‘டோரா’ திரைப்பட விமர்சனம்

April 03, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.03 (டி.என்.எஸ்) ஆவி ஒன்று காராக மாறி தனது எதிரிகளை பழி வாங்குகிறது, என்பது தான் இப்படத்தின் கரு.

கால்டாக்ஸி நிறுவனம் தொடங்குவதற்காக நயந்தாரா வாங்கும் பழைய கார், ஸ்மூத்தாக சென்றுக் கொண்டிருக்க ஒருவரை பார்த்ததும், திடீரென்று தானாகவே ஓடுவதுடன், ரொம்ப ஆக்ரோஷமாக அதிவேகத்தில் அவரை துரத்திச் செல்வதுடன், அவரை ஏற்றி கொலையும் செய்கிறது.


 

காரின் இத்தகைய நடவடிக்கைக்குப் பிறகு அந்த கார் குறித்து நயந்தாரா விசாரிக்கும் போது, அந்த காரில் ஒரு ஆத்மா இருப்பதாகவும், அந்த ஆத்மா சிலரை பழிவாங்க வந்திருப்பதாகவும், அதுவும் நயந்தாரா கண் முன்னே அவர்களை கொலை செய்ய காத்திருப்பதாகவும் தெரிய வருகிறது. அந்த காரில் இருக்கும் ஆத்மா யாருடையது, அது கொலை செய்ய நினைப்பவர்களுக்கும் நயந்தாராவுக்கும் என்ன தொடர்பு, போன்ற கேள்விகளுக்கான பதில் தான் ‘டோரா’ வின் கதை.

காருக்குள் அமானுஷ்ய சக்தி என்பதே புதிதாக இருக்கிறது. இதில் அந்த அமானுஷ்ய சக்தியாக இயக்குநர் கையாண்டிருக்கும் விஷயமும் படத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் உள்ளது.  

வெளிநாடுகளில் ஹீரோக்களுடன் டூயட் பாடி வந்த நயந்தாரா, நடிகர்களுக்கு இணையான ஒரு வேடத்தில் ரொம்ப எளிமையாக நடித்திருக்கிறார். குறைவான மேக்கப்பில் படம் முழுவதும் நிறைவான அழகோடு வலம் வரும் நயந்தாரா, தோற்றம், உடை என்று அனைத்திலும் தனித்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது கவர்ச்சி மூலம் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தவர் இந்த படத்தில் தனது நடிப்பு மூலம் ட்ரீஸ் கொடுத்திருக்கிறார்.

காருக்குள் இருப்பது என்னவாக இருக்கும்  என்பது தெரியாதவரை படம்  ரொம்ப சுவாரஸ்யமாக நகர்கிறது. ஆனால் காருக்குள் இருக்கும் ஆவி யாருடையது என்பது தெரிந்த பிறகு படம் ரிப்பேரான காரைப் போல நகரவே சிரமப்படுகிறது. 

தான் சொல்ல வந்ததை இரண்டு மணி நேரம் சொல்வதற்காக இயக்குநர் வடிவமைத்த சில காட்சிகள் திணிப்பது போல இருக்கிறது. குறிப்பாக நயந்தாராவை ஹரிஸ் உத்தமன் பெண் பார்க்கும் காட்சி. ஆனால், அந்த காட்சிக்கு பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ளும் போது ஏற்கனவே தாங்கள் சந்தித்துக் கொள்ளாதது போல கடந்துச் செல்கிறார்கள். பிறகு படத்திற்கு எந்த வகையிலும் அந்த காட்சி தேவைப்படாமல் போய் விடுகிறது.

அதேபோல், காருக்குள் ஆவி இருக்கிறது என்பதை காட்டிய இயக்குநர், அடுத்தக் காட்சியில் காமெடி என்ற பெயரில் தம்பி ராமையாவை வைத்து அரங்கேற்றும் கோமாளி டிராமா படு மொக்கையாக இருக்கிறது. இருந்தாலும், ஆவி ஓட்டுவது, பேய் பிடிப்பது போன்ற காட்சிகளை நிராகரித்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

ஐடியா புதுசாக இருந்தாலும், அதை சிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பழைய பாணியை கையாண்டுள்ள இயக்குநர் தாஸ் ராமசாமி, படத்தை வித்தியாசமான முறையில் கையாளவில்லை என்றாலும், நயந்தாராவுக்கு இந்த ‘டோரா’ மூலம் புதிய முகத்தை கொடுத்திருக்கிறார். அது ரசிகர்களுக்கு பிடித்த முகமாகவே உள்ளது.

ஜெ.சுகுமார்