‘காற்று வெளியிடை’ திரைப்பட விமர்சனம்

April 07, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.07 (டி.என்.எஸ்) ராவணன், கடல், ஓ காதல் கண்மணி என்று தோல்விப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் இயக்குநர் மணிரத்னம், இந்த ‘காற்று வெளியிடை’ மூலம் பாதையை மாற்றினாரா இல்லையா என்பதை பார்ப்போம்.


இந்திய விமானப் படையில் பைட்டர் பைலட்டாக பணிபுரியும் கார்த்தியும், டாக்டரான அதித்தி ராவும் காதலிக்கிறார்கள். கார்த்தியின் மனநிலையும், அதித்தி ராவின் மனநிலையும் வெவ்வேறாக இருக்க, இருவருக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்பட இறுதியில் அதித்தி கார்த்தியை விட்டு பிரிந்து விடுகிறார். இதற்கிடையில் யுத்தம் ஒன்றின் போது பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொள்ளும் கார்த்தி அந்நாட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

சிறையில் தனது காதல் நினைவுகளில் மூழ்கியிருக்கும் கார்த்தி, ஒரு முறையாவது தனது காதலியை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறையில் இருந்து தப்பிக்க முயற்சிப்பவர், தப்பித்து தனது காதலியை சந்தித்தாரா இல்லையா என்பது தான் கதை.

விமானப் படை வீரர்கள் பின்னணியில் காதல் கதையை சொல்லியிருக்கும் மணிரத்னம், விமானப் படை வீரர்களின் வாழ்க்கையை மேலோட்டமாக சொல்லியிருந்தாலும், என்னதான் பெண்கள் நல்லா படிச்சு பெரிய பணியில் இருந்தாலும், அவர்களை ஆண்கள் அடக்கி ஆளவே நினைக்கிறார்கள் என்பதை, காதலர்களின் மோதல் மூலமாக அழகாக சொல்லியிருக்கிறார். அதே சமயம், ஹீரோயினை ஹீரோ துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகளை ருசிகரமாக காட்டும் மணிரத்னம் இந்த படத்தில் காதலர்களின் மோதலுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

பக்கத்துவீட்டு பையன் போல இயல்பான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவரும் கார்த்தி, முதல் முறையாக இயல்பை மீறிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிப்பை குறை சொல்ல முடியவில்லை என்றாலும், கார்த்தியின் தோற்றம் தான் பல குறைகளோடு இருக்கிறது. பொதுவாகவே கார்த்தி சிரித்தால் அவரது வாய் ஒரு பக்கமாக செல்லும், மீசை வேறு இல்லாததால் அந்த குறைபாடு ரொம்ப அதிகமாகவே தெரிகிறது. அதை வெளிக்காட்டாமல் பல காட்சிகளில் அவர் சமாளித்தாலும், ஏதாவது சில இடங்களில், சில கோணங்களில் சிக்கிக் கொள்கிறார்.

எதாவது ஒரு கோணத்திலாவது ஹீரோயின் அதித்தி ராவ் அழகாக இருப்பாரா என்று எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைகிறார்கள். ரவிவர்மனின் முயற்சியால் சில இடங்களில் அழகாக தெரியும் அதித்தி, உற்றுப்பார்ப்பது, அழாமல் கண்களில் கண்ணீர் விடுவது என்ற விதத்திலேயே நடித்திருக்கிறார். அவர் காட்டும் எக்ஸ்பிரஷன்களை நாம் புரிந்துக் கொள்வதற்காக அதிகப்படியான குளோஷ் ஷாட்கள் வைத்திருப்பதுடன், அந்த காட்சிகளை ரொம்ப நீளமாகவும் வைத்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், ரவிவர்மனின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தாலும், படத்தில் இடம்பெறும் பனி மலை உள்ளிட்டவை செட் என்பது தெளிவாக தெரிகிறது.

காதலை மையமாக வைத்து மணிரத்னம் எடுத்த படங்கள் எவர்கீரின் காதல் படங்களாக இருப்பதற்கு காரணம் காதலர்களின் உணர்வுகள் மட்டுமல்ல, கதைக்களத்தின் பின்னணியும் தான். ஆனால், இந்த படத்தை பார்க்கும் போது ஏதோ இந்தி படத்தை பார்ப்பது போலவே இருக்கிறது.

ஹீரோ தமிழர், ஹீரோயின் தமிழர், ஆனால் அவங்க குடும்பம் டெல்லியில் வசிப்பது போல காட்டியிருப்பதால் வட நாட்டு வாசம் தூக்கலாக இருந்தாலும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் டப்பிங் படம் பார்ப்பதுபோன்ற உணர்வையே கொடுக்கிறது. அதிலும் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் அனைத்தும் மணிரத்னத்தின் பல படங்களில் இடம்பெற்ற ரொம்ப பழைய வசனங்களாகவே இருக்கிறது. “ஏழு மலை ஏழு கடலை தாண்டி வருவேன்”, நீ என்ன காதலிப்பதை விட நான் உன்ன ரொம்ப காதலிப்பேன்” என்று மொக்கை வசனங்களாக இருப்பதால் தான், டைடில் கார்டில் வசனம் எழுதியவர் பெயர் இடம்பெறவில்லை போல.

தீவிரவாதம், மத பிரிவினை, குடும்ப பின்னணி போன்ற வித்தியாசமான கதைக்களத்தில் காதல் படங்களை எடுத்துள்ள மணிரத்னம், அனைத்து படங்களிலும் இரண்டையும் சரிசமாக கையாள்வதுடன், இரண்டுமே படம் பார்ப்பவர்களை பாதிக்கும் வகையில் காட்சிகள் அமைத்திருப்பார். ஆனால், இந்த படத்தில் அத்தகைய எந்த காட்சிகளும் இல்லை. எதிரி ராணுவத்திடம் சிக்கிக்கொள்ளும் இந்திய ராணுவ வீரர்கள் குறித்து முற்றிலுமாக தவிர்த்துள்ளவர், எதிரி நாட்டு சிறையில் இருந்து ஹீரோ தப்பிப்பதை, விஜயகாந்த் படம் போல படமாக்கியிருக்கிறார்.

மணிரத்னத்திற்காக ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் எந்தமாதிரி படம் எடுத்தாலும் அதை ஓஹோ ஆஹா, என்று ரசிப்பார்கள். ஆனால், அவர்களுக்கே இந்த படம் பிடிக்காத வகையில், படத்தின் காட்சிகளும், நடிகர்கள், அவர்களுக்கான பின்னணி என்று எதுவும் ரசிகர்களிடம் ஒட்டாமல் போகிறது.

ஜெ.சுகுமார்