‘நகர்வலம்’ திரைப்பட விமர்சனம்

April 22, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.22 (டி.என்.எஸ்) சித்தப்பா அரசியல்வாதி, அண்ணன் பெரிய ரவுடி, அப்பா அரசாங்க ஊழியர், என்று பலமான குடும்ப பின்னணியோடு இருக்கும் ஹீரோயின் தீக்‌ஷிதா மாணிக்கமும், மெட்ரோ வாட்டர் லாரி டிரைவரான பாலாஜியும் காதலிக்க, அவர்களது காதலுக்கு ஹீரோயின் குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.


என்னதான் எதிர்ப்பு வந்தாலும் காதலை கைவிடப் போவதில்லை, என்ற வீராப்பில் இருக்கும் ஹீரோவுக்கு ஹீரோயினின் அண்ணன் ஆதரவு தெரிவிக்க, பிறகு ஒட்டு மொத்த குடும்பமே காதலர்களை ஒன்று சேர்க்க நினைக்கும் போது, ஜாதி வெறி பிடித்த அரசியல்வாதி சித்தப்பா மட்டும் தொடர்ந்து எதிர்க்க, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா, என்பது தான் ‘நகர்வலம்’ படத்தின் கதை.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் பல வடிவில் நாம் பார்த்த படம் தான் இந்த நகர்வலம் என்றாலும், தனது பாணியில் அதை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் மார்க்ஸ்.

தனது உருவத்திற்கு மிஞ்சிய கதாபாத்திரமாக இருந்தாலும் அதை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் ஹீரோ பாலாஜி. ஹீரோயின் தீக்‌ஷிதா மாணிக்கம், முத்துகுமார், மாரி முத்து, டி.ரவி என்று நட்சத்திரங்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள். பாலசரவணன் - யோகி பாபுவின் காமெடி காட்சிகளும் நம்மை சிரிக்க வைக்கிறது.

இப்படி நடிகர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருந்தாலும், இயக்குநரின் திரைக்கதையும், கோடம்பாக்கத்தின் ஓல்டு கான்சப்ட்டும் அதனை பின்னுக்கு தள்ளிவிடுகிறது.

இசையமைப்பாளர் பிரவீத் கார்த்திக், இளையராஜாவின் மெட்டுக்களை ஒலிக்கச் செய்தே படம் முழுவதும் உப்பேற்றுகிறார். தமிழ் தென்றலின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. 

கதையும், திரைக்கதையும் பழசாக இருந்தாலும், நடிகர் பசுபதியின் நடனம் ரொம்ப புதுசாக இருக்கிறது. படத்தில் சொல்லும்படியான விஷயம் என்றாலும் இது மட்டுமே. மற்றபடி ஏற்கனவே நாம் பார்த்த படத்தையே, தன்னால் முடிந்த அளவுக்கு தூசி தட்டி கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் மார்க்ஸ்.

ஜெ.சுகுமார்