‘எங்க அம்மா ராணி’ திரைப்பட விமர்சனம்

May 05, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 05 (டி.என்.எஸ்) சூறாவளியாக ரசிகர்கள் கூட்டத்தை இழுத்து வரும் ‘பாகுபலி-2’ -க்காக பயந்து சில தமிழ்ப் படங்கள் ரிலிசாகமல் ஒதுங்கிக்கொள்ள, சூறாவளியாவது, சுனாமியாவது, ‘எங்க அம்மா ராணி’ அதுக்கும் மேல என்ற எண்ணத்தில் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி என்று பார்ப்போம்.


உயிரை பணய வைத்து ஒரு உயிரை உலகிற்கு கொண்டு வரும் அம்மாக்கள், அந்த உயிர் வளர்ந்த பிறகும் அவர்களுக்காக தங்களது உயிரையும் கொடுப்பார்கள், என்பதை திகில் பின்னணியில் சொல்லிருப்பதே இப்படத்தின் கதை.

மலேசியாவில் இரண்டு மகள்களுடன் வசித்து வரும் தன்ஷிகா, அலுவலக வேலையாக கம்போடியாவுக்கு சென்று காணாமல் போன தனது கணவர் குறித்து விசாரித்து வருகிறார். இதற்கிடையில், அவரது மகள்களில் ஒருவர் திடீரென்று மரணமடைய, அதற்கு காரணமாக வாயில் நுழையாத ஒரு நோயின் பெயரை சொல்கிறது மருத்துவர் குழு. எந்தவித அறிகுறியும் காட்டாமல் உயிரை காவு வாங்கும் அந்த நோய், தன்ஷிகாவின் மற்றொரு மகளுக்கும் இருக்க கூடும் என்று மருத்துவர்கள் சந்தேகப்பட்டு பரிசோதனை நடத்த, அவர்களது சந்தேகம் நிஜமாகிவிடுகிறது.

மருந்தே இல்லாத அந்த நோயை குணப்படுத்த முடியவில்லை என்றாலும் கட்டுப்படுத்த முடியும், என்று கூறும் மருத்துவர்கள், அதற்காக சில யோசனைகளையும் சொல்கிறார்கள். அதன்படி, மலைபிரதேசம் ஒன்றில் தனது மகளுடன் தன்ஷிகா வசிக்க, அந்த இடத்தில் அவரது மகள் மீது ஆவி ஒன்று புகுந்துவிடுகிறது. அந்த ஆவி யார், எதற்காக அது தன்ஷிகாவின் மகள் உடம்பில் புகுந்தது, என்பது ஒரு பக்கம் இருக்க, அந்த ஆவியால் தன்ஷிகா மகளுக்கு இருந்த நோய் இல்லாமல் போகிறது. மேலும், அந்த ஆவி உடலை விட்டு சென்றுவிட்டால் மீண்டும் அந்த நோய் அந்த பெண்ணுக்கு வந்துவிடும் என்ற நிலையில், வேறு ஆத்மா உள்ள உடலோடு தனது மகள் வாழ்ந்தாலும் பரவாயில்லை, அவள் உயிரோடு இருக்க வேண்டும், என்ற முடிவுக்கு வரும் தன்ஷிகாவுக்கு வேறு ஒரு வகையில் பிரச்சினை வர, அந்த பிரச்சினையை சமாளிக்க முடியாத தன்ஷிகா, தனது மகளை காப்பாற்ற என்ன செய்கிறார், என்பது தான் இப்படத்தின் க்ளைமாக்ஸ்.

உடல் உருப்புகளை தானமாக கொடுத்து ஒரு உயிரை காப்பாற்றும் இந்த விஞ்ஞான உலகத்தில், தனது மகளுக்காக ஒரு அம்மா இப்படி யோசிப்பாரா? என்பது ஆச்சரியமாக இருந்தாலும்,  அம்மா பாசம் அதைவிட மேலாக யோசிக்கும் என்பது தான் உண்மை.

படம் முழுவதுமே மலேசியாவில் நடப்பதால், ஏதோ குறும்படம் அல்லது வேறு ஒரு வகையான படத்தை பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும் இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ள தன்ஷிகா, முழு படத்தையும் தூக்கி சுமந்திருக்கிறார். தெரிந்த சில முகங்கள், தெரியாத பல முகங்கள் என்று படத்தில் ஏகப்பட்ட புதுமுகங்கள் இருந்தாலும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாகவே இருக்கிறார். ஒரு சில நிமிட காட்சிகளில் வரும் டாக்டர் சுதாகர் வேடத்தில் நடித்த ரியாஸ் அகமது உட்பட.

இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும், என்ற நம்பிக்கை வீண்போய்விட்டது, என்றே சொல்ல வேண்டும். “வாவா மகளே இன்னோரு பயணம்...” என்ற அந்த ஒரு பாடல் மட்டுமே ராஜாவை நினைக்க வைக்கிறதே தவிர, மற்றபடி படத்தின் பின்னணி இசை படத்திற்கு எந்த விதத்திலும் பலம் சேர்க்கவில்லை.

குமரன், சந்தோஷ் குமார் ஆகியோரது ஓளிப்பதிவில் இதுவரை சினிமாவில் பார்த்திராத மலேசியாவாவை பார்க்க முடிவதைப் போல, பல காட்சிகளில் கிராபிக்ஸ் இல்லாமலே பயமுறுத்தவும் செய்திருக்கிறார்கள்.

காணாமல் போன கணவரை தன்ஷிகா தேடும் போது, அவருக்கு என்ன நடந்திருக்கும் என்ற பரபரப்போடு தொடங்கும் படம், அவரது மகளின் திடீர் மரணத்தின் மூலம், அடுத்தது என்ன? என்ற ஆர்வம் ரசிகர்களை படத்தோடு  ஒன்றச் செய்துவிட, திடீர் ட்விஸ்ட்டாக திகில் சம்பவங்கள் ஆரம்பமானதும், திரைக்கதை வேகம் எடுக்க தொடங்கி, மீண்டும் அம்மா செண்டிமெண்ட்டில் பயணித்து, இறுதியில் ஒரு நல்ல படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.

அம்மா பாசத்தை சொல்லும் படம் தான் என்றாலும், அதற்கு இயக்குநர் எஸ்.பாணி திரைக்கதை அமைத்த விதம், அதில் திகில் கான்சப்ட்டை நுழைத்தது, அதை கையாண்டது போன்றவை படத்தை மற்ற திகில் படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. திரைக்கதையின் ஓட்டம், மூட நம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் அமைந்துள்ள க்ளைமாக்ஸ் போன்றவை சற்று படத்திற்கு பலவீனமாக அமைந்தாலும், அம்மான்னா சும்மா இல்ல என்பதை ‘எங்க அம்மா ராணி’ நிரூபித்துவிட்டது.

ஜெ.சுகுமார்