‘இலை’ திரைப்பட விமர்சனம்

April 20, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.20 (டி.என்.எஸ்) பெண் கல்வியை மையப்படுத்திய படமாக உருவாகியுள்ள ‘இலை, ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த பெண் ஒருவர் படிக்க எந்த அளவுக்கு சிரமப்படுகிறார் என்பதை விவரித்துள்ளது.


பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்று கேள்வி கேட்கும் வசதி வாய்ப்பு இல்லாத கிராமத்தில் பிறந்த ஹீரோயின் சுவாதி நாராயணன், நன்றாக படித்து சமூகத்தில் சாதிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்க, அவரது ஆர்வத்திற்கு ஆதரவு கொடுப்பதுடன், ஊக்கமும் அளித்து வருகிறார் அவரது தந்தை. இதற்கிடையே தன்னை விட நன்றாக படிப்பதால் அந்த ஊர் பண்ணையாரின் மகளுக்கு சுவாதியின் மீது பொறாமை ஏற்படுகிறது. அதே சமயம், சுவாதியின் முறை மாமன், சுவாதி பெரிய படிப்பு படித்துவிட்டால் தனக்கு கிடைக்காமல் போய்விடுவாலோ, என்று எண்ணுகிறார்.

இப்படி சுவாதியின் படிப்புக்கு எதிராக உருவாகும் சில எதிரிகள் அவரது அப்பாவை வீழ்த்தி அதன் மூலம் சுவாதியை 10ம் வகுப்பு இறுதி தேர்வை எழுதவிடாதபடி செய்ய நினைக்கிறார்கள். ஆனால், தனது அப்பாவின் கனவே தனது படிப்பு தான் என்று நினைக்கும் சுவாதி, இறுதி தேர்வு எழுத பெரும் போராட்டத்தையே எதிர்கொள்ள அதில் வெற்றி பெற்று தேர்வு எழுதினாரா இல்லையா, என்பதே இப்படத்தின் கதை.

ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் படிக்க அவரது தந்தை ஆதரவு அளித்தாலும், அவரது சூழல் எப்படி எதிராக மாறுகிறது என்பதை ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மையமாக வைத்து இயக்குநர் பினீஸ் ராஜ் சொல்லியிருக்கும் விதம் நமது பொருமையை அதிகமாக சோதித்தாலும், பல இடங்களில் நம்மை நகம் கடிக்க வைக்கிறது.

இலை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள டாக்டர் சுவாதி நாராயணன், கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதுடன் அவரது நடிப்பு அந்த கதாபாத்திரத்தை ரசிகர்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கிறது. தனது படிப்புக்கு ஆதரவாக இருக்கும் அப்பா உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் இருக்க, அதே சமயம் அவரது ஆசையை நிறைவேற்ற தேர்வு எழுத செல்ல புறப்படும் போது, அவருக்கு ஏற்படும் தடங்கல்களை அவர் எதிர்கொள்வது, அந்த காட்சிகளில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு, சினிமா என்பதை தாண்டி அவர் மீது பரிதாபப்பட வைக்கிறது.

இலையின் முறை மாமனாக நடித்துள்ள சுஜித் ஸ்டெபனோஸ், தந்தையாக நடித்துள்ள கிங் மோகன், அம்மாவாக நடித்துள்ள ஸ்ரீதேவி அனில் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் புதுமுகங்களாக இருந்தாலும், அவர்களது நடிப்பு கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. அதிலும், இலையை மிரட்டும் அந்த டீ கடை பெண்ணின் நடிப்பும், தோற்றமும், பல சொர்ணா அக்காக்களை நினைவுப்படுத்துகிறது.

கதைக்கு ஏற்ப அமைந்துள்ள இசையமைப்பாளர் விஷ்னு வி.திவாகரனின் பாடல்களும், பின்னணி இசையும் நம்மை வருடிச் செல்வது போல, ஒரே லொக்கேஷன் திரும்ப திரும்ப வந்தாலும் நம்மை சலிப்படைய செய்யாமல் பார்த்துக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அஞ்சால்.

குறிப்பிட்ட சில லொக்கேஷன்கள், குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு நல்ல கருத்தை சொல்ல நினைத்த இயக்குநர் பினீஸ் ராஜ், இலை தேர்வு எழுத செல்வதை மட்டுமே வைத்துக் கொண்டு அமைத்திருக்கும் திரைக்கதை ஆமை வேகத்தில் நகர்ந்தாலும், அந்த ஒரு விஷயத்தை மட்டுமே வைத்துக் கொண்டு திரைக்கதையில் அவர் காட்டிய பரபரப்புக்கு சபாஷ் சொல்ல வைக்கிறது.

இலை ஒவ்வொரு தடையையும் தாண்டி தாண்டி செல்லும் போதும், பள்ளியை காட்டும் பொழுதும், தேர்வு எழுதுவாரா?, அடுத்தது என்ன நடக்கும், என்ற பரபரப்பு படம் முழுவதும் பயணிக்க, இறுதியில் ஒரு டிவிட்ஸ்டை வைத்து க்ளைமாக்ஸியிலும் சிறு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கும் இயக்குநர் பினீஸ் ராஜுக்கு ஆயிரம் அப்ளாஸ் கொடுக்கலாம்.

15 வருடங்களுக்கு முன்பு எடுக்க வேண்டிய படம், என்று நாம் சொல்வதற்கு முன்பாக இயக்குநர் இந்த கதையை 1992 ஆம் ஆண்டு நடப்பது போல சித்தரித்துள்ளார். 

இலைக்கு இருந்தது போல, தற்போதைய காலகட்டத்தில் கல்வி கற்க பெண்களுக்கு சிக்கல் இல்லை என்றாலும், இப்படியும் ஒரு சூழல் இருந்தது என்பதை நமக்கு நினைவுப்படுத்திய இயக்குநர் பினீஸ் ராஜ், பெண் கல்விக்கு எந்த வகையிலும் தடையாக இருக்க கூடாது, என்பதை நமக்கு நினைவுப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளலாம்.

மொத்தத்தில், இலையை போல சிறிதாக இருந்தாலும் இந்த ‘இலை’ சொல்லிய விஷயம் ரொம்பவே பெருசு.

ஜெ.சுகுமார்