.

மேகதாதுவில் அணை கட்டியே ஆகவேண்டும்! - கர்நாடக முதல்வர் பிடிவாதம்

August 10, 2018, Chennai

Ads after article title

மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன், என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பிடிவாதமாக இருப்பதோடு, இது குறித்து தமிழக முதல்வரிடம் பேச்சு வார்த்தை நடத்தவும் முடிவு செய்திருக்கிறார்.


ஏற்கனவே காவிரி ஆற்றில் அணைகள் கட்டி தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரை தடுத்தி நிறுத்தும் கர்நாடக அரசிடம் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீரை பெறுவது தமிழகத்திற்கும், தமிழக விவசாயிகளுக்கும் மிகப்பெரிய போராட்டமாக அமைந்துவிடுகிறது.

இதற்கிடையே, இந்த ஆண்டு கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக அம்மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பியதால் அவை திறக்கப்பட்டு அந்த தண்ணீர் தமிழகத்திற்கு வந்துக்கொண்டிருக்கிறது.

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை சேமித்து வைப்பதற்காக காவிரி ஓடும் மேகதாது என்ற இடத்தில் ஒரு புதிய அணையை கட்ட கர்நாடகம் முயற்சித்து வருகிறது. ஆனால், இதற்கு தமிழக அரசும், தமிழக விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே, புதிதாக முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் குமரசாமியும், மேகதாதுவில் அணை கட்டுவதில் மும்முரம் காட்டி வருகிறார்.

இது குறித்து அவர் கர்நாடக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசுகையில், “கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அதனால் இப்போது கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 71 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நாளை (அதாவது இன்று) முதல் இன்னும் அதிகளவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு வரை திறக்க வேண்டிய நீரை இப்போது திறந்துவிடுகிறோம்.

ஒரு நாளைக்கு சராசரியாக 10 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் தமிழகத்திற்கு செல்கிறது. இந்த நீர் வீணாக கடலில் கலக்கிறது. இது யாருக்கும் பயன் இல்லை. அதனால் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

மேகதாதுவில் அணை கட்டுவதால் கர்நாடகத்தை விட தமிழகத்திற்கு தான் அதிக பயன் கிடைக்கும். அதனால் கர்நாடகம் தனது சொந்த செலவில் அணை கட்ட தயாராக உள்ளது. நமது விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றால் மேகதாதுவில் அணை கட்டியே ஆக வேண்டும். வேறு வழி இல்லை.

தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இதுபற்றி பேசுவேன். அங்குள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து இதுபற்றி எடுத்துக்கூற நான் தயாராக உள்ளேன். இது தொடர்பாக அவர்களுக்கு கடிதம் எழுதுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.