சுரங்க மெட்ரோ ரயில் போக்குவரத்து : 14 ஆம் தேதி தொடங்குகிறது

May 10, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 10 (டி.என்.எஸ்) சென்னையின் முதலாவது நீண்ட தூர சுரங்க ரயில் போக்குவரத்தான திருமங்கலம் - நேரு பூங்கா இடையிலான மெட்ரோ ரயில் சேவை வரும் மே 14 ஆம் தேதி தொடங்குகிறது.


வண்ணாரப்பேட்டை - விமான நிலையம், செண்டிரல் - பரங்கிமலை என சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக, கோயம்பேடு - பரங்கிமலை, சின்னமலை - விமான நிலையம் இடையே பணிகள் முடிக்கப்பட்டு, உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான பணிகளும் வேகமாக நடந்து வந்தன. 7.63 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்தப் பாதையில், திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய 7 ரயில் நிலையங்கள் வருகின்றன.

இந்த வழித்தட பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் தனது குழுவினருடன் டிராலியில் சென்று ஆய்வு மேற்கொண்ட பிறகு, மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க அனுமதியளித்தார்.

அதன்படி, 14 ஆம் தேதி திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்க இருக்கிறது. அன்று பகல் 12 மணிக்கு திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ‘பச்சைக் கொடி’ காட்டி சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கின்றனர்.