.

‘யானும் தீயவன்’ திரைப்பட விமர்சனம்

June 30, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஜூன் 30 (டி.என்.எஸ்) நடன இயக்குநர் ராஜு சுந்தரம் வித்தியாசமான வேடத்தில், அறிமுக ஹீரோ அஸ்வின் ஜெரோமுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘யானும் தீயவன்’.


காதலர்களான அஸ்வினும், வர்ஷாவும் கடற்கரைக்கு போகும் போது, அங்கு மது குடித்துக் கொண்டிருக்கும் பெரிய ரவுடியான ராஜு சுந்தரத்தின் ஆட்கள், வர்ஷாவிடம் வம்பு செய்கிறார்கள். அப்போது அமைதியாக அங்கிருந்து எஸ்கேப்பாகிவிடும் அஸ்வின், வர்ஷாவை பத்திரமாக வீட்டில் சேர்த்துவிட்டு, மீண்டும் அந்த இடத்திற்கு வந்து, ராஜு சுந்தரம், பெரிய ரவுடி என்பது தெரியாமல் அவரையும் அவரது ஆட்களையும் புரட்டி எடுத்துவிடுகிறார். 

பிறகு, அஸ்வின் - வர்ஷா காதலுக்கு அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, இருவரும் பெற்றோரை எதிர்த்து பதிவு திருமணம் செய்துக் கொண்டு, தனது நண்பர் ஒருவரது வீட்டில் வசிக்க, எதிர்பாராத விதமாக அங்கே வரும் ராஜு சுந்தரத்திடம் மாட்டிக்கொள்கிறார்கள். அதே சமயம், ராஜு சுந்தரத்தை என்கவுண்டர் செய்ய முடிவு செய்யும் போலீஸ் அதற்கான நடவடிக்கையில் இறங்குகிறார்கள். போலீஸின் திட்டத்தை தெரிந்துக் கொள்ளும் ராஜு சுந்தரம், என்கவுண்டரில் இருந்து தப்பித்தாரா இல்லையா, அவரிடம் மாட்டிக் கொண்ட அஸ்வின் - வர்ஷா தப்பித்தார்களா இல்லையா, என்பது தான் க்ளைமாக்ஸ்.

அறிமுக ஹீரோ அஸ்வின் ஜெரால்டு, 6 அடி உயரத்தில் கம்பீரமாக இருப்பதுடன், ஹீரோவுக்கு உண்டான அனைத்து தகுதிகளுடையவராகவும் இருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ஹீரோயின் வர்ஷா, சிறு சிறு எக்ஸ்பிரஸன்கள் மூலம் ரசிகர்களை கவர்கிறார்.

முதல் முறையாக வில்லன் வேடம் ஏற்றிருக்கும் ராஜு சுந்தரத்திற்கு பெரிய அளவில் வசனங்கள் இல்லை என்றாலும், வில்லன் வேடத்திற்கு மனுஷன் சூட்டாகி விடுவதுடன், அவரது கெட்டப்பும் கவனிக்க வைக்கிறது.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், அச்சு ராஜாமணியின் இசையும் படத்தோடு பயணித்திருந்தாலும், படத்தின் வசன ஒலிப்பதிவு காட்சிகளுடன் ஒன்று சேராமல் இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.

தான் சொல்ல வந்ததை மட்டுமே சொல்ல வேண்டும் என்ற முடிவில் திரைக்கதையை நருக்கென்று அமைத்துள்ள இயக்குநர் பிரசாந்த் ஜி.சேகர், சில தொழில்நுட்ப விஷயங்களில் கோட்டை விட்டிருப்பதால், படம் மனதில் ஒட்டாமல் பயணிக்கிறது. 

மொத்தத்தில், குட்டி சஸ்பென்ஸ் திரில்லரை பெரிய ரேஞ்சில் சொல்ல முயற்சித்து பிறகு சிறிதாகவே சொல்லி, சுமாரான படமாகவே கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் ஜி.சேகர்.

ஜெ.சுகுமார்