பிரம்மாண்டமும், பிரமிப்பும் நிறைந்த ‘பாகுபலி-2’

April 28, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்,.28 (டி.என்.எஸ்) பாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தார்? என்ற கேள்விக்கான பதிலாக உள்ள ‘பாகுபலி-2’ பிரம்மாண்ட காட்சிகளுடன், கதாபாத்திரங்களின் எமோஷன்களையும் பிரம்மாண்டமாக காட்டியுள்ளது.


முதல் பாகத்தில் சிவகாமியால் அரசராக பாகுபலி அறிவிக்கப்பட்டாலும், இரண்டாம் பாகத்தில் அரசராக பல்வால்தேவனுக்கு முடி சூட்டப்பட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் பாகுபலியின் கொலைக்கு காரணமாகிறது. கட்டப்பா பாகுபலியை கொன்றாலும், அதற்கு பின்னணியில் பல்வால்தேவன் இருப்பது அனைவரும் அறிவர். ஆனால், யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு நபர் பாகுபலியின் மரணத்திற்கு முக்கிய காரணமாகிறார். அவர் யார்?, எதற்காக அவர் பாகுபலியை கொலை செய்கிறார்?, என்ற கதைக்கு இயக்குநர் ராஜமவுலி அமைத்த திரைக்கதை, கிராபிக்ஸ் நிறைந்த காட்சிகளையும் உயிரோட்டம் உள்ள காட்சிகளாக்குகிறது.

முதல் பாகத்தில் ரசிகர்களை கவரக்கூடிய அளவுக்கு இருந்த பிரம்மாண்ட போர்க் காட்சிகளும், போர்களின் வியூகங்களும் இந்த பாகத்தில் இருந்தாலும், கதாபாத்திரங்களின் நடிப்பு காட்சிகளின் பிரம்மாண்டத்திற்கு ஈடுகொடுக்கிறது. 

பிரபாஸ் - அனுஷ்கா இடையிலான காதல், படத்திற்கான தேவையாக மட்டும் இன்றி, கதைக்கான தேவையாகவும் இருக்கும் விதத்தில் திரைக்கதை விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் கதாபாத்திரங்களாக அறிமுகமான நடிகர்கள், இந்த பாகத்தில் தங்களது நடிப்பை வெளிக்காட்ட இயக்குநர் ஏராளமான வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

முதல் பாகத்தில் சாதாரணமாக தெரிந்த நாசர், இந்த பாகத்தில் ஆரம்பத்திலேயே ரசிகர்களின் அப்ளாஸை பெற்றுவிட, அனுஷ்கா சிவகாமியைக் காட்டிலும் பெயர் வாங்கும் அளவுக்கு நடித்திருக்கிறார். 

ஆரம்பம் முதல் முடியும் வரை அனைத்து காட்சியும் பரபர என்று நகர்கிறது. காதல் காட்சியில் கூட இந்த பரபர இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ராஜமவுலி.

அனைத்துக் காட்சியிலும் கிராபிக்ஸ் இருப்பதும், எதைக் காட்டினாலும் ரசிகர்கள் பிரமிப்படைய வேண்டும் என்ற எண்ணத்தில் காட்சிகளை வடிவமைத்திருப்பதும், சில இடங்களில் மாயாஜால படத்தை பார்ப்பது போல உணர்வை தருகிறது. இருந்தாலும், படத்தின் பலமாக இருக்கும் இயக்குநர் ராஜமவுலியின் கற்பனைக்கு, உயிர் கொடுக்கும் விதத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.

முதல் பாகத்தில் பாடல் மற்றும் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த இசையமைப்பாளர் கீரவாணி, இதில் பின்னணி இசைக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். படத்தின் நீளம் இரண்டரை மணி நேரத்தை தாண்டினாலும், படத்தில் எந்த இடத்திலும் ரசிகர்களை சோர்வடையாத வகையில் எடிட்டரின் கட்டிங் அமைந்திருக்கிறது. சண்டைக்காட்சிகள் அதிகமாக இருந்தாலும், அவற்றுக்கு எடிட்டர் கத்திரி போட்ட விதத்தில் அவை அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளது.

பாடலாசிரியராக கார்கி ஜொலிக்கவில்லை என்றாலும், வசனகர்த்தாவாக பல இடங்களில் ஜொலிக்கிறார். சத்யராஜை அடிக்கடி நாய் என்று சொல்லும் நாசர் ஒரு காட்சியில் “ஒட்டு கேட்டாயா?” என்று கேட்க அதற்கு நாசர், “நான் நாய் ஒட்டு கேட்க மாட்டேன், ஆனால் மோப்பம் முடிப்பேன்’ என்று சத்யராஜ் பதில் அளிப்பார். இதுபோல படத்தில் பல இடங்களில் மதன் கார்கி வசன கர்த்தாவாக கைதட்டல் பெறுகிறார். ராஜா காலத்து படம் என்பதால் வசனத்தை பழைய பாணியில் பேசாமல் அதே சமயம் ரொம்பவே சாதாரணமாகவும் பேசாமல், இரண்டையும் கலந்து பேலன்ஸ் செய்திருப்பது கதை ஓட்டத்தை சாதாரணமாக புரிந்துக் கொள்ள முடிகிறது.

படை தளபதியின் விரல்களை வெட்டியதால் அனுஷ்காவை கைது செய்து அரசர் விசாரணை நடத்திக் கொண்டிருக்க, அங்கு வரும்  பிரபாஸ், பெண்களை தொட்டவனின் விரலை வெட்ட கூடாது, அவன் தலையை வெட்ட வேண்டும், என்று கூறி, தனது கத்தியை எடுத்து அவனது தலையை வெட்டும் காட்சியில், அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். 

இப்படி படம் முழுவதுமே காட்சிகள், வசனங்கள் மூலமாக கைதட்டல் பெறும் ராஜமவுலி, கதாபாத்திரங்களும், அவர்களைப் பற்றியும் எந்தவித குழப்பமும் இன்றி விவரித்திருப்பதுடன், இறுதியில் படம் பார்ப்பவர்களுக்கு எந்தவித குழப்பமும் ஏற்படாமல் படத்தை முடிக்கிறார்.

பாடல் காட்சிகளில் மட்டுமே பிரம்மாண்டத்தை காட்டி வந்த இந்திய சினிமாவுக்கு, கதையில் பிரம்மாண்டத்தை கையாளும் வழியை காட்டியுள்ள இயக்குநர் ராஜமவுலி ‘பாகுபலி’ மூலம் இந்திய சினிமாவே தன்னை திரும்பி பார்க்கச் செய்தார். ஆனால், ‘பாகுபலி-2’ மூலம் இந்திய சினிமாவே அவரை அன்னார்ந்து பார்க்கும் என்பது நிச்சயம்.

ஜெ.சுகுமார்