சனியின் பார்வையில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகள்

September 12, 2016, Chennai

Ads after article title

நவகிரகங்களில்  நாம் அதிகமாக பயப்படுவது சனியை கண்டு தான். சனி நம்மை பிடித்து விட்டால் அவ்வளவு தான் ஒரு படாத பாடு படுத்தாமல் ஓய மாட்டன்.


அந்த ஏழரை ஆண்டு சனி மிகவும் கொடுமையானது , அவரின் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாது ஆனால் சனியின் வீரியத்தை குறைக்க முடியும். சனியின் பார்வையில் இருந்து தேவர்கள், விண்ணுலகவாசிகள், ஹரி, சிவன், பிரம்மா என எவரும் தப்பித்தது இல்லை ஆனால் விநாயகரை தவிர. ஆம் சனியின் பார்வையில் இருந்து தப்பித்தவர் விநாயகர் மட்டும் தான்.

ஒரு சமயம் சனி பகவான் விநாயகப் பெருமானிடம் சென்றார். ‘‘ஆனைமுகக் கடவுளே! நான் உங்களைப் பிடிக்க வேண்டும். இப்போது  பிடிக்கப் போகிறேன்’’ என்றார். அதற்கு விநாயகர், ‘‘இப்போது வேண்டாம். நாளை வந்து பிடித்துக்கொள்! நீயே அதை, வேண்டுமானால் என் முதுகில் எழுதிவிட்டுப் போ!’’ என்றார். சனிபகவானும் விநாயகரின் முதுகில், ‘‘நாளை வந்து பிடித்துக் கொள்!’’ என எழுதிவிட்டுச் சென்றார். மறுநாள் சனிபகவான் விநாயகரிடம் வர, விநாயகர் முதுகைத் திருப்பிக் காட்டினார். அங்கே, அவர் எழுதிய ‘‘நாளை வந்து பிடித்துக் கொள்!’’ என்பது  அவர் பார்வையில் பட்டது.அப்புறம் என்ன, நாளை, நாளை என்று, சனிபகவானின் எண்ணம் பலிக்காமலே போனது. இங்கே வென்றது, அமைதியான விநாயகரின் அறிவாற்றல்.

சனியின் பார்வை தன் மீது பட்ட போதும், சனியை ஆட்டி படைத்தவர் அனுமன். இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது வந்தார் சனி பகவான். ‘‘ஆஞ்சநேயா!

உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்’’ என்றார். ‘‘கடமையை செய்துகொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்துகொள்’’ என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார்.

கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம் தாங்காமல் சனி பகவான் அலறினார். ‘‘சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்துதான் இறங்க வேண்டும்’’ என்றார் அனுமன். அதன் பிறகே இறக்கிவிட்டார். ‘ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை’ என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.

சனியின் பார்வையில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகள்:

1. சனி பகவான் அனுமான், ராமர், விநாயகர் பக்த்தர்களை ஒரு போதும் அணுக மாட்டார். சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழு மலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபட்டால் சனியால் துன்பம் ஏதும் ஏற்படாது.
2. சனிக்கிழமைகளில் விரதமிருந்து கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றவும்.
3. சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்யவும்.
4. ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும்.
5.கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை வைத்திருத்தல் நல்லது. நீலக்கல் மோதிரம் அணிவதும் நல்லது.
6. ஒருபோதும் நம் வாயில் இருந்து சனியனே! என்று யாரையும் திட்ட கூடாது . அதுவும் சனிக்கிழமைகளில் திட்டினால் சனி நம்மை வந்து பிடித்து கொள்வான்.
7. சனி பகவானுக்கு மிகவும் பிடித்த உணவு எள். அவர் பயணிக்கும் வாகனம் காகம். அதனால் சனி கிழமைகளில் காகத்திற்கு எள் சாதம் வைத்தால் சனி பகவானின் அருள் கிட்டும். அவன் நமக்கு துன்பங்களை கொடுக்க மாட்டன்

திருநள்ளாறில் இருக்கும் நள தீர்த்தத்தில், நல்லெண்ணெய் தேய்த்து நீராட, சனிபகவானை சனிக்கிழமைகளில் வழிபட்டால் சனிபகவானுடைய பாதிப்புகள் நீங்கி நலம் பல உண்டாகும். அவருடைய பிரசாதமாக எள் உருண்டை எள் சாதத்தை ஏழைகளுக்கு வழங்கலாம்.