வடபழனி தீ விபத்து வழக்கு : வீட்டின் உரிமையாளர் மாயம்

May 10, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 10 (டி.என்.எஸ்) சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியியிருப்பில் நேற்று முன் தினம் அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.


இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த வீடு அரசு புறம்போக்கு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அந்த வீடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் நிலுவையில் இருப்பதாகவும், கடந்த ஆண்டே அந்த வீட்டை இடிக்க கோரி மாநகராட்சி நோடீஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

அந்த வீட்டின் உரிமையாளர் விஜயகுமார் அதிமுக பிரமுகர் என்றும், அப்பகுதியில் முக்கியபுள்ளியாக வலம் வந்தவர் என்றும் கூறப்படுகிறது. மேலும், சம்பவம் நடந்த அன்று விஜயகுமார் தனது குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக புதுச்சேரி சென்றிருக்கிறார்.

சம்பவம் குறித்து அவரிடம் போனில் தெரிவித்த போலீசார் விசாரணைக்கு உடனடியாக வரும்படி அழைத்துள்ளனர். வருவதாக கூறிய விஜயகுமார் இதுவரை வரவில்லையாம். மேலும் அவரது செல்போனும் அனைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரது நண்பர் ஒருவர் மூலம் விசாரணைக்கு வருகிறேன், என்ற தகவல் மட்டும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, வீட்டு உரிமையாளர் கைது செய்யப்படுவாரா? என்று போலீசாரிடம் கேட்டதற்கு, அவரிடம் நேரில் விசாரணை நடத்திய பிறகே கைது செய்யப்படுவாரா இல்லையா, என்பது சொல்ல முடியும், என்று தெரிவித்தனர்.