‘திறப்பு விழா’ திரைப்பட விமர்சனம்

May 12, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 12 (டி.என்.எஸ்) தெருவுக்கு நான்கு, என்ற ரீதியில் பச்சை வண்ண பெயர் பலகையோடு ஜொலிக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுங்கப்பா, என்று சொல்லும் முதல் தமிழ்ப் படமே இந்த ‘திறப்பு விழா’.


டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக பணியாற்றும் ஹீரோ ஜெய ஆனந்த், போலி மதுவை விற்பனை செய்யும் ஊர் பெரும்புள்ளிகளை அரசாங்கத்திடம் பிடித்துக் கொடுப்பதோடு, மக்களை திரட்டி டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட, அவருடன் ஹீரோயின் ரஹானாவும் போராடுகிறார். பெண்கள் ஆதரவு தெரிவிக்கும் இவர்களது போராட்டத்திற்கு, ஆண்களும், காவல் துறையும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், அமைதியான முறையில் போராடும் இவர்களை ஒடுக்கி, போராட்டத்தையும் கலைக்க முயல, ஹீரோயின் ரஹானா எடுக்கும் அதிரடி முடிவால், அந்த மதுக்கடையை அகற்றுவதுடன், மதுக்கடைக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மற்றும் ஊர் பெரும்புள்ளியும் கைது செய்யப்படுகிறார்கள். அப்படி அவர் என்ன செய்தார்? என்பது தான் க்ளைமாக்ஸ்.

தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அகற்றகோரி பெண்கள் போராட்டம் நடத்தி வருவதை, ஜனரஞ்சகமான முறையில் திரைப்படமாக கொடுத்திருக்கும் கே.ஜி.வீரமணி, மது நாட்டுக்கு அல்ல, வீட்டுக்கும், மக்களுக்கும் மட்டுமே கேடு என்பதை ரொம்ப தெளிவாக சொல்லியிருக்கிறார்.

ஹீரோவாக நடித்துள்ள ஜெய ஆனந்த், அறிமுகம் தான் என்றாலும், அதை மற்றவர்கள் அறிந்துக் கொள்ளாத வகையில் நடித்திருப்பதுடன், நடனத்திலையும் அசத்துகிறார். ஹீரோயின் ரஹானா பார்ப்பதற்கு பள்ளி சிறுமி போல இருந்தாலும், கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

மக்களிடம் விழிப்புணர்ச்சியும் ஏற்படுத்தனும், அதே சமயம் அதை கமர்ஷியல் படமாகவும் கொடுக்கணும் என்ற இயக்குநர் கே.ஜி.வீரணியின் முயற்சிக்கு, இசையமைப்பாளர் வசந்தரமேஷ், ஒளிப்பதிவாளர் ஆர்.பி.செல்வா, எடிட்டர் பி.ஜி.வேல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.

குவாட்டருக்கு 5 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்கிக் கொண்டு, எவன் செத்த நமக்கு என்ன,  என்று சில்லரையை அல்லும் டாஸ்மாக் ஊழியர்கள் நினைத்தால் கூட மதுவை ஒழிக்க முடியும், என்பதை இயக்குநர் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

டாஸ்மாக் காட்சிகள் மற்றும் பாடல்கள் இல்லாத படங்களே இல்லை, என்ற தற்போதைய நிலையில், டாஸ்மாக் கடைகளின் வருமானம் பெருக பெருக, மக்களின் வாழ்வு எப்படி சீரழிந்து வருகிறது என்பதை சொல்லியிருக்கும் இப்படம், தமிழகத்தில் டாஸ்மாக்குக்கு எதிராக பெண்கள் நடத்தும் போராட்டத்திற்கு மிகப்பெரிய தூண்டுகோளாக அமையும் விதத்தில் உள்ளது. அதே சமயம், போராட்டத்தை மட்டுமே சொல்லாமல், காதல், நகைச்சுவை என்று கிராமப் பின்னணியில் ஒரு குடும்ப கதையையும் சொல்லியிருக்கும் இயக்குநர் கே.ஜி.வீரமணி, நல்ல விஷயத்தை நல்லபடியாகவே சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘திறப்பு விழா’ டாஸ்மாக் கடைகளை மூட நினைக்கும் பெண்களுக்கான விழாவாகவும், மதுபோதையில் மூழ்கியிருக்கும் குடிமகன்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடமாகவும் உள்ளது.

ஜெ.சுகுமார்