‘சரவணன் இருக்க பயமேன்’ திரைப்பட விமர்சனம்

May 12, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 12 (டி.என்.எஸ்) சினிமா என்ற கடலில் முன்னணி ஹீரோயின், இயக்குநர், சந்தானம் போன்றவர்களை தக்கையாக பயன்படுத்தி நீந்திக் கொண்டிருந்த உதயநிதி, ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தில் காமெடி நடிகர்கள் முலம் கரையேற முயன்றிருப்பவர், கரையேறினாரா இல்லையா என்பதை பார்ப்போம்.


வெட்டியாக சுற்றும் உதயநிதி சூரியின் மூலம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தேசிய கட்சியின் தமிழக தலைவராகிவிடுகிறார். அவரது சிறு வயது தோழியான ரெஜினா கெசண்ட்ராவுக்கும் அவருக்கும் எப்போதும் முட்டலும் மோதலும் இருந்தாலும், உதய்க்கு மட்டும் ஒரு பக்கம் ரெஜினா மீது காதல் மலர்கிறது. ஆனால், ரெஜினாவோ அந்த காதலை வெட்டி விடுவதற்காக, தனது வாழ்வே நாசமானாலும் பரவாயில்லை என்று மன்சூர் அலிகானின் மகனான சாம்ஸை திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்.

உதயநிதியை பார்த்தாலே எரிமலைப் போல சூடாகும் ரெஜினா, சில சமயங்களில் அவருடன் சேர்ந்து ஊர் சுற்றுவதுடன், அவரை தான் நான் திருமணம் செய்துக் கொள்வேன், என்றும் கூறுகிறார். அவரது இந்த மாற்றத்திற்கான காரணம் தெரியாமல் ஒட்டு மொத்த குடும்பமே விழி பிதுங்க, அங்கே ஒரு ஆவியின் ஆட்டம் அரங்கேறுகிறது. அனைத்துக்கும் காரணமான அந்த ஆவி யார்? அது ஏன் உதயநிதிக்கு உதவி செய்கிறது, என்பதற்கான பிளாஷ்பேக் முடிந்து, படம் க்ளைமாக்ஸை நெருங்கும் போது, இயக்குநர் எழில் தனது முந்தைய படங்களில் பயன்படுத்திய காமெடி டைம் நிகழ்ச்சியை நடத்தி படத்திற்கு பழங்காலத்து ’வணக்கம்’ போடுவது தான் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் கதை.

ஒரு படம் வெற்றி பெற்றால் போதும், நூல் பிடித்த மாதிரி ஒரே மாதிரியான படங்களில் நடித்து ரசிகர்களை வெறுப்பேற்றும் நடிகர்களில் ஒருவரான உதயநிதி, எதிர்காலத்தில் அந்த பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துவிடுவார், என்பதை ரொம்ப அழுத்தமாகவே சொல்கிறது இப்படம்.

சந்தானத்துடன் சேர்ந்து பல படங்கள் நடித்ததால் என்னவோ, உதயநிதி எது செய்தாலும் நமக்கு சிரிக்க தான் தோன்றுகிறது. அவரும் எந்த வித ரியாக்சனாக இருந்தாலும் காமெடி காட்சிகளில் நடிப்பது போலவே நடிக்கிறார். ஒரு இடத்தில் படத்தில் ஹீரோ உதயநிதியா, சூரியா, யோகி பாபுவா, சாம்ஸா என்று ரசிகர்கள் குழப்பமடையும் அளவுக்கு அவரது நடிப்பு அமைந்திருக்கிறது.

எனக்கு அப்புறம் எனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஸ்டேட்மெண்ட் கொடுத்தாலும், அவரது மகனான உதயநிதியோ, நாங்களும் வருவம்லே...அரசியலுக்கு, என்று சொல்லும் ரீதியில் சில காட்சிகளில் அரசியல்வாதியாகியிருப்பது மட்டும் கவனிக்க வைக்கிறது.

வராத காமெடியை வா..வா..என்று அழைக்கும் சூரியை கோடம்பாக்கம் வழி அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த படத்தில் அவரது எந்த நகைச்சுவை வசனங்களும் எடுபடவில்லை என்பதை அவர் படப்பிடிப்பின் போதே உணர்ந்திருப்பார் போல, அதனால் தான் வேதாளம் படத்தில் அவர் பயன்படுத்திய “ஹாசம்” என்ற வார்த்தையை இதிலும் பயன்படுத்தி ஓய்ந்து போகிறார்.

