‘ஜூலியும் 4 பேரும்’ திரைப்பட விமர்சனம்

April 10, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.10 (டி.என்.எஸ்) நாய்களில் அதிஷ்ட்ட நாய்களும் உண்டு, அந்த நாய்களை வைத்திருப்பவர்கள் தொட்டதெல்லாம் வெற்றி தான், என்ற கற்பனையோடு, நாய் கடத்தல் குறித்தும் சொல்லியிருக்கும் படமே ’ஜூலியும் 4 பேரும்’.


சென்னையைச் சேர்ந்த பெரிய தொழிலதிபர் ஒருவர் தனது தொழில் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிஷ்ட்ட நாய் ஒன்றை, நாய் கடத்தல் கும்பலிடம் இருந்து விலைக்கு வாங்குகிறார். சென்னைக்கு வரும் அந்த நாயை தொழிலதிபரிடம் இருந்து மீண்டும் கடத்தி வேறு ஒருவருக்கு விற்க நாய் கடத்தல் கும்பல் திட்டமிடுகிறது. அதே நேரம், வேலை தேடி சென்னை வரும் மூன்று இளைஞர்கள் தங்களது பணத்தை இழந்துவிட்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் தஞ்சமடைகிறார்கள். இந்தா நான்கு பேருக்கும் அந்த அதிஷ்ட்ட நாய் குறித்து தெரிய வர, நாயை கடத்தி தொழிலதிபரிடம் பணம் பறிக்க திட்டமிடுகிறார்கள்.

ஒரு வழியாக இந்த நான்கு பேரும் நாயை கடத்திவிட, நாயோ இவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறது. இந்த நிலையில், ஜூலி என்ற பெண் காணாமல் போக, அந்த பெண்ணை தேடுபவர்களிடம், நாயை தேடுபவர்கள் சிக்க, ஒரே குழப்பமான சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் ‘ஜூலியும் 4 பேரும்’ படத்தின் கதை.

அதிஷ்ட்ட நாய் என்பது பொய்யான விஷயமாக இருந்தாலும், அதை வைத்துக் கொண்டு இயக்குநர் சதீஷ் ஆர்.வி.திரைக்கதை அமைத்த விதம் நன்றாக இருக்கிறது. ஆனாலும், அவற்றை காட்சிகளாக்கும் போது ஏகப்பட்ட தடுமாற்றத்தை சந்தித்திருப்பதுடன், காமெடி என்ற பெயரில் நம்மை கடுப்பேற்றவும் செய்கிறார் இயக்குநர்.

ஜூலி என்ற அந்த அதிஷ்ட்ட நாய், நான்கு பேரிடம் கிடைத்ததும் அவர்களுக்கு கோடி கணக்கில் பணம் கிடைப்பது. அதே நாய் போலீஸ் அதிகாரியின் வாகனத்தில் இருக்கும் போது, அந்த அதிகாரிக்கு புரமோஷன் கிடைப்பது, அந்த நாயால் ஹீரோயினுக்கு வெற்றி கிடைப்பது, என்று அதிஷ்ட்ட நாய் யாரிடம் இருக்கிறதோ, அவர்களது வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை சொல்லியிருக்கும் காட்சிகள் மட்டுமே சற்று நன்றாக இருக்கிறது. அதை தவிர படத்தில் சொல்லும்படியாக எதுவும் இல்லை.

படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்களான அமுதவன், ஜார்ஜ் விஜய், சதீஷ் ஆர்.வி, யோகானந்த், ஹீரோயின் அலயா மானஷா ஆகியோர் தங்களது வேலையை சரியாக செய்திருந்தாலும், அவர்களது காமெடிக் காட்சிகள் ஒன்று கூட எடுபடவில்லை. அதிலும் அந்த போலீஸ் ஸ்டேஷன் காமெடி சகிக்கல.

ஒளிப்பதிவு, இசை என்று அனைத்துமே சுமார் ரகமே. மேலும், படம் முடியும் போது, ஒரு நடன இயக்குநருக்கு பெரிய பில்டப் கொடுத்ததோடு, அவருக்காக அந்த ஒரு காட்சியை வைத்து, படம் பார்ப்பவர்களை கொடுமையோ கொடுமை படுத்தியிருப்பதையாவது தவிர்த்திருக்கலாம்.

ஜெ.சுகுமார்