‘கவண்’ திரைப்பட விமர்சனம்

April 03, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.03 (டி.என்.எஸ்) அசுர வளர்ச்சி மட்டும் இன்றி அதிவேக மாற்றம் ஏற்பட்டிருக்கும் ஊடகத்துறை சுவாரஸ்யமான செய்திகளுக்காக எப்படிபட்ட முறைகளை கையாளுகின்றன என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ‘கவண்’ ஊடகத்துறையின் முக்கியத்துவத்தையும், அவர்கள் செய்திகளை வெளியிடும் தற்போதைய விதம் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை ரொம்ப டீட்டய்லாக சொல்லியிருக்கிறது.


விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டியன் இருவரும் முன்னணி டிவி சேனல் ஒன்றில் வேலை செய்கிறார்கள். அந்த சேனலோ அரசியல்வாதி ஒருவரது வளர்ச்சிக்காக அவரது தவறுகளை மறைத்து அவரிடம் பணம் பெற்று அவருக்கு துதிபாடுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விஜய் சேதுபதி அண்ட் கோ, அந்த சேனலில் இருந்து வெளியேறி, லேக்கியம் விற்கும் டிவி சேனலான டி.ராஜேந்தர் நடத்தும் சேனலில் வேலைக்கு சேர்ந்து, அந்த முன்னணி சேனலின் உண்மையான முகத்தை வெளிச்சத்திற்கு காட்ட முயற்சிக்க, அதில் வென்றார்களா இல்லையா என்பது தான் கதை.

செய்திகளை செய்திகளாக அல்லாமல் ஒரு டிராமாவாக கொடுக்கும் டிவி சேனல்களை கடுமையாக விமர்சித்துள்ள இயக்குநர் கே.வி.ஆனந்த், ஆட்டம், பாட்டம் என்று சேனல்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு பின்னால் எப்படிப்பட்ட வியாபார அரசியல் இருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறார், உண்மைகளை வெளி உலகிற்கு சொல்லும் ஊடகங்கள் பணத்திற்காக அவற்றை மறைப்பதுடன், அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்காக எப்படிப்பட்ட சேவைகளை செய்து வருகின்றது என்பதையும் ரொம்ப அழுத்தமாக இப்படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டியன், டி.ராஜேந்தர், பாண்டியராஜன் என்று நெகட்டிவ் சைட் நடிகர்களும், ஆகாஷ்டீப் சேகல், போஸ் வெங்கட், பாவனா என்ற வேடத்தில் நடித்த பெண் என்று நெகட்டிவ்  சைட் நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

பொறுப்புள்ள மீடியாக்கள் தற்போது பொறுப்பற்ற நிலையில் இயங்குவதை சில இடங்களில் காமெடியாக சொல்லியும், பல இடங்களில் அறைவது போலவும் சொல்லியிருந்தாலும், மீடியாக்களுக்கு ஆதரவாகவும் சில விஷயங்களை சொல்லியிருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

ஹிப் ஆப் ஆதியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கவர்கிறது. அபிநந்தனின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் படத்தொகுப்பும் காட்சிகளை ஜெட் வேகத்தில் நகர்த்தினாலும், திரைக்கதை ஓட்டத்தை பாதிக்காமல் செயல்பட்டுள்ளது.

பொழுதுபோக்கான படங்களில் நல்ல விஷயங்கள் குறித்து சொல்லலாம் என்று பல முறை நிரூபித்த இயக்குநர் கே.வி.ஆனந்த், ‘கவண்’ மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

ஜெ.சுகுமார்