ரஜினி குழப்பமான மனநிலையில் இருக்கிறார் : நண்பர் ராஜ்பகதூர்

May 18, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 18 (டி.என்.எஸ்) அரசியல் குறித்து நடிகர் ரஜினிகாந்த மிகுந்த குழப்பத்தில் இருப்பதாக, அவரது நெருங்கிய கர்நாடக நண்பர் ராஜ்பகதூர் கருத்து தெரிவித்துள்ளார்.


பெங்களூரில் பேருந்து கண்டக்டராக பணிபுரிந்த போது ரஜினிகாந்தும், அதே பேருந்தில் டிரவராக இருந்த ராஜ்பகதூர் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். ரஜினிகாந்த் சென்னை திரைப்பட கல்லூரியில் சேர்ந்து படிக்க ராஜ்பகதூர் பெரும் உதவி செய்ததால், ரஜினிகாந்த் அவரை ‘வள்ளி’ படத்தில் நடிக்க வைத்து அவருக்கு பண உதவியும் செய்தார்.

அதேபோல், ரஜினி அரசியல், ஆன்மீகம் உள்ளிட்டவை குறித்து ஏதாவது திடீர் கருத்து கூறினால், அது குறித்து அவரது அண்ணன் சத்யநாராயணனோ அல்லது அவரது நண்பர்கள் சிலரோ கருத்து தெரிவிப்பதும் வழக்கம், அந்த வகையில், தற்போது நடந்து வரும் ரசிகர்கள் சந்திப்பின் போது ரஜினி கூறிய அரசியல் கருத்து குறித்து அவரது நண்பர் ராஜ்பகதூர் கருத்து கூறுகையில், “நடிகர் ரஜினி ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 8-ந்தேதி பெங்களூர் வந்தார். அப்போது நான் அவரை சந்தித்துப் பேசினேன். அப்போது அவர் மிகுந்த டென்‌ஷனுடன் காணப்பட்டார்.

அவ்வளவு டென்‌ஷனாக நான் இதுவரை ரஜினியைப் பார்த்ததே இல்லை. அரசியலில் ஈடுபடுவதா? அல்லது வேண்டாமா? என்ற குழப்பமான மன நிலையில் அவர் இருக்கிறார். இரு தலைக்கொள்ளி எறும்பாக அவர் தவித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் ரஜினி புதிய அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் விருப்பமாக உள்ளது. நானும் அதையே விரும்புகிறேன்.

தற்போது ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து பேசி, புகைப்படம் எடுத்து வருகிறார். கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்று அவர் சூசகமாக கூறியுள்ளார்.அவரது ஆன்மீகக் குரு மகா அவதார் பாபாஜி நிச்சயம் நல்ல வழியை காட்டுவார். அப்போது ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வருவார்.” என்று தெரிவித்தார்.