‘பா.பாண்டி’ திரைப்பட விமர்சனம்

April 13, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.13 (டி.என்.எஸ்) நடிகர் தனுஷ் இயக்கியுள்ள முதல் படம் என்பதாலும், அதில் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பதாலும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘பா.


பாண்டி’ அந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இணையான படமாக இருக்கிறதா? என்பதை பார்ப்போம்.

தனி அறை உள்ளிட்ட சகல வசதிகளுடன் தனது பிள்ளை அரவனைப்பில் வாழும் ராஜ்கிரண், தனது பிள்ளைக்கு கட்டுப்பட்டே வாழ்ந்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் தான் வாழும் அடிமைத்தனமான வாழ்க்கை பிடிக்காமல், வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார். என்கே போவது என்று தெரியாமல் இருக்கும் அவருக்கு, திடீரென்று தனது முதல் காதலும், காதலியின் நினைவும் வர, உடனே காதலியை தேடிச் செல்பவர், அவரை சந்தித்தார இல்லையா, அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் ‘பா.பாண்டி’ படத்தின் கதை.

தங்களது ஆசை, சந்தோஷம் அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பிள்ளைகளுக்காகவே வாழும் பெற்றோர், பிள்ளைகள் வளர்ந்த பிறகும், அதே பிள்ளைகளிடம் அடிமையைப் போல வாழாமல், தங்களுக்கான வாழ்க்கையை வாழ வேண்டும், என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் தனுஷ்.

’பா.பாண்டி’ படத்தின் நிகழ்ச்சிகளிலோ அல்லது படம் குறித்து தனுஷ் அளித்த பேட்டிகளிலோ “ராஜ்கிரணுக்கு எனது குடும்பம் நன்றி கடன் பட்டிருக்கிறது” என்பதை சொல்ல தவறியதில்லை. அதன்படியே படமும் ராஜ்கிரண் என்ற ஒரு நடிகரை வேறு ஒரு பரிணாமத்தில் காட்டுவதற்காக எடுக்கப்பட்டது போலவே இருக்கிறது.

தனுஷ் இயக்கும் முதல் படம் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தாலும், படத்தில் இடம்பெற்ற அனைத்து சிறப்புகளும் ராஜ்கிரணுக்கே சொந்தமாகிறது. முதல் முறையாக பேண்ட் போட்டு நடித்துள்ள ராஜ்கிரண், இப்படத்தில் முதல் முறையாக நடனம் ஆடியிருப்பதுடன், முதல் முறையாக ஆங்கிலத்திலும் பேசி நடித்திருக்கிறார். இப்படி அனைத்திலும் புதுசாக தெரியும் ராஜ்கிரண், நடிப்பிலும் சற்று வித்தியாசத்தை காட்டியிருப்பதுடன் ரொமன்ஸும் செய்திருப்பது ரொம்ப ரொம்ப புதிதாக இருக்கிறது.

ராஜ்கிரணின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ், கொஞ்சம் காதல், கொஞ்சம் மோதல் என்று தனது மாஸ் தனத்தை கொஞ்சமாக காட்டி நடிகர் தனுஷைக் காட்டிலும் இயக்குநர் தனுஷுக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். மாடர்ன் பெண்ணாக பார்த்த மடோனா செபஸ்டியன், சரோஜா தேவி கெட்டப்பில் வந்து போக, ராஜ்கிரணுக்கு அடுத்தபடியாக ரசிகர்களை கவனிக்க வைப்பவர் ரேவதி மட்டுமே.

தமிழ் சினிமாவை பின்னோக்கி அழைத்துச் செல்லும் தனுஷின் திரைக்கதைக்கு ஏற்பட வேல்முருகனின் ஒளிப்பதிவும், ஷான் ரோலனின் இசையும் பயணித்திருக்கிறது. பாடல் வரிகளில் உள்ள எளிமை இசையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, பழைய வாத்தியக் கருவிகளை பயன்படுத்தியிருக்கும் ஷான் ரோலணின் இசை காட்சிகளின் போது மட்டுமே ரசிக்க முடிகிறது. படம் முடிந்த பிறகு பாடலின் வரிகளும், இசையும் நினைவில் நிற்காமல் போய்விடுகிறது.

