விஜயம் தரும் விஜய தசமி! தமிழ் நாட்டில் தசரா!

October 11, 2016, Chennai

Ads after article title

துர்கா பூஜையின் நிறைவு நாள். அன்னை பராசக்தி மகிஷாசுரனை வதம் செய்து  வெற்றி கண்ட  திருநாள் தான் விஜயதசமி.


இந்த தினத்தில் தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம்.இத் திருநாளில் (வித்தியாரம்பம் செய்தல்) ஏடு தொடக்குதல், புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல், புதிய தொழில் ஸ்தாபனங்கள் ஆரம்பித்தால் வெற்றியும் புகழும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

விஜயதசமி நாளில் தொழில் தொடங்கினால் கை கூடுமா? இதற்கு பதில் நிச்சயம் கை கூடும். தொழில் தொடங்குவதற்கு முன் நமக்கு முன் அனுபவம், அந்த தொழிலில் எவ்வாறு வெற்றி காண்பது இதற்கெல்லாம் நமக்கு விடை தெரிந்தால் மட்டுமே வெற்றி காண கூடும். 'செய்யும் தொழிலே தெய்வம்' என்பது நம் கலாச்சாரத்தில் ஒன்றிணைந்த பண்பாடு. அந்த விதத்தில் விஜய தசமி திருநாளன்று நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை அகற்றி வாழ்வில் நம்பிக்கையும் மன தைரியமும் கொண்டு புது தொழிலில் காலடி பதித்தால் நிச்சயம் கைகூடும் என்பது நம்பிக்கை.

விஜய தசமி தினத்தில் வன்னி வாழை வெட்டுதல் என்பது கோவில்களில் கடைபிடிக்கபடுகிறது.  மகிஷாசுரன் துர்க்காதேவியின் அகோர கோபத்தைத் தாங்க முடியாது வன்னி மரத்தில் மறைந்து ஒழிந்திருந்த போதும், அம்மன் அவனைத் தேடிச்சென்று வதம் செய்வதையும் இந்த  வாழை வெட்டுதல் நினைவூட்டுகின்றது. நடை முறையில்  வன்னி வாழை வெட்டுதல் என்பது சாத்தியம் அல்ல அதற்கு பதிலாக வாழை வெட்டுதல் என்பது காலம் காலமாக பின் தொடரப்படுகிறது.

தசரா வட மாநிலங்களில் மட்டும் அல்ல தமிழ் நாட்டில் கூட விமர்சையாக கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் அருகே அமைத்திருக்கும் குலசேகரபட்டினத்தில் பக்தர்கள் வித விதமான காளி வேடம் அணிந்து அம்மனை தரிசிக்கின்றனர்.  காளி வேஷம் உட்பட எந்த வேஷமாக இருந்தாலும், காப்பு கட்டிக்கொண்டு, விரதம் இருந்து அன்னையை வழிபட வேண்டும். இந்த கோவிலில் சிறப்பு என்று சொன்னால் அம்மனின் உத்தரவை பூ போட்டு கேட்ட பின்னரே எந்த காரியத்தையும் தொடங்குவர்.

மக்கள் தங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனாலோ அல்லது ஏதாவது கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றாலோ, குலசை முத்தாரம்மனிடம் வேண்டுதல் வைத்து பலித்துவிட்டால், தங்கள் மனதில் என்ன வேஷம் கட்ட வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த வேஷத்தில் தொடர்ந்து மூன்று வருஷம் தசரா அன்று அம்பிகையை வந்து தரிசித்து வணங்குவார்கள். மூன்று வருஷத்துக்குப் பிறகும் வேஷம் கட்டிக்கொண்டு வர விரும்பினால், அம்பாள் சந்நிதியில் பூப்போட்டு உத்தரவு கிடைத்த பிறகுதான், என்ன வேஷம் வருகிறதோ அந்த வேஷத்தில் அம்பாளை தரிசிக்க வரலாம்.

நவராத்திரியை நிறைவு செய்வதன் பொருட்டு  பால் நிவேதனம் செய்து பொம்மைகளைப் படுக்க வைத்து  பூஜையிலிருந்து கொலு பொம்மைகளை எடுத்து அடுத்த வருடத்துக்காக அம்பாளை வரவேற்க தயாராக வேண்டும்.