.

முன்னாள் கால்பந்து வீரர் மரடோனாவுக்கு கால்பந்து சம்மேளனம் கண்டனம்

July 06, 2018, Chennai

Ads after article title

நடுவருக்கு எதிராக கருத்து கூறிய முன்னாள் கால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு உலக கால்பந்து சம்மேளமான பிபா கண்டனம் தெரிவித்துள்ளது.


ரஷ்யாவின் நடைபெற்று வரும் 21 வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காலியிறுதிப் போட்டிகள் இன்று தொடங்க இருக்கின்றன.

இதற்கிடையே, முன்னதாக நடைபெற்ற இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் இடையிலான நாக் அவுட் போட்டியில், வழக்கமான மற்றும் கூடுதல் நேரம் முடிவில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி காலியிறுதிக்கு முன்னேறியது.

இந்த போட்டியில், நடுவர் ஜிஜெர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார். அவரது சில முடிவுகள் இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்தன, என்று கொலம்பியா கேப்டன் ராடமெல் பால்காவ் குற்றம் சாட்டினார்.

அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த மரடோனா, "இங்கிலாந்து நினைவுகூரத்தக்க ஒரு வழிப்பறியை செய்து விட்டது. இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன், கொலம்பியா வீரர் கார்லஸ் சாஞ்சசை பவுல் செய்ததற்காக கொலம்பியாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ‘இங்கு ஒரு ‘ஜென்டில்மேன்’ தீர்ப்பளிக்கிறார். அவர் தான் போட்டி நடுவர். அவரை போன்ற ‘நேர்மையான நடுவர்’ கூகுளில் தேடிப்பார்த்தாலும் கிடைக்கமாட்டார். அந்த நடுவர் ஜிஜெர் ஒரு அமெரிக்கர்.... என்னவொரு எதிர்பாராத பொருத்தம்" என்று கருத்து கூறியிருந்தார்.

மரடோனாவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் சர்வதேச கால்பந்து சம்மேளனம், நடுவருக்கு எதிரான மரடோனாவின் கருத்து முற்றிலும் நியாயமற்றது, என்று தெரிவித்துள்ளது.