‘அய்யனார் வீதி’ திரைப்பட விமர்சனம்

April 28, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்,.28 (டி.என்.எஸ்) பிராமணரான பாக்யராஜ் ஊர் நன்மைக்காக அய்யனராக அவதாரம் எடுக்கிறார், அது எதற்காக, அதன் பின்னணி என்ன என்பது தான் ‘அய்யனார் வீதி’ படத்தின் ஒன் லைன்.


ஊர் பெரியவராக இருக்கும் பொன்வண்ணன், காவல் தெய்வம் அய்யனராகவும் வலம் வர, அவரை பழி வாங்க வில்லன் செந்தில்வேலின் குடும்பமே காத்திருக்கிறது. இதற்கிடையில் வில்லன் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு யுவன், பொன்வண்ணனின் மகளை காதலிப்பதோடு, கல்லூரியில் படிக்கும் பாக்யராஜின் பெண்ணுக்கும் காதல் தொல்லை கொடுக்க, இருவரில் யார் அவருக்கு காதலியானார்கள் என்பது ஒரு பக்கம் இருக்க, கோவில் திருவிழாவில் தீர்த்தத்தில் விஷம் கலந்து ஊர் மக்களை கொலை செய்ய வில்லன் கோஷ்ட்டி திட்டமிடுகிறார்கள்.

இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழாவில் அய்யனராக வேடம் போட்டு வேட்டைக்கு போகும் பொன்வண்ணனுக்கு பதில் பாக்யராஜ் அய்யனராகும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்கான காரணம் என்ன, வில்லன் கோஷ்ட்டியின் திட்டம் என்னவானது, என்பதே அய்யனார் வீதி படத்தின் கதை.

மண் சார்ந்த ஒரு பதிவாக இந்த ‘அய்யனார் வீதி’ படத்தை உருவாக்க நினைத்திருக்கும் இயக்குநர் ஜிப்சி ராஜ்குமார், பல காட்சிகளை எடுக்க மறந்துவிட்டது போலவே படத்தை நகர்த்தியிருக்கிறார். வெட்டி வைத்த காட்சிகளை சரியாக கோர்க்காத வகையில் கண்டினியூட்டி இல்லாமல் படம் நகர்வதால், கதாபாத்திரங்கள் மனதில் நிற்காமல் போகின்றன. இருப்பினும், வில்லனாக அறிமுகமாகியுள்ள செந்தில்வேல் தனது ஆக்ரோஷமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நின்றுவிடுகிறார்.

மதம் வேற்றுமை, போதை பழக்கம் இவற்றுக்கு எதிரான கருத்துக்களை சொல்லி, மண் சார்ந்த பதிவாக வெளியாகியிருக்கும் ‘அய்யனார் வீதி’ படத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், ஒரு முறை பார்க்ககூடிய விதத்தில் படத்தை விறுவிறுப்பாகவே கையாண்டுள்ளார் இயக்குநர் ஜிப்சி ராஜ்குமார்.

ஜெ.சுகுமார்