.

‘எவனவன்’ திரைப்பட விமர்சனம்

July 01, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஜூலை 01 (டி.என்.எஸ்) தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் ஆகியோர் தயாரிப்பில், ஜெ.நட்டிகுமார் இயக்கியிருக்கும் படம் ‘எவனவன்’.


ஹீரோ அகில், விளையாட்டுத் தனமாக தனது காதலி குளிப்பதை செல்போனில் வீடியோ எத்த்துவிட, அந்த செல்போன் தொலைந்துவிடுகிறது. அந்த செல்போன், மற்றொரு ஹீரோவான சரணிடம் கிடைக்க, அதை உரியவரிடத்தில் ஒப்படைத்துவிட அவர் முடிவு செய்கிறார். இதற்கிடையே, அகிலின் கோபத்தினாலும், அவசர புத்தியினாலும் அந்த போனில் இருக்கும் வீடியோவை சரண் பார்த்துவிட்டு, அதை வைத்து அகிலை பிளாக் மெயில் பண்ணுகிறார்.

தான் சொல்வதை செய்தால் தான் போனை திரும்ப தருவேன், என்று அகிலை மிரட்டும் சரண், சில விபரீதமான விஷயங்களை செய்ய சொல்கிறார். எதற்காக சரண் இப்படி செய்கிறார், என்ற சஸ்பென்ஸ் உடைவதற்கு முன்பாக, சரணை அகில் கொலை செய்துவிட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதையோடு சொல்லியிருக்கிறார்கள்.

தொலைந்த செல்போனை பின்னணியாக வைத்துக் கொண்டு காட்சிக்கு காட்சி சஸ்பென்ஸை வைத்து சுவார்ஸ்யமான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுக்காக எடுக்கப்படும் வீடியோக்களே பெரிய விபரீதத்தில் முடியும் என்பதை உணர்த்தும் வகையில், இணையதளங்களில் பரவும் ஆபாச வீடியோக்கள் குறித்து மேலோட்டமாக சொல்லப்பட்டிருந்தாலும், முழுப்படமும் சிறப்பான சஸ்பென்ஸ் திரில்லர் படமாக அமைந்துள்ளது.

அறிமுக நடிகர் அகிலின் இயல்பான நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அமைச்சரின் மீது செருப்பை வீசிவிட்டு, பிறகே அதே அமைச்சரின் வீட்டுக்கு சென்று பேசுவது, சரண் சொல்வதையெல்லாம் எந்தவித தயக்கமும் இன்றி செய்வது, என்று படம் முழுவதும் பதற்றமே இல்லாமல் நடித்திருக்கிறார்.

இரண்டாவது ஹீரோவான சரண், வில்லத்தனத்தையும், நல்லத்தனத்தையும் ஒருசேர செய்து, நடிப்பில் ஜொலிக்கிறார். போலீசாக வரும் சோனியா அகர்வால், வின்செண்ட் அசோகன் உள்ளிட்டவர்கள் தங்களது பணியை முழுமையாக செய்திருப்பது போல, படத்தில் வரும் அனைத்து நடிகர்களின் தேர்வும் கச்சிதமாக இருந்தாலும், ஹீரோயின் தான் படத்தின் மைனசாக இருக்கிறார். 

பெடோ பீட்டின் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும், பின்னணி இசை சற்று திரைக்கதைக்கு ஒத்துழைக்கும் விதத்தில் உள்ளது. ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத்தின் பணி திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை, பல இடங்களில் டிவிஸ்ட் வைத்து திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் நட்டிகுமார், ரொம்ப சிறிய பட்ஜெட்டில் நிறைவான  படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். சரணிடம் இருந்து அகில் செல் போனை வாங்குவாரா இல்லையா, என்பதே சுவார்ஸ்யமாக நகரும் சமயத்தில், திடீரென்று சரண் கொலை செய்யப்படுவது, கொலை செய்யப்பட்ட சரண் உயிரோடு வருவது, என்று அடுத்தக்கட்ட சுவாரஸ்யத்தை நோக்கி படம் நகரும் போது, ஹீரோயின் கடத்தல், சோனியா அகர்வாலின் மாற்றம், என்று அனைத்து டிவிஸ்டுகளும் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டுகிறது.

பட்ஜெட் காரணமாக காட்சிகளை படமாக்கிய விதம், காட்சிகளின் தரம் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாக சில குறைபாடுகள் இருந்தாலும், திரைக்கதையில் எந்தவித குறைபாடும் இல்லாத இந்த ‘எவனவன்’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

ஜெ.சுகுமார்