பேதம் பார்க்கா நவராத்திரி! நவராத்திரி தாம்பூலத்தில் கவனிக்க வேண்டியவை

October 04, 2016, Chennai

Ads after article title

நவராத்திரியின் ஒன்பது நாட்கள் சாந்தரூபியாக தவம் மேற்கொண்டு வீற்றிருக்கும் தேவியானவள், 10ஆம் நாளின் (தசரா) விசுவரூபியாக அசுர பலத்துடன் ஆக்ரோஷமாக உருவெடுத்து, மகிஷாசுரனை வதம் செய்து மக்களுக்கு மகிழ்ச்சி நல்கும் ஆனந்த ரூபியாக காட்சியளிப்பதையே இந்த 10 நாட்கள் விழா குறிக்கிறது.


இந்த ஒன்பது நாட்கள் தேவியின் புகழை பாடுவது மட்டும் இல்லாமல் தாம்பூலம் வழங்க வேண்டும்.

தங்கள் வீடுகளில் கல்வி, செல்வம், வீரம் தழைக்க வேண்டியும், கணவன் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள அனைவரின் நலம் போற்றியும் கொலு வைக்கும் பெண்கள், மற்றவர்களுக்கு தாம்பூலம், பிரசாதங்களை வழங்குகிறார்கள். நவராத்திரி விரதமிருப்போர் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் வாங்குவோரின் இல்லங்களிலும் தேவி குடிகொண்டிருப்பாள் என்பது ஐதீகம் என்பதால், ஒருவருகொருவர் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்கு பரஸ்பரம் சென்று பூஜைகளில் பங்கேற்று தாம்பூலம் பெற்று வருகிறார்கள். நவராத்திரி தாம்பூலத்தில் என்னென்ன பொருள்கள் கண்டிப்பாக இடம் பெரும் வேண்டும் என்பதை காணலாம்.

தாம்பூலத்தில் வெற்றிலை பாக்கு நிச்சயம் இடம் பெற வேண்டும். அவரவர் வசதியைப் பொறுத்து தாம்பூலத்தில் இருக்கும் பொருள்கள் மாறுபடும். வசதி படைத்தவர்கள் கீழ்கண்ட பொருள்களை தாம்பூலத்தில் வைக்கலாம்

1. வெற்றிலை 2. பாக்கு 3. மஞ்சள், குங்குமம், 4. சீப்பு 5. முகம் பார்க்கும் கண்ணாடி 6. வளையல் 7. மஞ்சள் கயிறு 8. தேங்காய் 9. பழம் 10. பூ 11. மருதாணி 12.கண்மை13. தட்சணை14. ரவிக்கைத்துணி அல்லது புடவை.இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு.

 • வெற்றிலை மற்றும் பாக்கில் முப்பெரும் தேவியரும் குடிக்கொண்டு இருப்பதால் தாம்பூலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 • மஞ்சள்,குங்குமம்,மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.
 • சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக,
 • கண்ணாடி, கணவனின் ஆரோக்கியம் காக்க,
 • வளையல், மன அமைதி பெற‌
 • தேங்காய், பாவம் நீங்க, ( மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது ஆனால் அதை உரிக்கும் எந்திரம் பல வீடுகளில் இல்லாத நிலையில், உரித்த தேங்காய் கொடுப்பதே நல்லது.)
 • பழம்,அன்னதானப் பலன் கிடைக்க,
 • பூ, மகிழ்ச்சி பெருக,
 • மருதாணி, நோய் வராதிருக்க,
 • கண்மை ,திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க, தட்சணை லக்ஷ்மி கடாட்சம் பெருக,
 • ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய வழங்குகிறோம்.

வசதி குறைந்தவர்களின் தாம்பூலத்தில் மேல் சொன்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதில் அவசியம் இல்லை. வெற்றிலை,பாக்கு,பூ, மஞ்சள், குங்குமம் கட்டாயம் இடம் பெற வேண்டும். தாம்பூலம் கொடுப்பதின் நோக்கமே அம்பிகையை ஆனந்தம் அடைய செய்வதே. தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாள்.அதனால் தாம்பூலம் வழங்கும் பொது பேதம் பார்க்க கூடாது. ஏழை பணக்காரன் என்ற பேதம் பார்த்தால் தேவியின் அருள் கிட்டாது .
நவராத்திரிகளில் 'கன்யாபூஜை' செய்து, சிறு பெண்குழந்தைகளுக்கு போஜனம் அளித்து, நலங்கு இட்டு, உடை, கண்மை, பொட்டு, பூ, பழத்தோடு கூடிய தாம்பூலம் அளிப்பது அளவற்ற நன்மை தரும். அவர்களுக்கு நாம் அளிக்கும் பொருட்கள், நம் மூதாதையரைத் திருப்தி செய்து, நம் சந்ததியரை வாழ்வாங்கு வாழ வைக்கும்.

தாம்பூலம் கொடுப்பவர் கிழக்குப் பார்த்து நின்று கொண்டு கொடுக்க வேண்டும்.