.

‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ திரைப்பட விமர்சனம்

June 30, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஜூன் 30 (டி.என்.எஸ்) இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’.


கிட்டார் இசைக் கலைஞரான ஹீரோ உமாபதி, எங்கு என்றாலும் எப்போதும் தனது கிட்டாரையும் கூடவே எடுத்து செல்கிறர். அந்த கிட்டாரில், தனது புகைப்படத்துடன், வீட்டு விலாசம், போன் நம்பர், என்று தனது அனைத்து தகவல்களையும் எழுதி வைத்திருக்கிறார். இதற்கிடையே, தனது செக்யூரிட்டி நண்பனுக்கு உதவி செய்ய உமாபதி செல்ல, அந்த நேரத்தில் அந்த வீட்டினுள் நுழையும் திருடர்கள், பணம் மற்றும் நகையை திருடாமல் வேறொன்றை அங்கிருந்து எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். அந்த இடத்தில் தனது கிட்டாரை தொலைத்துவிடும் உமாபதி, தன்னை பற்றி முழு தகவல்களும் இருக்கும் கிட்டார் போலீஸ் கையில் கிடைத்தால், திருட்டு சம்பவத்தில் தன்னை தொடர்பு படுத்திவிடுவார்களே, என்ற அச்சத்தில் தனது கிட்டாரை தேடுபவர், கிட்டாரை கண்டுபிடித்தாரா இல்லையா, அந்த திருடர்கள் யார், அந்த வீட்டுக்குள் எதை திருடினார்கள், என்பதை காமெடி கலந்த காதல் படமாக சொல்லியிருக்கிறார்கள்.

அறிமுக ஹீரோ உமாபதி, நடிப்பதைக் காட்டிலும் நடனத்தில் தான் அசத்துகிறார். அவரது குரல் குழந்தைத்தனமாக இருப்பதால், வசன உச்சரிப்பின் போது சற்று தடுமாற்றம் அடைகிறார். 

ஹீரோயின் ரேஷ்மா ரத்தோர் முட்டை கண் அழகியாக இருக்கிறார். ஆக்‌ஷன் மற்றும் பாடல்களில் பியூட்டியான எக்ஸ்பிரஷன்களால் லைக்குகளை அள்ளுகிறார்.

தனது காமெடியின் மூலம் பல இடங்களில் குபீர் சிரிப்பை வரவைக்கும் கருணாகரன், காமெடி வேடத்தைக் கடந்தும் தன்னை வித்தியாசமாக காட்டிக்கொண்டிருப்பது புதிதாக இருக்கிறது. எபோதும் போல தனது கதாபாத்திரத்தில் நூறு சதவீத நடிப்பை கொடுத்திருக்கிறார் நரேன். இதுவரை காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்த மனோபாலா, இந்த படத்தில் வில்லனாக நடித்து சிரிக்க வைக்கிறார்.

இமானின் இசையில் அனைத்து பாடல்களும் அருமையான மொலொடிகளாக உள்ளன. குறிப்பாக, ”இதற்குத்தானே...” என்ற பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். வர்மாவின் ஒளிப்பதிவும் மதனின் படத்தொகுப்பு நேர்த்தி.

இயக்குநர் இன்பசேகரின் கதையில் புதுமையில்லை என்றாலும், திரைக்கதையும், காட்சிகளும் கலகலப்பாக சிரிக்க வைக்கிறது.

ஜெ.சுகுமார்