சரஸ்வதி பூஜையில் படிப்பது நல்லதா? எதற்காக சரஸ்வதி பூஜை

October 07, 2016, Chennai

Ads after article title

படி!படி! என்று தினமும் சொல்லுகிற   நம் அம்மா 'படிக்க வேண்டாம்! உன் புத்தகத்தை எடுத்து கொலுவில் வை' என்றவாறு  சரஸ்வதி பூஜையில் சொல்வர் .


அப்பாடா நாமும் படிக்க வேண்டாம் என்று நினைத்து சந்தோசம் பட்டிருப்போம். உண்மையில் சரஸ்வதி பூஜை அன்று படிக்க கூடாதா என்று அனைவருக்கும் தோணும். சரஸ்வதி பூஜையில் அவளுடைய துதிகளை பாடுகிறோம் அதுவும் நம்முடைய கல்வியின் வெளிப்பாடு. சரஸ்வதி பூஜை என்றதுமே அன்று புத்தகம் படிக்கக்கூடாது என்று சொல்லுவது ஏற்புடையது அல்ல. பூஜையில் நம்முடைய புத்தகங்களை அன்னையின் திருவடி பாதங்களில் சமர்ப்பித்து அவளது திதிகளை பாடுகிறோம். சொல்ல போனால் அதுவும் படிப்பதற்கு சமம் தானே. நம் முன்னோர்கள் சரஸ்வதி பூஜையில் ஒருநாளாவது நூல்களைப் பராமரிக்கும் பணியாக இருக்கட்டும் ஓலைகளை பாதுகாக்கும் பணியாக இருக்கட்டும் என்று சரஸ்வதி பூஜையில் அந்தக் கடமையை இணைத்தார்கள். அதுவே காலப்போக்கில் சரஸ்வதி பூஜையில் படிக்ககூடாது என்று பிறந்துள்ளது. உண்மையில் சொல்ல போனால் பூஜையில் வைக்காத புத்தகத்தை எடுத்து படிக்கலாம்.

நாம் சரஸ்வதி பூஜையின் போது  பல தேவியின்   படங்கள்  அதைத்தவிர கொலுப்படியில் பொம்மைகள் என்று வைத்திருப்போம்   தவிர தம்பூரா,  வீணை, வயலின்  ஹார்மோனியம் என்றும்  வைத்திருப்போம்  இதன் மேல் புத்தகங்கள்  அடுக்க்ப்பட்டிருக்கும்  ,அப்போது    படிக்க எடுத்தால்  ஏதாவது   கலைந்து  விழவோ  உடையவோ வாய்ப்பு ஏற்படலாம்  கீழே இருக்கும் புத்தகம்  எடுக்க மிக ஜாக்கிரதை  வேண்டும்   அதனால் இந்தப் பழக்கம்   ஏற்பட்டிருக்கலாம் . தவிர ஒரு பூஜை என்று  செய்தால்  அதற்கு  புனர்பூஜை  செய்துமுடிக்கும் பழக்கம் எப்போதும்  உண்டு. ஒன்பது நாட்களும் கொலுபூஜை செய்து பத்தாம் நாளின் இறுதியில் தான் கொலுவை எடுப்போம். அது போல சரஸ்வதி பூஜையில் புத்தகங்களை வைக்கும் நாம் அதற்கு அடுத்த நாளில் மட்டுமே அதனை எடுக்க வேண்டும். ,அதனால் முன்னோர்கள் இதை  அனுசரித்து இருப்பார்கள் என்று  தோன்றுகிறது.

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களில் ஞானம்,கலை,அறிவுத்திறன்ஆகியவற்றைப் பெற சரஸ்வதியின் அருள் கிடைக்க  பூஜை செய்கிறோம். கலை மகள்!கலையரசி! கலைகளின் அதிபதியான அவள் வெள்ளைத்தாமரையில் குடிக்கொண்டு இருப்பவள். சரஸ்' என்றால் "பொய்கை' . "வதி' என்றால் "வாழ்பவள்'. சரஸ்வதி என்றால் மனம் என்னும் பொய்கையில் வாழ்பவள் என்பது பொருள். சரஸ்வதி பூஜையில் புத்தகங்கள், எழுதுகோல்கள் இதர கல்வி உபகரணங்கள், பயிற்சிகளுக்கான சாதனங்கள் கலைப்படைப்புகள் கருவிகள் , தொழிலுக்கு உரிய ஆயுதங்கள் இயந்திரங்கள் ஆகியவற்றை சுத்தப்படுத்தி சந்தனம் தெளித்து மஞ்சள் குங்குமம் வைத்துத் தூப தீபம் காட்டி வழிபட வேண்டும். சரஸ்வதி தேவியை வெண்தாமரை மலர்களை சூட்டி, வாழை இலையை வைத்து அதில் பொறிகடலை, அவல், நாட்டுசர்க்கரை, பழங்களை வைத்து பூஜை செய்கின்றோம். அத்துடன்  கலைமகள் குடிகொண்டிருக்கும் புத்தகங்களை வைத்தும் பூஜை செய்கின்றோம்.

பூஜை முடியும் போது ஆயுதங்களுக்கும் இயந்திரங்களுக்கும் எலுமிச்சம் பழங்களைச் சுற்றி அறுத்துக் குங்குமம் தடவிப் பிழிவது, கற்பூரம் ஏற்றப்பட்ட தேங்காயையும் குங்குமம் திணிக்கப்பட்ட திருஷ்டிப் பூசணிக்காயையும் சுற்றி வாயிலில் போட்டு உடைப்பது போன்ற திருஷ்டிக் கழிப்புகளையும் தவறாமல் செய்ய வேண்டும்.