‘புலிமுருகன்’ திரைப்பட விமர்சனம்

June 19, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஜூன் 19 (டி.என்.எஸ்) காட்டுப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் மோகன்லாலின் தந்தையை வனத்துறை அதிகாரிகள் துரத்த,  புலி இருக்கும் பகுதிக்கு ஓடும் அவர் புலியால் கொடூரமாக மோகன்லால் கண் முன்னே கொல்லப்படுகிறார்.


இதனால் சிறு வயதில் இருந்தே வனத்துறை அதிகாரிகளை வெறுக்கும் மோகன்லால், ஊருக்குள் புகுந்து மக்களை வேட்டையாடும் புலிகளை வேட்டையாடி ஊர் மக்களை பாதுகாத்து வருகிறார்.

இதற்கிடையே, மோகன்லாலுடைய தம்பியின் நண்பர் பாலா, கஞ்சாவை பயன்படுத்தி கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப் போவதாக சொல்லி, காட்டுப் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கிச் செல்வதோடு, அதை மோகன்லால் மூலமாகவே தனது இடத்திற்கும் எடுத்துச் சென்றுவிடுகிறார். இந்த நிலையில், வனத்துறை அதிகாரி கிஷோர் மோகன்லாலை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட, அதில் இருந்து தப்பிப்பதற்காக பாலாவின் தந்தை ஜெகபதிபாபுவின் அறிவுரைப்படி நகரத்தில் உள்ள அவரது கெஸ்ட் ஹவுஸில் மோகன்லால் குடும்பத்தோடு வசிக்க தொடங்குகிறார். 

மோகன்லாலின் தம்பிக்கு ஜெகபதிபாபு தனது நிறுவனத்தில் வேலையும் கொடுக்க, திடீரென்று போலீசார் மோகன்லாலின் தம்பியை கைது செய்துவிடுகிறது. அப்போது தான் தெரிகிறது, ஜெகபதிபாபு கஞ்சாவை பயன்படுத்தி போதை பொருட்கள் தயார் செய்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் குற்றவாளி என்று, இதையடுத்து போலீசுக்கு ஆதரவாக செயல்படும் மோகன்லால், தனது மகனை பறிகொடுக்கும் ஜெகபதிபாபு, போலிசில் சிக்கி தப்பித்துவிடுகிறார்.

இதற்கிடையே, ஊருக்குள் புகுந்த புலியை வேட்டையாட மீண்டும் தனது ஊருக்கு மோகன்லால் வருகிறார். அவரை பழிவாங்க ஜெகபதிபாபு காட்டுக்குள் வர, புலியை வேட்டையாடும் மோகன்லால், வில்லன் ஜெகபதிபாபுவை வேட்டையாடினாரா இல்லையா, என்பது தான் க்ளைமாக்ஸ்.

பல படங்களில் நடிப்பில் மிரட்டியிருக்கும் மோகன்லால், முதல் முறையாக ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் என்றால் அது இந்த ‘புலிமுருகன்’ படமாகத்தான் இருக்கும். பாசமுள்ள அண்ணனாக அப்பாவித்தனமான நடிப்பை வெளிக்காட்டுபவர், இடை இடையே நையாண்டி நகைச்சுவைக் காட்சிகளில் எதார்த்தமாக நடித்து அசத்துவதுடன், ஆக்‌ஷன் காட்சிகளில் செம அதிரடியைக் காட்டுகிறார்.

சிறு வயது மோகன்லாலாக வரும் ஷிஜாஸ், தனது அப்பாவை கொன்ற புலியை பழிவாங்க சிவந்த கண்களோடு கிளம்பும் காட்சியிலேயே படம் ஜெட் ஆக கிளம்பிவிட, புலியுடனான ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் மிரட்டல் ரகங்கள். 

கமாலினி முகர்ஜி, லால், ஜெகபதிபாபு, பாலா, கிஷோர் என்று படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களது கதாபாத்திரமும் மனதில் நிற்கும்படி உள்ளது. ஒரு சில காட்சிகளில் வரும் புலியால் கொல்லப்படும் வனத்துறை அதிகாரி, பாலாவை கடத்தும் அந்த நாய் தாதா ஆகியோரது கதாபாத்திரங்களும் கவனிக்க வைக்கிறது.

கோபி சுந்தரின் இசையில் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். அதுவும் புலி வரும் போது திரையில் ஏற்படும் அமைதியும், அதன் பின் வரும் பின்னணி இசையும் படபடக்க வைக்கிறது. படத்தில் 90 சதவீதம் நிஜ புலியை பயன்படுத்தியிருப்பதால், ஒளிப்பதிவாளர் ஷாஜிகுமார் மிகப்பெரிய சவாலை எதிர்க்கொண்டிருப்பது படத்தின் பல காட்சிகளில் தெரிகிறது. மோகன்லாலின் தந்தையை தாக்க புலி எண்ட்ரிகொடுக்கும் காட்சி தியேட்டரில் கைதட்டல் பெறுகிறது.

மோகன்லாலுக்கு இணையாக திரையில் வராத ஒரு ஹீரோவாக சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் செயல்பட்டிருக்கிறார். வனத்துறை அதிகாரிகளுடன் மோகன்லால் மோதும் சண்டைக்காட்சியாகட்டும், இறுதிக் காட்சியின் போது இடம்பெற்ற மிகப்பெரிய சண்டைக்காட்சிகளாகட்டும் அனைத்தையும் நச்சென்று வடிவமைத்திருக்கிறார். புலிகளுடன் மோகன்லால் மோதுவதும், புலி அவரை விரட்டும் காட்சிகளும் ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கிறது.

டப்பிங் படம் என்ற அடையாளமே தெரியாதவாறு இப்படத்தினை தமிழாக்கம் செய்திருக்கும் ஆர்.பி.பாலா, தற்போதைய டிரெண்டிங் வார்த்தைகளை கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார்.

படத்தில் ஏகப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தாலும், அனைத்தையும் திரைக்கதையுடனேயே பயணிக்க வைத்துள்ள இயக்குநர் வைஷாக், பெண்களுக்கான செண்டிமெண்ட் விஷயங்களோடு, சிறுவர்களுக்கு பிடித்தமான சில காட்சிகளையும் வைத்து குடும்பத்தோடு பார்க்க கூடிய படமாக இந்த ‘புலிமுருகன்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

ஜெ.சுகுமார்