.

தமிழகத்தில் இன்று ஓட்டல்கள், மருந்து கடைகள் மூடப்பட்டது

May 30, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 30 (டி.என்.எஸ்) ஜி.எஸ்.டி வரி விதிப்பை கண்டித்து இன்று தமிழகத்தில் ஓட்டல்கள் மற்றும் மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளன.


இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பினை வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) முறையை அமல்படுத்தியுள்ள மத்திய ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைபடுத்த உள்ளது. 

இந்த புதிய வரி விதிப்புக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக வணிகர்கள் இந்த வரி விதிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பொதுமக்களுக்கு கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விலைவாசி உயரும் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும், இந்த வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டல்கள் இன்று அடைக்கப்படும் என்றும், சென்னையில் மட்டும் 15 ஆயிரம் ஓட்டல்கள் மூடப்படும் என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களிலும் நடைபெறும் இந்த போராட்டத்தில், தென் மாநிலங்களில் மட்டும் சுமார் 5 லட்சம் ஓட்டல்கள் மூடப்படுகிறது.

ஜூன் 3 ஆம் தேதி ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. இந்த கூட்டத்தில் நல்ல முடிவு எட்டாவிட்டால், இந்தியா முழுவதும் ஓட்டல்களை அடைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. 

இது ஒருபுறம் இருக்க ஆன்-லைன் மூலம் மருந்து பொருட்கள் விற்பனை நடைபெறுவதை கண்டித்து மருந்து கடைக்காரர்களும் இன்று கடையடைப்பு நடத்துகின்றனர். மத்திய அரசைக் கண்டித்து இன்று காலை முதல் மாலை 6 மணி வரை மருந்து கடைகள் மூடப்படுகிறது.