.

ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடனை தள்ளுபடி செய்த கர்நாடக அரசு

July 06, 2018, Chennai

Ads after article title

ரூ.34 ஆயிரம் கொடிக்கான விவசாய கடனை கர்நாடக அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக முதல்வராக  பொறுப்பேற்றுள்ள குமாரசாமி அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.


சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர்  குமாரசாமி, 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம்  தேதி இந்த சபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்படும். அதுபோல் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* 1,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு தொடங்கப்படும்

* அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும்.

* 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள 28 ஆயிரத்து 847 பள்ளிகள் அருகாமையில் உள்ள 8 ஆயிரத்து 530 பள்ளிகளுடன் இணைக்கப்படும்.

* கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் நிலுவையில் உள்ள அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். அதாவது ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* கடனை சரியாக செலுத்தி வரும் விவசாயிகளுக்கு மொத்த கடனில் ரூ.25 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.

* சம்பந்தப்பட்ட அமைப்பின் அனுமதியை பெற்று மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* பெங்களூரு 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் புதிதாக 95 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படும்.

* பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரி தலா 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

* மதுபானங்கள் மீதான கூடுதல் கலால் வரி 4 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

* மின்சார பயன்பாடு மீதான வரி 9 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

இவ்வாறு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.