினாலும், அதை படமாக்கியதில் வியப்பூட்டும் வகையில் எந்த காட்சிகளும் அமையாதது படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. அதேபோல், படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளிலும் தரம் இல்லை. குறிப்பாக புலி ஒன்று ஜெயம் ரவியை போலீசாரிடம் இருந்து காப்பாற்றுவது போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சி குழந்தைத்தனமாக உள்ளது.

இருப்பினும், ஒளிப்பதிவாளர் திருவின் பணியும், ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும், அவ்வபோது சரியும் படத்தை தூக்கி நிறுத்திவிடுகிறது. திரைக்கதை அமைப்பதிலும், காட்சிப்படுத்ததிலும் சில இடங்களில் இயக்குநர் விஜய் சறுக்கியிருந்தாலும், அவரது புதிய முயற்சியை வரவேற்றாக வேண்டும்.

படத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், பல நல்ல விஷயங்களை வித்தியாசமான கதைக்களத்தில், கமர்ஷியலாக சொல்லப்பட்டிருக்கும் இந்த ‘வனமகன்’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

ஜெ.சுகுமார்