பெண் பொறியாளர் கற்பழித்து கொலை : 3 பேருக்கு தூக்கு தண்டனை

May 10, 2017, Chennai

Ads after article title

புனே, மே 10 (டி.என்.எஸ்) புனேவில் பெண் சாப்ட்வேர் என் ஜினியர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


புனே கட்ரஜ் பகுதியை சேர்ந்தவர் அபிஜித் புஜாரி. இவரது மனைவி நயனா புஜாரி (வயது 28). இவர் புனே காரடி பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி பணிக்கு சென்ற அவர் இரவு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் அபிஜித் புஜாரி உள்ளூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, நயனா புஜாரியை தேடிவந்தனர். இந்த நிலையில், மறுநாள் புனேயில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள ராஜ்குருநகர் பகுதியில் நயனா புஜாரி பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைக்கப்பட்டு இருந்தது. மேலும், அவரது பணப்பை, ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவை மாயமாகி இருந்தன.

பிரேத பரிசோதனையில், அவர் கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, காரடியில் அவர் பணிபுரிந்த ஐ.டி. நிறுவன பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, யோகேஷ் ராவுத் (24) என்பவரது காரில் நயனா புஜாரி ஏறிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், தனது நண்பர்கள் மகேஷ் தாக்குர் (24), விஸ்வாஷ் கதம் (26), ராஜேஷ் சவுத்ரி ஆகியோருடன் சேர்ந்து, நயனாவை காரில் கடத்திச்சென்று, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து கற்பழித்து, அவரது துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது புனே செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஒருவர் அப்ரூவராக மாறியதால், 3 பேர் மீதான குற்றங்கள் தகுந்த ஆதாரத்துடன் நிறுபிக்கப்பட்டு, அவர்கள் குற்றவாளிகள் என்று நீதிபதிகள் நேற்று முன் தினம் அறிவித்த நிலையில், அவர்களுக்கான தண்டனை குறித்து நேற்று வாதம் நடைபெற்றது.

அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும், என்று வாதிட்டார். அவரது தண்டனையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கினார்கள்.