சசிகலாவை பதவியில் இருந்து நீக்க முடியாது : தம்பிதுரை

May 13, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 13 (டி.என்.எஸ்) சசிகலாவை அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க முடியாது, என்று தம்பிதுரை கூறியுள்ளார்.


எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக அணிகள் இணைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், என்று ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு, தங்களது நிபந்தனைகளை ஏற்றால்தான் பேச்சுவார்த்தை, என்றும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பொதுக்குழு மூலமாக சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், தனிப்பட்ட மனிதரால் அவரை நீக்க முடியாது, என்று பாரளுமன்ற துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை கூறியுள்ளார்.

இது குறித்து நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய தம்பிதுரை, “அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்து எடுத்தது பொதுக்குழு தான். அந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் உள்பட எல்லோரும் கையெழுத்து போட்டு உள்ளனர். அதன்பிறகு தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பொதுக்குழு எடுத்த முடிவை தம்பிதுரை, எடப்பாடி, பன்னீர்செல்வம் போன்ற தனிப்பட்ட நபர் எப்படி மாற்ற முடியும்? சசிகலா பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டதால், அவரை தனிப்பட்ட முறையில் நீக்க முடியாது.

எனவே எந்த பிரச்சினை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்துவது மூலம்தான் தீர்வு காண முடியுமே தவிர, ஏதோ சில கருத்துக்களை மனதில் வைத்து பேசினால் சரி வராது. நேரிடையாக விவாதிக்க வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒற்றுமை உணர்வுடன் செயல்பட காத்திருக்கிறோம். சசிகலாவும், தினகரனும் சிறையில் இருப்பதால் கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி பழனிசாமி வழி நடத்திக்கொண்டு இருக்கிறார். எதுவும் முடங்கவில்லை, செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.” என்று தெரிவித்தார்.