‘லென்ஸ்’ திரைப்பட விமர்சனம்

May 10, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 10 (டி.என்.எஸ்) இண்டர்நெட்டில் கிளுகிளுப்பான வீடியோக்களை பார்க்கும் ஆசாமிகள் வெளுவெளுத்து போகும் அளவுக்கு மிரட்டியிருக்கும் இந்த ‘லென்ஸ்’, தங்களது வீடாக இருந்தாலும் அந்தரங்கமான விஷயங்களை அந்தரங்கமாகவே செய்ய வேண்டும், என்ற விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


மற்றவர்களின் அந்தரங்கத்தை திருட்டுத்தனமாக படம் பிடித்து அதை இண்டர்நெட்டில் ஏற்றும் சில விசமிகளால், பலரது வாழ்க்கை எப்படி சீரழிந்து போகிறது, என்பதை விளாவரியாக விவரிப்பது தான் லென்ஸ் படத்தின் கதை. 

படத்தின் ஓபனிங் காட்சியில், கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து சின்சியராக ஏதோ செய்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். அறையின் வெளியே இருந்து அவரது மனைவி, ”என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என்று கோபமாக கேட்க, அமெரிக்க கிளைண்ட் நைட்லதான் ஒர்க் பண்ண முடியும், நீ போய் தூங்கு, என்று பதில் அளிப்பவர், முகத்தில் ஒரு முகமுடியை மாட்டிக் கொண்டு, சில நிமிடங்களில் தனது உடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக நிற்க, அவருடன் வீடியோ சாட் செய்யும் பெண்ணும், அவரைப் போலவே முகமுடியுடன் நிர்வாணக் காட்சியளிக்க, திரையரங்கமே சற்று அதிர்ந்து தான் போகிறது.

அடுத்தக் காட்சியில், காலை லேட்டாக எழுந்திருக்கும் அந்த நபர், டீ குடித்து விட்டு, மீண்டும் லேப்டாப்பை எடுத்து சாட் செய்ய, அதில் ஒரு பெண் பெயர் தென்படுகிறது. உடனே அவருடன் சாட் செய்ய தொடங்குபவர், சில நிமிடங்களில் அவருடன் வீடியோ சாட் செய்ய, அது பெண் அல்ல ஒரு ஆண் என்பது தெரிய வருகிறது. எதிர்முனையில் இருக்கும் அந்த ஆண், நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன், அதை நீ பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். பதறிப்போகும் மாஸ்க் பார்ட்டி, அதெல்லாம் முடியாது வேலை இருக்கிறது, என்று கூறி இணைப்பை துண்டிக்க முயலும் போது, தற்கொலை பார்ட்டி, மாஸ்க் பார்ட்டியின் நிர்வான சாட் வீடியோவை காட்டி, இப்ப பாக்கிறியா இல்ல இந்த வீடியோவ நெட்டுல ஏத்துட்டா? என்று மிரட்ட, பதறிப்போகும் மாஸ்க் பார்ட்டி, நீ யார்? எப்படி இந்த வீடியோ கிடச்சது? அந்த பெண்ணுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்? என்று பல கேள்விகளை கேட்க, அத்தனைக்கும் பதில் சொல்கிறேன், அதற்கு முன்பாக நான் தற்கொலை செய்துகொள்வதை பார்க்கிறேன், என்று சொல், என்று அந்த நபர் சொல்ல, நிர்வாண பார்ட்டியின் கேள்விகளுக்கான விடை என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு ரசீகர்கள் சீட் நுனியில் உட்கார, தற்கொலை பார்ட்டியின் பின்னணி என்னவாக இருக்கும், அவன் நல்லவனா கெட்டவா? என்ற கேள்வியோடு படம் படு பரபரப்பாக நகர்கிறது.

படத்தின் முதல் பாதி முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து ஒருவர் பதற்றதுடன் பேச, மறுமுனையில் இருப்பவர் ரொம்ப கூலாக அதே சமயம், தனது பேச்சிலும், பார்வையிலும் ஆயிரம் விஷயங்களை சொல்ல தயாராக இருப்பது போலவே பேசி வருகிறார். இந்த இருவரது சாட்டிங் மட்டுமே முதல்பாதி படமாக இருந்தாலும், அந்த உணர்வே நமக்கு ஏற்படாத வகையில் படம் படு சுவாரஸ்யமாக நகர்கிறது.