ராஜ்கிரண், ரேவதி இடையிலான உறவை சொல்லும் காட்சிகள் அனைத்தும் கத்தி மேல் நடப்பது போன்றவை என்றாலும், அதை இயக்குநராக தனுஷ் சாமர்த்தியமாகவே சமாளித்திருக்கிறார். வயது 20 ஆக இருந்தால் என்ன, 60 ஆக இருந்தால் என்ன, துணை துணை தான், என்ற வசனத்தை கையாண்ட தனுஷ், ரேவதியையும், ராஜ்கிரணையும் சிங்கிளாக காட்டி, காண்டர்வர்சியான கருத்தை ரொம்ப கவனமாகவே கையாண்டுள்ளார். ஆனாலும், ராஜ்கிரணின் மனைவியையும், அவருடன் ராஜ்கிரண் வாழ்ந்ததற்கான நினைவுகளையும் காட்டியிருப்பவர், ரேவதியை மட்டும் ராஜ்கிரணின் காதலியாகவே காட்டியிருப்பது, தனுஷ் என்ற ஆண் இயக்குநரின் ஆதிக்கத்தை பிரதிபலிக்கிறது.

பிள்ளைகள் வளர்ப்பதில் அம்மா, அப்பா என்று இருவருக்குமே பங்கிருக்க, படம் கமர்ஷியலாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்பா, என்ற ஒரு பக்கத்தில் இருந்தே முழு கதையையும் தனுஷ் நகர்த்துகிறார். 

கமர்ஷியல் என்று சொல்லும் போது ரோபோ சங்கரை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. படத்தின் சில நிமிட காட்சிகளில் வந்தாலும், இயக்குநர் கெளதம் மேனனை அவர் அழைக்கும் விதத்தில் திரையரங்கையே குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார். ராஜ்கிரணின் மகனாக நடித்துள்ள பிரசன்னா, சொன்னதை சமத்தாக செய்திருக்கிறார்.

வயதான காலத்தில், தான் செய்வதை கண்டிக்கும் தனது மகன் பிரசன்னா, இதே விஷயங்களை சிறு வயதில் செய்யும் போது அதை ராஜ்கிரண் எடுத்துக் கொள்ளும் விதத்தை அவ்வபோது காட்சிகளாக நம் கண் முன் நிறுத்தும் தனுஷ், அதை அடிக்கடி சொன்னால் போரடித்துவிடும் என்று அளவாக சொல்லியிருப்பது அவரது இயக்குநர் ஆளுமையை காட்டுகிறது. கதையின் நாயகனாக இருப்பவர் மட்டுமே கைதட்டல் பெரும் வசனங்களை பேசாமல், ஒரு காட்சியில் ஓரமாக நிற்பவர் கூட “காதலிச்ச பெண்ணோ, கடவுள் கொடுத்த பெண்ணோ ரிசல்ட் எல்லாமே ஒண்ணாதான் இருக்கு” என்று பேசி கைதட்டல் பெறுகிறார். இப்படி படம் முழுவதும் எதிர்பார்க்காத சில கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் அப்ளாஸ் பெருகிறது.

மாஸ் ஹீரோவாக இருக்கும் தனுஷ், தான் இயக்கும் முதல் படத்தை, மாஸ் இயக்குநராக அல்லாமல், எழுத்தாளராக கையாள முயற்சித்து, ஏற்கனவே பலர் பலவிதத்தில் சொல்லிய ஒரு சப்ஜக்ட்டை, கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில், மெசஜ் சொல்ல வரும் இந்த ‘பா.பாண்டி’ இறுதியில் எதையுமே முழுசாக சொல்லாமல், அறைகுறை பாண்டியாகவே ரசிகர்கள் முன் நிற்கிறார்.

ஜெ.சுகுமார்