கர்ப்பமான செரீனா வில்லியம்ஸ் : டென்னிஸுக்கு ஓய்வு

April 21, 2017, Chennai

Ads after article title

வாஷிங்டன், ஏப்.21 (டி.என்.எஸ்) உலக டென்னிஸ் தரவரிசையில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2 ம் இடத்தில் உள்ள அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமாக உள்ளதால், இந்த ஆண்டு முழுவதும் டென்னிஸ் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


35 வயதான செரீனா வில்லியம்சும் அமெரிக்க தொழிலதிபர் அலெக்சிஸ் ஓஹானியனும் காதலித்து, டிசம்பர் மாதம் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபனில் 7-வது முறையாக மகுடம் சூடிய செரீனா வில்லியம்ஸ் அதன் பிறகு எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. கால்முட்டி காயத்தால் ஒதுங்கி இருப்பதாக கூறிய அவர் ஒஹானியனுடன் நேரத்தை செலவிட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் வயிறு சற்று பெருத்து இருப்பது போன்ற தனது புகைப்படத்தை வெளியிட்ட செரீனா அதில் 20 வாரங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் பரவியது. உடனே அந்த படத்தை செரீனா நீக்கிவிட்டார்.

இதற்கிடையே, செரீனா கர்ப்பமாக இருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் கெல்லி புஷ் நோவக் உறுதி செய்துள்ளார். இதனால் இந்த ஆண்டு முழுவதும் செரீனா விளையாட முடியாது. 

தாயாகப் போகும் செரீனாவுக்கு சக வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். “நீங்கள் ஒரு அற்புதமான அம்மாவாக இருப்பீர்கள். உடல் நலத்தோடு இந்த பயணம் மகிழ்ச்சிகரமாக அமைய வாழ்த்துகள்” என்று முதலிடத்தில் உள்ள ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் கூறியுள்ளார்.