ஸ்ரீராம நவமி - ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என்று உலகிற்கு வாழ்ந்து காட்டிய இராமபிரான்

April 05, 2017, Chennai

Ads after article title

“தாயிற் சிறந்த கோடிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை”

தன் வாழ் நாளில் இவற்றை பின்பற்றி வாழ்ந்தவர் இராமன்.


ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என்று உலகிற்கு வாழ்ந்து காட்டியவர். கடவுளேயானாலும் மனிதனாக பிறந்து அனைத்து இன்னல்களையும்  கடந்து சிறப்பான ஆட்சியை வழங்கிய சக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீராமன் பிறந்த தினம் ஸ்ரீராமநவமி இன்று கொண்டாடபடுகிறது. 

பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார் இராமன். இவர் பிறந்த வேளையில் ஐந்து கிரகங்களும் உச்சத்தில் இருந்தன. அதனால் இராமனது ஜாதகத்தை எழுதி வீட்டு பூஜை அறையில் வைத்து தினமும் பூஜை செய்பவர்களுக்கு நவகிரக தோஷம் நீங்கும். ஐஸ்வர்யம் பெருகும் என்பர். 

ஸ்ரீராம நவமியன்று அதிகாலை எழுந்து குளித்து, வீட்டை சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இராமர் படத்தை சுத்தம் செய்து, சந்தனம் குங்குமத்தால் பொட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும். அருகில் உள்ள விஷ்ணு ஆலயங்களுக்கு செல்லலாம். வீட்டில் பூஜை செய்பவர்கள் துளசிமாலை, பூ, பழம், வெற்றிலை பாக்கு கொண்டு பூஜை செய்து சாதம், பாயசம். நீர்மோர், வடை போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். உண்ணாமல் விரதம் இருந்து இராம நாமத்தை பாராயணம் செய்பவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருள் கிட்டும். 108 முறை அல்லது 1008 முறை ஸ்ரீராம ஜெயம் எழுதலாம். 

இராமர் பிறந்தது கோடை காலத்தில். அவரை காண வருவோருக்கு நீர் மோரும் விசிறியும் தந்து உபசரிப்பார் அரசர் தசரதர். அதே போல 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டவருக்கு சேவை செய்வதற்கு  அடையாளமாக  விசிறியை தானமாக வழங்குவர்.