வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்த இஸ்லாமிய திருமணம்

May 09, 2017, Chennai

Ads after article title

லக்னோ, மே 09 (டி.என்.எஸ்) திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது, என்பது மாறி, இண்டர்நெட்டிலும், கம்ப்யூட்டரிலும் நிச்சயக்கப்படுகிறது, என்ற ரீதியில், வெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளை வர முடியாத சூழ்நிலையில், இண்டர்நெட் உதவியோடு, வீடியோ கான்பிரன்சிங் மூலமாக திருமண நிச்சயதார்த்தங்கள் நடைபெற்றுவது சகஜமாகிவிட்ட நிலையில், திருமணமே தற்போது வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நடைபெற தொடங்கியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் முஹம்மது ஆபித். சவுதி அரேபியா நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் இவருக்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், தவிர்க்க முடியாத சூழ்நிலையால் திருமண நாளான கடந்த 5 ஆம் தேதி மணமகன் முஹம்மது ஆபித் இந்தியாவுக்கு வர இயலாமல் போனது. இதனால், பெண் வீட்டார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 

இந்நிலையில், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை குறித்த நேரத்துக்குள் நவீனகால வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடத்திவிட மணமகனின் தந்தையான ரேஹான் தீர்மானித்தார்.

இதையடுத்து, மணக்கோலத்தில் முஹம்மது ஆபித் சவுதி அரேபியாவில் தனது நண்பர்கள் புடைசூழ அமர்ந்திருக்கும் காட்சியுடன் அங்குள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முன்னிலையில் இந்த திருமணத்துக்கு அவரது சம்மதம் பெறப்பட்ட காட்சியும், ஷாம்லி மாவட்டத்தில் இருக்கும் மணமகள் வீட்டில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அகன்ற திரையில் ஒளிபரப்பட்டது.

அதேவேளையில், இன்னொரு கேமரா மூலம் மணமகள் சம்மதம் தெரிவிக்கும் காட்சி ஒளிபரப்பானது. இப்படி வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள், திரையை நோக்கி தங்களது ஆசீர்வாதத்தை தெரிவித்தனர்.