நிர்வாண ஆசாமி வேடத்தில் இப்படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் நடித்திருக்கிறார். கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து அவர் செய்யும் இன்ப சாட்டிங்காகட்டும், சாட்டிங்கில் வசமாக சிக்கிக் கொண்டு திணறும் காட்சிகளாகட்டும் தனது எக்ஸ்பிரன்ஸ் மூலம், ஏதோ உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவத்தில் சிக்கிக் கொண்டது போலவே நடிக்க, அவரை தூக்கி சாப்பிடும் அளவுக்கு மவுனமாகவே மிரட்டுகிறார் ஆனந்த்சாமி.

தற்கொலை ஆசாமி வேடத்தில் மொட்டை தலையுடன் வரும் ஆனந்த்சாமி, சைலண்டாக வசனம் பேசினாலும், தனது பார்வையினாலேயே நம்மை பயமுறுத்துவதோடு,  காட்சிக்கு ஏற்ப தனது பாவனையை மாற்றிக் காட்டி, உட்கார்ந்த இடத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்.

ஜெயபிராகாஷ் - ஆனந்தசாமி இந்த இரண்டு கதாபாத்திரங்களும், உட்கார்ந்த இடத்திலேயே முழு படத்தினையும் சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்ல, இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் சில நடிகர்களும் தங்களது நடிப்பால் மனதில் நின்றுவிடுகிறார்கள். குறிப்பாக ஏஞ்சல் என்ற வேடத்தில் நடித்திருக்கும் வாய்பேச முடியாத அந்த பெண்ணின், நடிப்பும் தற்கொலையும், தப்பி தவறி கூட அப்படிப்பட்ட வீடியோக்களை பார்த்துவிடக் கூடாது, என்று நினைக்க தோன்றுகிறது.

திரைக்கதைக்கு நடிகர்கள் உயிர்கொடுத்திருக்கிறார்கள் என்றால், காட்சிகளுக்கு எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் இசையும் உயிர்க்கொடுத்திருக்கிறது. நிர்வாணம் என்ற வார்த்தை கூட படிப்பதற்கு ஆபசமாக இருக்கலாம், ஆனால் தனது ஒளிப்பதிவு மூலம் அந்த காட்சியை நமக்கு அப்படிப்பட்ட எண்ணம் தோன்றாத வகையில் ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கதிர். இயக்குநர் சொல்ல வந்ததை பொட்டில் அறைந்த மாதிரி தனது கேமரா மூலம் சொல்லியிருக்கும் கதிர், ஒரு நல்ல விஷயம் அனைத்து தரப்புக்கும் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் மிக கவனமாகவே அந்த காட்சிகளை கையாண்டிருக்கிறார். 

ஜாலிக்காக வீடியோ எடுக்கிறேன், என்று சொல்லிக்கொண்டு அந்தரங்கமான விஷயங்களை வெளியே விட்டுவிட்டு பிறகு வேதனை படுவதை விட, எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்பதை வலியுறுத்தும் இப்படம், அதுபோன்ற வீடியோக்களை இண்டர்நெட்டில் ஏற்றுவதால், பலரது வாழ்வு எப்படி பறிபோகிறது, என்பதை ரொம்ப அழுத்தமாக சொல்லியிருக்கிறது.

இப்படி ஒரு விஷயத்திற்கு, விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்த இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், அதை கமர்ஷியல் படங்களுக்கு இணையான காட்சிகளோடு சொல்லியிருந்தாலும், இவை அனைத்தும் தான் சொல்ல வந்ததை எந்தவிதத்திலும் ஓவர்டேக் செய்யவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

காவல் துறையின் வேறு ஒரு முகத்தை தான் இயக்கிய ’விசாரணை’ படத்தின் மூலம் காட்டிய இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளராக நாம் அறியாத, அறிந்துக் கொள்ளக்கூடிய மற்றொரு படத்தை கொடுத்ததற்கு பாராட்டுக்கள்.

நாலு சுவராக இருந்தாலும், யாரோ ஒருவர் நம்மை பார்த்துக் கொண்டு தான் இருப்பார், எனவே உஷாராக இருங்கள் என்று நம்மை எச்சரிப்பதுடன், அந்தரங்கமான வீடியோக்களை இண்டர்நெட்டில் ஏற்றி பலரது வாழ்வை நாசமாக்குபவர்களிடம், உங்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டால் எப்படி இருக்கும்? என்ற கேள்வியை நறுக்கென்று கேட்பது போல உள்ள இந்த ‘லென்ஸ்’ படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமே. இளைஞர்கள், இளம் பெண்கள் மட்டும் இன்றி தம்பதிகள் கூட இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்.

ஜெ.சுகுமார்