தினகரன் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பார் : நாஞ்சில் சம்பத்

April 21, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.21 (டி.என்.எஸ்) ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக-வில் இருந்து விலகிய நாஞ்சித் சம்பத், பிறகு சசிகலாவின் சமரச பேச்சுவார்த்தையால், தற்போது சசிகலாவின் தீவிர விசுவாசியாக இருக்கிறார்.


சசிகலா, தினகரன் குடும்பத்திற்கு எதிராக ஒட்டுமொத்த அதிமுக-வும் அணி திரள நாஞ்சித சம்பத், தினகரன் மீண்டும் தமிழகத்தின் தலைவராக விஸ்வரூபம் எடுப்பார், என்று கூறியுள்ளார்.

பிரபல நாளிதழ் ஒன்றுக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில், “எங்களுக்கு நிபந்தனை விதிக்க ஓபிஎஸ் யார்? கட்சி, ஆட்சி எங்கள் பக்கம் இருக்கிறது. தொண்டர்களும் எங்கள் பக்கம் உள்ளனர். எங்களுக்கு அவர் நிபந்தனை விதிக்க தேவையில்லை.

பாரதிய ஜனதாவின் கைக்கூலியாக ஓ.பன்னீர் செல்வம் செயல்படுகிறார். அதனால் அவரது அணியினர் நிபந்தனை விதிக்கிறார்கள். நாங்கள் இவர்களை கண்டு கொள்ளவில்லை.

புரட்சித்தலைவி அம்மா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சமயத்திலும், அவர் மரணம் அடைந்த நேரத்திலும் ஓ.பன்னீர் செல்வம்தான் முதல்வராக இருந்தார். அப்போது அவர் ஏன் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கவில்லை. வாய்மூடி மவுனியாக இருந்தது ஏன்? அம்மா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. பதவி இருந்தால் ஒரு பேச்சு, பதவி இல்லாவிட்டால் ஒரு பேச்சா?

அ.தி.மு.க. பொதுக்குழுவால் நியமிக்கப்பட்டவர் சசிகலா. அவரை நீக்க சொல்ல பன்னீர் செல்வத்துக்கு எந்த யோக்கியதையும் இல்லை. சசிகலாவின் காலில் விழுந்தவர்தான் இந்த ஓ.பி.எஸ்.

டி.டி.வி.தினகரன் பற்றியும், ஓ.பன்னீர் செல்வம் அணியினர் விமர்சிக்கின்றனர். டி.டி.வி. தினகரன் தமிழகத்தின் தலைவராக மீண்டும் விசுவரூபம் எடுப்பார். இது தவிர்க்க முடியா தது. டி.டி.வி. தினகரன் ஒரு மகத்தான தலைவர். அவர் இல்லாத அ.தி.மு.க. நிலவு இல்லாத நீல வானம். எனவே அவரே தலைமை தாங்கி ஆட்சி அமைக்கும் காலம் விரைவில் வரும்.” என்று தெரிவித்துள்ளார்.