.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - சரத்குமார் அறிக்கை

July 06, 2018, Chennai

Ads after article title

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதா என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.


 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில், கடந்த மே 28 ஆம் தேதி ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்ததை வரவேற்றோம்.

தற்போது ஆலையை மீண்டும் திறக்கக்கோரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், தமிழக அரசின் அரசாணை மீது இடைக்காலத்தடை விதிக்க இயலாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் வரும் 18 ஆம்  தேதிக்குள் ஸ்டெர்லைட் ஆலை குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாததை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். மேலும் தீவிர மக்கள் போராட்டத்துக்கும், 13 பேரின் உயிர் தியாகத்துக்கு பிறகும் கிடைக்கப்பெற்ற தீர்வு, நிரந்தரத்தீர்வாக அமையுமாறு சட்டரீதியில் இப்பிரச்சினையை அணுக வேண்டும்.

இவ்வாறு  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.