‘கடம்பன்’ திரைப்பட விமர்சனம்

April 15, 2017, Chennai

Ads after article title

டெல்லி, ஏப்.15 (டி.என்.எஸ்) காதல் மற்றும் ஆக்‌ஷன் கள ஹீரோவாக அறியப்பட்ட ஆர்யா, ’கடம்பன்’ மூலம் சமூக கள ஹீரோவாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.


மேற்கு தொடர்ச்சிமலைகளில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் சிமெண்ட் தயாரிப்பதற்கான ரசாயனப் பொருள் இருப்பதை கண்டறியும் நிறுவனம் ஒன்று, அரசாங்கத்திற்கு தெரியாமல் அந்த ரசாயனத்தை அபகறிக்க முடிவு செய்கிறது. ஆனால், அந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் இருக்கும் வரை அது நடக்காது என்பதை அறியும் அவர்கள், அம்மக்களை சாதுர்யமாக அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் தோல்வியடைகிறார்கள். பிறகு அவர்கள் அதிரடியை கையாள, அதனால் பாதிக்கப்படும் அந்த கூட்டம், எப்படி எதிரிகளை வீழ்த்தி அவர்களிடம் இருந்து அவர்களது காட்டை மீட்கிறார்கள், என்பது தான் ‘கடம்பன்’ படத்தின் கதை.

நயந்தாரா, ஹன்சிகா, தமன்னா என்று முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு, சந்தானம் போன்ற காமெடி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்தாலே போதும் ஆர்யாவின் படம் ஓரளவு வெற்றி பெற்று, லாபம் சம்பாதித்து விடும். ஆனால் அதையே தொடராமல், வித்தியாசமான முயற்சியாக இப்படிப்பட்ட படத்தில் நடித்த ஆர்யாவின் முயற்சிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கலாம். 

மலைவாழ் கூட்டத்தின் தலைவரது மகனாக நடித்துள்ள ஆர்யா, முறுக்கேறிய உடம்போடு மலைமீது ஓடி தேன் எடுக்கும் காட்சியிலேயே நம்மை அசர வைக்கிறார். நடிப்பை பொறுத்தவரை அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கும் ஆர்யா, ஆக்‌ஷன் காட்சிகளில் ரொம்பவே ஈடுபாடு காட்டியிருக்கிறார். அதுதான் படத்திற்கும் தேவையாக இருக்கிறது.

மலைவாழ் பெண்ணாக நடித்துள்ள ஹீரோயின் கேத்ரின் தெரஸாவுக்கு நடிப்பை வெளிக்காட்டும் வாய்ப்பு பெரிதாக இல்லை என்றாலும், சில ஆக்‌ஷன் காட்சிகளில் அடி வாங்குவதிலும், அடிப்பதிலும் அசத்தியிருப்பவர், காட்டன் புடவையில் அழகாகவும் இருக்கிறார்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என்று தமிழக விவசாய நிலங்களை சூறையாட காத்துக் கொண்டிருக்கும் அரசு திட்டங்களின் பாதிப்பை நமக்கு பாடமாக சொல்லாமல், கமர்ஷியலாக காட்டியிருக்கும் இப்படத்தில் ஹாலிவுட் ‘அவதார்’ போல கிராபிக்ஸ் காட்சிகள் கையாளப்படவில்லை என்றாலும், படம் பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும் அளவுக்கு செண்டிமெண்ட் காட்சிகளை இயக்குநர் ராகவா சிறப்பாகவே கையாண்டுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசையே அதிகமாக கவர்கிறது. எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவில் எது கிராபிக்ஸ், எது நிஜம் என்று தெரிந்துக் கொள்ளாத வகையில் காட்டுப் பகுதிகள் ரொம்ப நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது.

ஆர்யா தனது கையில் புலியை பச்சைக் குத்திக்கொண்டு இருப்பதோடு, அழிந்து வரும் புலி இனத்தை காக்க வேண்டும் என்று வசனம் பேசும் காட்சியில், இது காடுகளை பாதுகாப்பதற்கான படம் மட்டும் அல்ல, என்பதை மறைமுகமாக கடந்து செல்லும் இயக்குநர் ராகவா, சமூக சேவை என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் தரகர்களாக செயல்படுபவர்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

கேமரா முன்பாக ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தாலும், ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்த திலீப் சுப்புராயன் கேமராவுக்கு பின்னால் ஹீரோவாக இருக்க, அவரது பணிக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் தேவா.

மெசஜ் சொல்லும் படமாக இருந்தாலும், ஆர்யா என்ற கமர்ஷியல் ஹீரோவுக்கான படமாகவும் இப்படத்தை இயக்கியிருக்கும் ராகவா, தமிழ் சினிமாவில் நாம் பார்த்த கதையை தான் மீண்டும் சொல்லியிருக்கிறார் என்றாலும், தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் அதுவும் ஆர்யா போன்ற ஒரு ஹீரோவை வைத்து இப்படத்தை எடுத்திருப்பதற்காக அவரை தட்டிக்கொடுக்கலாம்.

மொத்தத்தில், நாம் கடந்து வந்த சினிமா தான் ‘கடம்பன்’ என்றாலும், நாம் மீண்டும் பார்த்து, நினைவுகூற வேண்டிய படமாகவே உள்ளது.

ஜெ.சுகுமார்