.

ஹஜ் யாத்திரைக்கு தமிழக அரசு அறிவித்த மானியத்திற்கு இந்து முன்னணி எதிர்ப்பு

July 05, 2018, Chennai

Ads after article title

ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு  மானியமாக ரூ.6 கோடி வழங்கப்படும், என்று தமிழக அரசு அறிவித்ததற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


இது குறித்தது இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் இராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி ஹஜ் யாத்திரை செல்வதற்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை இந்த ஆண்டு நிறுத்துவதாக அறிவித்தது. ஆனால், சட்டசபையில், ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 கோடி நிதியை ஹஜ் செல்லும் முஸ்லிம்களுக்கு மானியமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு முரணாக இருக்கிறது.

மக்களின் வரிப் பணத்தை ஒரு மதத்தினரின் நம்பிக்கைக்கு அள்ளிக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுபோல கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லவும் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ, முஸ்லீம் மதத்தினருக்கு மட்டும் இதுபோன்ற சலுகைகளை வழங்குகிறார்கள். அதே சமயம் இந்துக்களுக்கு முக்திநாத், மானசரோவர் யாத்திரைக்கு தருவதாக அறிவிப்பு செய்யும் நிதி உதவி இந்துசமய அறநிலையத் துறையால், இந்து ஆலயங்களிலிருந்து தரப்படும் நிதி ஆகும்.

ஜெருசலேம், ஹஜ் யாத்திரைக்கு தரப்படும் நிதி பொது நிதியிலிருந்து தரப்படுகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கையால் அரசியல்வாதிகள் பேசும் மதச்சார்பின்மை போலித்தனமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

உச்சநீதி மன்றம் ஹஜ் யாத்திரை மானியத்தை நிறுத்திட உத்திரவிட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு இந்த அறிவிப்புகளைத் திரும்பப் பெற வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.