.

'டிராஃபிக் ராமசாமி' விமர்சனம்

June 23, 2018, Chennai

Ads after article title

விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது, மக்களுக்கு இடையூறாக சாலைகளில் இருக்கும் விளம்பர போஸ்டர்களை கிழிப்பது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சமூக போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை படமான இப்படம், அவரது வாழ்க்கையை பேசுவதை விட அவர் நடத்திய போராட்டங்கள் பற்றியும், அதனால் அவர் சந்தித்த பிரச்சினைகள் பற்றியும் அதிகமாக பேசுகிறது.


ராமசாமி என்ற பெயருடன் டிராஃபிக் என்ற பெயர் எப்படி வந்தது என்பதை எளிமையாக இப்படத்தில் சொல்லியிருக்கும் இயக்குனர் விக்கி, அவரது போராட்ட குணம் எப்போது, எதன் மூலம் தொடங்கியது என்பதையும் ரொம்பவே எளிமையாக சொல்லியிருப்பவர், அவரது தற்போதைய போராட்டங்களையும் நம் நினைவுக்கு கொண்டு வருபவர், ஆட்சியில் இருந்தவர்களை தனது வழக்கு ஒன்று மூலம் டிராஃபிக் ராமசாமி ஆட்டம் காண செய்த சம்பவம் ஒன்றை படத்தின் முக்கிய மஷமாக கையாண்டிருப்பதோடு, திரைக்கதையையும் அதனை சுற்றியே கார்த்தி இருக்கிறார்.

டிராஃபிக் ராமசாமி வேடத்தில் நடித்திருக்கும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தனக்கு எவ்வளவு நடிப்பு வருமோ அதை மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறார். டிராஃபிக் ராமசாமி வாங்கிய அடிகளையும், அனுபவித்த வளிகளையும் கதாபாத்திரமாக எஸ்.ஏ.சந்திரசேகர் திரையில் காட்டியிருந்தாலும், தனது நடிப்பால் அவற்றை ரசிகர்கள் மனதில் பதிய வைக்க தடுமாறியிருக்கிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியாக நடித்திருக்கும் ரோகிணி, சில காட்சிகளில் மட்டுமே வரும் பிரகாஸ்ராஜ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தங்களுக்கான வேலையை எந்த குறையும் இல்லாமல் செய்திருக்கிறார்கள். உண்மையான சம்பத்தை பற்றியோ அல்லது ஒருவரது வாழ்க்கை பற்றியோ படம் எடுக்கும் போது, கற்பனையாக சில விஷயங்களும் சேர்க்கப்படுவது வழக்கம் தான். ஆனால், எது கற்பனை, எது நிஜமாக இருக்கும், என்று ரசிகர்கள் எண்ணாத விதத்தில் அவற்றை கையாள்வது தான் இயக்குனரின் புத்திசாலித்தனம்.

ஆனால், இந்த படத்தின் இயக்குனர் விக்கி, இப்படத்தை கையாண்ட விதத்தை பார்த்தால் 'டிராஃபிக் ராமசாமி' யார்? என்பதையே சரியாக சொல்லாதது போல இருக்கிறது. டிராஃபிக் ராமசாமி என்றாலே போராட்டம் தான், என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால், அவரைப் பற்றி மக்கள் அறியாத விஷயத்தை அல்லது அறிய வேண்டிய விஷயத்தை சொல்லியிருந்தால் இப்படம் மக்கள் மனதில் அழுத்தமாக பதிந்திருக்கும்.

அதை விட்டுவிட்டு, விஜய் ஆட்டணியின் ஆக்ஷன், அம்பிகாவின் காமெடி, கஸ்தூரியின் கண்ணீர் என்று கமர்ஷியல் விஷயங்களை சேர்த்திருப்பது பாடத்திட்ட வேறு பாதையில் நகர்த்துகிறது. ஒன மேன் ஆர்மி என்ற புத்தகத்தை படித்துவிட்டு டிராஃபிக் ராமசாமி படத்தின் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குனர் விக்கி, புத்தகம் வேறு சினிமா வேறு என்பதை புரிந்துக்கொள்ளாமல் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மொத்தத்தில், டிராஃபிக் ராமசாமி பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், இந்த 'டிராஃபிக் ராமசாமி' படத்தை பார்க்காமல் அந்த புத்தகத்தை படித்தாலே நல்லது என்றே தோன்றுகிறது. ஜெ.சுகுமார்