நவராத்திரியில் அம்மனுக்கும், இரவு நேர வழிபாட்டிற்கும் ஏன் முக்கியத்துவம் அளிக்கிறோம்?

October 03, 2016, Chennai

Ads after article title

நம் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படும் மாற்றங்களை சரிசெய்து புத்துணர்ச்சி பெறுவதற்காக நவராத்திரி வழிபாடு சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.


சாரதா நவராத்திரி என்று புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி மிகவும் முக்கியமானதாகும். ஒன்பது இரவுகளும் பத்து பகல்களும் அன்னைக்கு ஒன்பது  வகையான அலங்காரம், ஒன்பது வகையான  பிரசாதம் செய்யப்பட்டு வணக்கப்படுகிறது. ஆற்றலின் வடிவமாக, செல்வத்தின் அதிபதியாக, ஞானத்தின் உருவமாக இருக்கும் பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி இம்மூன்று தேவியரையும், அவர்களின் அவதாரத்தையும் போற்றும் விதமாக விழா கொண்டாடப்படுகிறது. அன்னை என்பவள் எல்லோரையும் உருவாக்குபவள். அரவணைப்பு ஒப்பற்ற ஆற்றல் கருணை புகழ் பெருமை எல்லாம் அருளுபவள்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் பார்வதியை வழிபட்டு தம்மிடம் உள்ள அறியாமை, சோம்பேறித்தனம், மடமை ஆகியவற்றை நீக்க வேண்டுகின்றனர். வாழ்வில் தாம் செய்த குற்றங்கள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் அவை நிகழா வண்ணம் இருக்க வழிபடுகின்றனர்.

அடுத்த மூன்று நாட்களில் இலட்சுமியை வழிபட்டு அன்பு, கடமை, தன்னடக்கம், நன்னடத்தை, பொறுமை ஆகியவற்றைப் பெற வேண்டுகின்றனர். மேற்கூறியவற்றைப் பெறுவதன் மூலம் மனத் தெளிவு பெற்று வாழ்வில் முன்னேற்றம் பெறலாம்.

கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியை வழிபட்டு ஞானம், கலை, அறிவுத்திறன், தன்திறன் ஆகியவற்றைப் பெற வேண்டுகின்றனர்.

இரவு நேரங்களில் அனைவர்க்கும் சோம்பல் வெளிப்படும். இந்த நேரத்தில் அம்மனை வழிபட்டு தம்மிடம் உள்ள குறைகளை (சோம்பல்) நீக்கி வாழ்க்கையின் உயர்ந்த நிலை அடைய உறுதி கொள்ள வேண்டும் என்பதனை உணர்த்த இரவு வழிபாடு செய்யப்படுகின்றது.

 1. முதலாம் நாள் :-

           சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள். மற்றும் இவளது கோபம் தவறு செய்தவர்களை திருத்தி நல்வழிபடுத்தவே ஆகும்.

2. இரண்டாம் நாள் :-

                       இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.

3. மூன்றாம் நாள் :-

                       மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும். மற்றும் வேலையில்லாதவரிற்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவரிற்கு பதவியுயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளேயாகும்.

4. நான்காம் நாள் :-

                       சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.

5. ஐந்தாம் நாள் :-

                       ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

6. ஆறாம் நாள் :-

                       இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.

7. ஏழாம் நாள் :-

                       ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னையாகும்.

8. எட்டாம் நாள் :-

                       இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.

9. ஒன்பதாம் நாள் :-

                       இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.