கொலுவின் ஒன்பது படிகளில் என்னென்ன பொம்மைகளை வைக்கலாம். அதன் தத்துவம்

September 29, 2016, Chennai

Ads after article title

நவராத்திரி என்றால் சக்தியின் புகழை பாடும் உன்னதமான விழா. பண்டை காலம் தொட்டு இந்த காலம் வரை கொலு வைப்பது காலம் காலமாக கொண்டாட படுகின்றது.


நவ ( ஒன்பது), ஒன்பது நாட்கள் கொலு வைத்து தேவியை சிறப்பிக்கின்றோம். இந்த ஆண்டு வரும் 2 ம் தியதி முதல்10 ம் தியதி வரை நவராத்திரியை கொண்டாட உள்ளோம். கொலு பொம்மைகள் ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் இடம் பெற்றிருக்க வேண்டும். மனிதன் தன் எண்ணம், செயல்களால் மேலும் உயர்ந்து இறை நிலையை அடைய வேண்டும் என்பதையும் கொலு பொம்மைகள் நினைவுறுத்துகின்றன. இந்த உயர்வை படிகளின் மூலம் விளக்குவதே நவராத்திரியின் முக்கிய பங்கு. அவரவர் விருப்பத்திற் கேற்ப படிகளை அமைக்கலாம். அவை ஒற்றை படையில் அமைத்திருக்க வேண்டும்.  உதாரணமாக ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, மற்றும் ஒன்பது என அமைய வேண்டும்.

ஒன்றாம் படி

ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகளைப் படி ஒன்றில் வைக்க வேண்டும். இது தவிர பொதுவாக, கொலு வைக்கும் இல்லங்களில் படிகளுக்குக் கீழே பூங்கா அமைப்பது உண்டு.

இரண்டாம் படி

ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளை வைக்கலாம். அந்தக் காலத்தில் திண்ணைகளில் அமர்ந்து சோழி உருட்டி விளையாடுவது வழக்கம். இந்தச் சோழிகளையும், சோழிகளால் செய்யப்பட்ட பொம்மைகளையும் இரண்டாம் படியில் வைக்கலாம்.

மூன்றாம் படி

மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு, சிறு பூச்சிகள், மண் புழு ஆகியவற்றின் பொம்மைகளை மூன்றாம் படியில் வைக்கவேண்டும்.

நான்காம் படி

நான்கறிவு உயிர்களான நண்டு, வண்டு, பட்டாம்பூச்சி ஆகியவற்றின் பொம்மைகளை வைப்பது சிறப்பு.

ஐந்தாம் படி

ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகளை அழகுற வைக்கலாம்.

ஆறாம் படி

ஆறறிவு மனிதர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். தலைவர்கள், சாதனையாளர்கள் ஆகியோரின் உருவங்களை வைத்தால், இல்லத்துக்கு வரும் விருந்தாளிகள் அச்சிலைகளில் உள்ளவர் களின் சாதனைகளை நினைவுகூர முடியும்.

ஏழாம் படி

மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள் ஆகியோரை வைக்க வேண்டும். ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமணர், வள்ளலார் ஆகியோரின் பொம்மைகளை வைக்கலாம்.

எட்டாம் படி

தேவர்கள், அஷ்டதிக் பாலகர்கள், நவகிரக அதிபதி கள், இந்திரன், சந்திரன் ஆகிய தெய்வ உருவங்களை மண் பொம்மைகளாக வைக்கலாம்.

ஒன்பதாம் படி

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தேவியருடன் அமர்ந்திருக்கும் சிலைகளை இந்த உச்சிப் படியில் வைக்க வேண்டும். இவற்றின் நடுவில் ஆதி பராசக்தி இருக்குமாறு அமைக்க வேண்டும். இங்கே பூரண கும்பத்தை வைத்து நிறைவு செய்யலாம்.