.

ஸ்ரீபெரும்பத்தூரில் ரூ.4000 கோடியில் டயர் தொழிற்சாலை - சியட் நிறுவனம் அமைக்கிறது

July 05, 2018, Chennai

Ads after article title

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்பத்தூரில் ரூ.4000 கோடி செலவில்  சியட் நிறுவனம் அமைக்க இருக்கும் டயர் உற்பத்தி தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று  கையெழுத்தானது.


 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்யவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்காரணமாக, தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மதுரமங்கலம் கிராமத்தில் இந்தியாவின் பெருந்தொழில் நிறுவனங்களில் ஒன்றான சியட் நிறுவனம், டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து 10 ஆண்டு காலத்திற்குள் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்து 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழக அரசு சார்பில் தொழில் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஞானதேசிகனும், சியட் நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அனந்த் கோயங்காவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்." என்று தெரிவித்துள்ளனர்.