‘ஆரம்பமே அட்டகாசம்’ திரைப்பட விமர்சனம்

May 08, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 08 (டி.என்.எஸ்) காமெடி நடிகர் ’லொள்ளு சபா’ ஜீவா ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் ‘ஆரம்பமே அட்டகாசம்’, தலைப்பை போலவே இருக்கிறதா என்பதை பார்ப்போம்.


தனது அப்பாவின் ஆசைப்படி காதலித்து தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று இருக்கும் ஜீவா, நாயகி சங்கீதா பட்டுக்கு காதல் வலை வீச, அவரும் சிக்கி விடுகிறார். சாதாரண வேலையில் குறைந்த சம்பளம் வாங்கினாலும், தனது காதலி ஆசைப்பட்டு கேட்கும் அத்தனையையும் கடன் வாங்கியாவது வாங்கி கொடுக்கிறார். 

இதற்கிடையே வேலை விஷயமாக வெளியூர் செல்லும் ஜீவா, திரும்பி வந்து பார்க்கும் போது அவரது காதலி காணாமல் போக, அவர் குறித்து எந்த தகவலும் தெரியாமல் தவித்து வருகிறார். பிறகு தான் தெரிகிறது அவர் ஜீவாவைக் காட்டிலும் வசதியான ஒருவருடன் காதல் வயப்பட்டிருப்பது. விஷயத்தை அறிந்து நியாயம் கேட்கும் ஜீவாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் சங்கீதா, தனது பணக்கார காதலரை கரம் பிடிக்க ரெடியாக, காதல் தோல்வியில் கலங்கும் ஜீவா, சங்கீதாவை மட்டுமல்ல, இதுபோல பணத்துக்காக காதலனை மாற்றும் அனைத்து பெண்களையும் கலங்கடிக்க வைக்கும் அளவுக்கு ஒரு விஷயத்தை செய்கிறார், அது என்ன? என்பது தான் இப்படத்தின் க்ளைமாக்ஸாக மட்டுமல்ல கதையாகவும் இருக்கிறது.

சின்னத்திரையில் நடித்த அளவுக்கு கூட பெரிய திரையில் பெரிய கதாபாத்திரமோ அல்லது பெரிய காமெடி வேடத்திலோ நடிக்காத ஜீவா, ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளும் தன்னிடம் இருக்கிறது என்பதை டீட்டய்லாக இந்த படத்தில்காட்டியிருக்கிறார். காமெடி தான் தனது பலம் என்று படம் முழுவதும் பேசியே நம்மை கொல்லாமல், எந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் ரொம்ப தெளிவாக இருக்கும் ஜீவா, ரொமன்ஸ் மற்றும் செண்டிமெண்ட் இரண்டையுமே சிறப்பாக கையாண்டிருப்பதுடன், கோடம்பாக்க ஹீரோக்களுக்களின் முக்கிய தகுதியான டான்ஸிலும் ஒரு கை பார்த்திருக்கிறார்.

ஹீரோயின் சங்கீதா பட், ஏதோ ஒப்புக்கு சப்பானியாக அல்லாமல், நடிக்க வாய்ப்புள்ள தனது கதாபாத்திரத்தை சிறப்பாகவே கையாண்டிருப்பதுடன், ஒரு பக்கம் ஹீரோயினாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர், காதலர்களை மாற்றிக் கொண்டே செல்வது, அவர்கள் பர்சை காலி பண்ணுவது என்று மறுபக்கம் காதல் வில்லியாக பர்பாமன்ஸில் அசத்தியிருக்கிறார்.

சாம்ஸ், வையாபுரி ஆகியோரது நகைச்சுவை காட்சிகள் தூசு தட்டப்பட்டவை தான் என்றாலும், அவற்றுடன் ஜீவாவின் காமெடியும் கலப்பதால் பல இடங்களில் சிரிக்க முடிகிறது.

ஜெய கே.தாஸின் இசையும், ஆனந்தின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப பயணித்தாலும், பாடல்கள் குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லை.

இயக்குநர் ரங்கா இந்த படத்தில் சொல்லியிருக்கும் விஷயம் சிறியது தான் என்றாலும், காதலிகளால் கழட்டிவிடப்பட்ட காதலர்கள், இப்படத்தை கொண்டாடும் அளவுக்கு ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார். 

ஒன் சைடு காதல் தோல்விக்கே கத்தி, ஆசிட் என்று பெண்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி வரும் தற்போதைய காலக்கட்டத்தில், காதலித்துவிட்டு ஏமாற்றும் பெண்ணுக்கு ஆண்கள் எத்தகைய தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை, வன்முறையை தூண்டும் காட்சிகளோ அல்லது வசனங்களோ அல்லாமல் சொல்லியிருக்கும் இயக்குநர் ரங்காவை பெண்களே பாராட்டுவார்கள்.

கண்டதும் காதல், பிறகு காதலில் வெற்றி, தோல்வி, ஏமாற்றம் என்று படம் சாதாரணமாக நகர்ந்தாலும், தான் சொல்ல வந்ததை ரொம்பவே சுருக்கமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஆரமம்பத்தில் அட்டகாசப்படுத்தவில்லை என்றாலும், க்ளைமாக்ஸின் போது அட்டகாசப்படுத்தியிருக்கிறார். 

ஜெ.சுகுமார்