காமெடி பண்ணாமலேயே சில படங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்த யோகி பாபுவின் டைமிங் வசனங்கள் இந்த படத்தில் எடுபடவில்லை என்றாலும், பஞ்சாயத்து காட்சியில் நடக்கும் பாட்டு கச்சேரியில் நடனம் ஆடும் ரோபோ சங்கரும், ரவி மரியாவும் திரையரங்கமே அதிரும் வகையில் ரசிகர்களை சிரிக்க வைக்க, அவர்களுடன் அவ்வபோது கூட்டணி அமைக்கும் சாம்ஸும் நமக்கு வயிறு வலியை ஏற்படுத்தி விடுகிறார். ஆனால், இவை அனைத்தும் அந்த 3 நிமிட காட்சியில் மட்டும் தான்.

இப்படி படத்தில் அனைத்துமே நாம் பார்த்ததாகவும், பார்த்து வெறுத்ததாகவும் இருக்க, ஒன்னே ஒன்னு மட்டும் தான் ரொம்ப புதுசாக இருக்கிறது, அதுதான் ஹீரோயின் ரெஜினா கெசண்ட்ரா. இதுவரை நாம் ரெஜினாவை இப்படி பார்த்திருக்கவே முடியாது. அந்த அளவுக்கு, வெண்ணையில் செஞ்ச கேக்கு போல இருக்கிறார். இந்த படத்திற்குப் பிறகு கோடம்பாக்க ஹீரோக்கள் டிக்கடிக்கும் ஹீரோயின்களின் பட்டியலில் ரெஜினாவுக்கும் இடம் உண்டு.

டி.இமானின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும், க்ளைமாக்ஸின் போது வரும் குத்து பாடல் ஆட்டம் போட வைக்கிறது. கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவை எதற்காக பாராட்டவில்லை என்றாலும், ரெஜினாவை அவர் காண்பித்த விதத்திற்காக பாராட்டியாக வேண்டும்.

’துள்ளாதமனமும் துள்ளும்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தை திரையில் காட்டாமலேயே ரசிகர்கள் மனதில் அந்த கதாபத்திரத்தை நிற்க வைத்து, இயக்குநர் என்ற ஆளுமையை நிலைநாட்டிய எழில், வியாபார நோக்கில் ஜனரஞ்சகமான படங்களை இயக்கினாலும் அதை நியாயத்தோடு எடுப்பார் என்ற ரசிகர்களின் நம்பிக்கை இந்த படத்தில் உடைத்தெறியப்பட்டுள்ளது.

எதற்காக இந்த காட்சி, இதில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை தலையை பிச்சிக்க வைக்கும் இயக்குநர் எழில், நடுவே ஆவி, அதற்கு ஒரு பிளாஷ்பேக், என்று கண்ணுமண்ணு தெரியாமல் திரைக்கதையை நகர்த்தியிருப்பதோடு, அதிகமான நடிகர்கள் இருப்பதால், காட்சிகளையும் அதிகமாக எடுத்துவிட்டு, அதில் எதை வெட்டலாம், எதை ஒட்டலாம் என்று குழம்பி, கண்ட காட்சிகளை காண்பித்து ரசிகர்களை கடுபேற்றவும் செய்கிறார்.

ஹீரோயின் ரெஜினா கெசண்ட்ராவை ஸ்கீரினில் எப்படி காட்ட வேண்டும், என்பதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை இயக்குநர் எழில், திரைக்கதைக்கும், காட்சிகளுக்கும் கொடுத்திருந்தால், ‘சரவணன் இருக்க பயமேன்’ நல்ல பொழுது போக்கு படமாக அமைந்திருக்கும்.

மொத்தத்தில், நல்ல படங்கள் வெளியான இந்த வாரத்தில் கோடம்பாக்கத்தின்  திருஷ்ட்டி பொட்டாக உள்ளது இந்த ‘சரவணன் இருக்க பயமேன்’.

ஜெ.சுகுமார்