‘சிவலிங்கா’ திரைப்பட விமர்சனம்

April 14, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.14 (டி.என்.எஸ்) சஸ்பென்ஸ் திரில்லர் கதையை ‘சந்திரமுகி’ போல கமர்ஷியல் பிளஸ் திகில் படமாக கொடுக்க நினைத்த பி.


வாசு-வுக்கு சிவலிங்கா கை கொடுத்ததா இல்லையா என்பதை பார்ப்போம்.

ரயிலில் பயணம் செய்யும் சக்தி, அதே ரயிலில் பயணம் செயும் ஒரு மாற்றுத்திறனாளியால் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை பார்த்த ஒரே சாட்சி சக்தியின் புறா சாரா மட்டுமே. ஆளே இல்லாதா அந்த ரயிலில் நடந்த இந்த சம்பவத்தை தற்கொலை என்று நீதிமன்றம் வழக்கை முடித்து வைக்க, சக்தியின் காதலி இது கொலை தான் என்று உறுதியாக சொல்வதுடன், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று காவல்துறையிடம் கோரிக்கை வைக்கிறார். அதன்படி சிபிசிஐடி அதிகாரியான லாரன்ஸ் இந்த வழக்கை விசாரிக்க, கொலையாளி பிடிபட்டானா, கொலைக்கான காரணம் என்ன, என்பதே சிவலிங்கா படத்தின் கதை.

சஸ்பென்ஸ், திரில்லர், திகில், கமர்ஷியல், காமெடி என்று அத்தனை அம்சங்களும் இருந்தாலும், படத்தின் நீளம் ரசிகர்களை படாதபாடு படுத்திவிடுகிறது.

தனக்கு நடிப்பைக் காட்டிலும் நடனம் தான் நன்றாக தெரியும் என்பதை படத்துக்கு படம் காட்டி வரும் லாரன்ஸ், இந்த படத்திலும் நன்றாகவே நடனம் ஆடுகிறார். எப்போதும் போல மாற்றுத்திறனாளிகள் படை சூழ ஒரு பாடலில் வருபவர், தன்னை தலைவா என்று அழைப்பது போதாது என்று, தற்போது ‘குட்டி கபாலி’ என்று அழைக்க சொல்லியிருப்பது சிரிப்பாக இருக்கிறது. 
பெண்மை என்ற நலினமே இல்லாமல் ஆண்மையான நடையோடு வரும் ரித்திகா சிங், பேயாக நடித்த காட்சிகளில் கொடூரமான மேக்கப் போட்டு நம்மை பயமுறுத்தும் சில இடங்களில் மட்டுமே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கண்களில் தண்ணீரை வரவைக்காத வெங்காயத்தைப் போல, சிரிப்பே வராத காமெடி வெடிகளை கொளுத்தியிருக்கும் வடிவேலு, ஒரு காட்சியில் மட்டும் எப்படியோ சிலரை சிறிது நேரம் சிறிக்க வைத்து விடுகிறார். சக்தியின் கதாபாத்திரம் சிறியது என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.

சக்தி கொலையும், அதற்கான காரணமும், அந்த கொலையாளி கதாபாத்திரமும் தான் கதையின் முக்கிய அம்சங்களாக இருந்தாலும், இவை அனைத்தையுமே ஒரு சில நிமிடங்களிலேயே சொல்லி முடித்துவிடும் இயக்குநர், திரைக்கதையில் லாரன்ஸின் ஆட்டத்திற்கும், அளப்பரைக்கும் தான் அதிகமான முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

ரஜினிகாந்தையே அடக்கி வாசிக்க வைத்து ‘சந்திரமுகி’ என்ற கதாபாத்திரத்தையும், திரைக்கதையையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த இயக்குநர் பி.வாசு, லாரன்ஸின் மாஸ் தனத்தை அடக்கி வைக்காமல், திரைக்கதையை அலங்கோலப்படுத்தியிருக்கிறார். 

புறா கொலை குற்றவாளி குறித்து தடயம் கொடுக்கிறது, விசாரணையிலும் அதன் பங்கு இருக்கிறது என்பதை ஒரு சில வசனங்கள் மூலமாகவே சொல்லியிருக்கும் இயக்குநர் பெரும்பாலான காட்சிகளில் பேயை நம்பியே திரைக்கதை அமைத்திருப்பது சில இடங்களில் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இருந்தாலும், பெரும்பாலான பகுதிகள் ஏதோ பழைய படத்தை பார்ப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது.

படத்திற்கு பெரிய பலமாக இருப்பார் என்று இயக்குநர் நினைத்த ஹீரோ லாரன்ஸ் இப்படத்திற்கு பலவீனமாக இருக்க, படத்தின் மற்றொரு பலவீனமாக படத்தின் நீளம் இருக்கிறது. மொத்தத்தில் ’சிவலிங்கா’ சொதப்பலிங்காவாகவே இருக்கிறார்.

ஜெ.சுகுமார்